RE க்ளாஸிக் 350 பைக்குக்குப் போட்டியாக, மஹிந்திரா மோஜோ UT 300 !
Posted Date : 11:00 (29/01/2018)
Last Updated : 11:16 (29/01/2018)

 

மஹிந்திரா மோஜோ... 5 ஆண்டுகால டெஸ்ட்டிங்கின் விளைவாக, கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் விற்பனைக்கு வந்த ஸ்போர்ட்ஸ் டூரர் வகையிலான நேக்கட் பைக். மாடர்ன் USD ஃபோர்க் - உலகளவில் பிரபலமான பைரலி டயர்கள் - அதிர்வுகளின்றி இயங்கும் 292சிசி இன்ஜின் - வித்தியாசமான டிசைன் எனப் ப்ளஸ் பாயின்ட்களைக் கொண்டிருந்தாலும், மிகவும் குறைவான டீலர் நெட்வொர்க் - சுமாரான ஓட்டுதல் அனுபவம் - ஏபிஎஸ் இல்லாதது - கொஞ்சம் அதிக விலை என மைனஸ் பாயின்ட்களையும் கொண்டிருந்தது.
 
 
 
 
இதன் விளைவாகவே, இதுவரை தனது விற்பனையில் பலத்த ஏற்ற இறக்கங்களையே மோஜோ பெற்றுவந்திருக்கிறது. இதனைக் களையும் விதமாக, பல்வேறு ஆக்ஸசரிகளை உள்ளடக்கிய டூரர் எடிஷன் பைக்கை, கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் களமிறக்கியது மஹிந்திரா. என்றாலும், அந்த ஆண்டின் இறுதியில் வெளிவந்த பஜாஜ் டொமினார் D400 பைக்கின் வரவால், தனது இடத்தை மோஜோ முற்றிலுமாக இழந்துவிட்டது என்பதே நிதர்சனம். 
 

 
 
எனவே தற்போது பிரபலமாகி வரும் ஸ்போர்ட்ஸ் டூரர் / பவர் க்ரூஸர் செக்மென்ட்டை மனதில்வைத்து, விலை குறைவான மோஜோ UT300 எனும் பைக்கைக் களமிறக்க முடிவு செய்துள்ளது மஹிந்திரா. இதற்கு Universal Tourer 300 எனப் பெயர் சூட்டப்பட்டிருக்கும் நிலையில், வழக்கமான மாடலை XT300 (Xtreme Tourer 300) என இந்நிறுவனம் பெயர் மாற்றம் செய்திருக்கிறது. மோஜோ UT300 பைக்கின் புக்கிங் தொடங்கிவிட்ட நிலையில், இதனை வாங்க விரும்புபவர்கள், 5000 ரூபாய் செலுத்தி, மஹிந்திரா டூ-வீலர் டீலர்களில் பைக்கை புக் செய்துகொள்ளலாம்.
 
 
 
 
இந்த பைக்கும், கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக டெஸ்ட்டிங்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மோஜோ UT300 பைக்கினால், பஜாஜ் டொமினார் D400, ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு / ஹிமாலயன், கேடிஎம் டியூக் 200 / 250, பெனெல்லி TNT 25, டிவிஎஸ் அப்பாச்சி RR 310 ஆகிய பைக்குகளுக்கு கடும் சவால் அளிக்கும் முடிவில் மஹிந்திரா இருக்கிறது. அதற்கேற்ப ஸ்பை படங்களைப் பார்க்கும்போது, பட்ஜெட் மோஜோவில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள் தெளிவாகத் தெரிகின்றன. 
 

 
 
மாடர்ன் USD ஃபோர்க்குக்குப் பதிலாக பட்ஜெட் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பைரலி டயர்களுக்குப் பதிலாக MRF டயர்கள், சீராக இயங்கும் ஃப்யூல் இன்ஜெக்ஷனுக்குப் பதிலாக வழக்கமான கார்புரேட்டர், கனமான இரட்டை எக்ஸாஸ்ட்டுக்குப் பதிலாக எடை குறைவான ஒற்றை எக்ஸாஸ்ட் என விலைக் குறைப்பு மற்றும் எடைக் குறைப்பு நடவடிக்கைகளில் மஹிந்திரா நிறுவனம் சாமர்த்தியமாகச் செயல்பட்டிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. மேலும் தற்போது விற்பனை செய்யப்படும் மோஜோவில் (2.01 லட்சம் - சென்னை ஆன் ரோடு விலை) இருக்கக்கூடிய தங்க நிற வேலைப்பாடுகள் மற்றும் ஹெட்லைட்டில் இருந்த LED DRL ஆகியவை, இந்த மோஜோ UT300 பைக்கில் காணாமல் போயிருக்கிறது.
 
 
 
 
இப்படி கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதால், பைக்கின் பர்ஃபாமென்ஸ் மற்றும் ஓட்டுதல் அனுபவத்தில் என்ன விளைவை இவை ஏற்படுத்தும் என்பது, பைக்கை ஓட்டிப் பார்க்கும்போதுதான் தெரியும். பிரீமியம் அம்சங்கள் இல்லாததால், மோஜோ UT300 பைக்கின் விலை, எப்படியும் 30 ஆயிரம் ரூபாயாவது குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பைக்கை, 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் மஹிந்திரா, தனது கார்களுடன் காட்சிபடுத்துவதற்கான சாத்தியங்களும் அதிகமாக இருக்கிறது.  
 

 - ராகுல் சிவகுரு.
 
 
 
TAGS :   MAHINDRA MOJO, INDIA, ROYAL ENFIELD, CLASSIC 350, SPORTS TOURER, VINTAGE, UT 300, XT 300, MRF, PIRELLI, USD, TELESCOPIC, LED DRL, CARBURETOR, SINGLE EXHAUST, PETROL, BAJAJ DOMINAR D400.