63 லட்ச ரூபாய்க்கு வந்துவிட்டது, முற்றிலும் புதிய 2018 ஆடி Q5!
Posted Date : 17:08 (25/01/2018)
Last Updated : 17:13 (25/01/2018)


ஆடி இந்தியா நிறுவனம், தனது புதிய இரண்டாம் தலைமுறை Q5 எஸ்யூவியை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டில் முதல் தலைமுறை Q5 களமிறங்கிய நிலையில், 7 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது முற்றிலும் புதிய இரண்டாம் தலைமுறை Q5 வெளிவந்துள்ளது. லக்ஸூரி எஸ்யூவி செக்மென்ட்டில், ஆடிக்கு அதிக விற்பனையைத் தரும் Q5, தற்போது புதிய வெளிப்புற மற்றும் உட்புற வடிவமைப்பைக் கொண்டுள்ளது. புதிய Q7 தயாரிக்கப்படும் அதே MLB EVO ப்ளாட்ஃபார்மில்தான் Q5 எஸ்யூவியும் கட்டமைக்கப்பட்டுள்ளதால், அதன் தாக்கத்தை இங்கே உணர முடிகிறது.
 
 
 
 
மேலும் முந்தைய மாடலை விட 90 கிலோ எடை குறைவு - 8% அதிக பவர் - 20% அதிக மைலேஜ் எனப் புதிய Q5 டெக்னிக்கல் விபரங்களிலும் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. காரின் முன்பகுதியில் இருக்கும் பம்பரை, முன்பைவிட ஸ்போர்ட்டியாக டிசைன் செய்துள்ளது ஆடி. முந்தைய மாடலில் DRL லேசர் ஹெட்லைட் இருந்த நிலையில், புதிய Q5 எஸ்யூவியில் மேட்ரிக்ஸ் LED ஹெட்லைட்ஸ் பொருத்தப்பட்டுள்ளன. இதனுடன் அதிக வேகங்களில் காரை ஓட்டுனரின் கட்டுப்பாட்டில் வைத்துகொள்வதற்கு, பின்பக்க பம்பரில் இருக்கும் டிஃப்யூசரும் - காரின் டெயில் கேட்டில் உள்ள ரூஃப் ஸ்பாய்லரும் உதவுகின்றன. 
 

5 சீட்டர் எஸ்யூவியான இதில், 510 லிட்டர் பூட் ஸ்பேஸ் இருக்கின்றது. காரின் உட்புறத்தில் இருக்கும் டூயல் டோன் ஃப்னிஷ், 8.3 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12.3 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகிய மாடர்ன் வசதிகள் உள்ளன. மேலும் சொகுசு கார்களில் காணப்படும் வசதிகளான ஆப்பிள் கார் ப்ளே, ஆண்ட்ராய்ட் ஆட்டோ, சாட்டிலைட் நேவிகேஷன், கிளைமேட் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், மோட்டார் உதவியுடன் பட்டன் மூலம் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சீட்டுகள், தரமான லெதர் வேலைபாடுகள் என எல்லாமே உள்ளன.
 
 
 
 
கூடுதலாக வயர்லெஸ் சார்ஜிங், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, மேடுகளில் காரை நிறுத்த உதவும் ஹில் ஹோல்ட் அசிஸ்ட், டயர் ப்ரஷர் மானிட்டர் வசதியும் உண்டு. ஆக சொகுசு வசதிகள் மட்டுமல்லாமல், பாதுகாப்பு அம்சங்களுக்கும் குறைவைக்காமல் Q5 எஸ்யூவியில் 8 காற்றுப்பைகளை அளித்துள்ளது ஆடி. சர்வதேச Euro NCAP அமைப்பு நடத்திய க்ராஷ் டெஸ்டில், இந்த கார் 5 ஸ்டார் ரேட்டிங்கை வாங்கியது குறிப்பிடத்தக்கது. 
 

புதிய Q5 எஸ்யூவியில் இருப்பது, 190bhp பவர் - 40kgm டார்க்கை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் TDI டீசல் இன்ஜின் - 7 ஸ்பீடு S-Tronic ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கூட்டணி இடம்பெற்றுள்ளது. இதனால் 0-100 கிமீ வேகத்தை 7.9 விநாடிகளில் எட்டிப்பிடிப்பதுடன், அதிகபட்சமாக 218 கிமீ வேகம் செல்லக்கூடிய திறனைக் கொண்டிருக்கிறது ஆடி Q5. மேலும் இந்த எஸ்யூவியை, சாலையில் மட்டுமல்லாமல் மலை மேடுகளிலும் பள்ளங்களிலும் ஓட்டிச் செல்வதற்கு ஏதுவாக, Quattro ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் Hill Descent கன்ட்ரோல் வசதியும் உள்ளது.
 
 
 
 
தற்போது விற்பனைக்கு வந்துள்ள 2018 ஆடி Q5, மெர்சிடீஸ் பென்ஸ் GLC - லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் - பிஎம்டபிள்யூ X3 - வால்வோ XC60 ஆகிய லக்ஸூரி எஸ்யூவிகளுடன் போட்டிபோடுகிறது. பிரீமியம் ப்ளஸ் மற்றும் டெக்னாலஜி எனும் 2 வேரியன்ட்களில் கிடைக்கும் இந்த எஸ்யூவியின் சென்னை ஆன்ரோடு விலை, 63 லட்ச ரூபாய் மற்றும் 68 லட்ச ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 

 - ரஞ்சித் ரூஸோ.
 
 
TAGS :   AUDI Q5, INDIA, GERMANY, LUXURY SUV, MERCEDES BENZ GLC, LANDROVER DISCOVERY SPORT, BMW X3, VOLVO XC60, MLB EVO PLATFORM, Q7, DIESEL, TDI ENGINE, S-TRONIC, AUTOMATIC GEARBOX.