இந்தியாவுக்கு கியா மோட்டார்ஸின் முதல் கார், ஒரு எஸ்யூவி...!
Posted Date : 21:28 (31/01/2018)
Last Updated : 21:34 (31/01/2018)


 

 

தென் கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாயின் குழும நிறுவனங்களுள் ஒன்றான கியா மோட்டார்ஸ், இந்தியாவில் தனது தயாரிப்புகளை அறிமுகப்படுத்தப் போவதாகக் கூறியதில் இருந்து, இந்நிறுவனம் எந்தெந்த கார்களை எல்லாம் இந்திய சந்தைக்குக் கொண்டுவரப்போகிறது என்பது பற்றி, தினம்தினம் புதிதாக ஒரு செய்தி வந்தவண்ணம் உள்ளன. இச்செய்திகளுக்கு முடிவுகட்டும் விதமாக, '' இந்தியாவுக்கு எங்களின் முதல் கார் இதுதான் '' என்பதைப் பறைசாற்றும் படியான டீசர் படங்களை, கியா மோட்டார்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது. அதில் SP என்று பெயரிடப்பட்டிருக்கும் வாகனம், ஒரு எஸ்யூவி ஆகும்.
 
 
 
 
படத்தில் கார் கொஞ்சம் இருட்டில் உள்ளதைப் போலத் தெரிந்தாலும், அதன் ஷார்ப்பான டிசைன் - ஆஜானுபாகுவான பாடி லைன் - சாய்ந்து இருப்பதைப் போன்ற c-pillar மற்றும் ரூஃப் - காரின் முன்பக்கம் மற்றும் பின்பக்கத்தில் இருக்கும் LED லைட்ஸ், தடிமனான வீல் ஆர்ச், டைமண்ட் கட் அலாய் வீல், காரின் கலருக்கு முரணான கலரில் ரூஃப் என டீசர் படத்திலேயே கணிசமான அம்சங்களை அசத்தலாகக் காண்பித்திருக்கிறது கியா மோட்டார்ஸ். '' இந்திய பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு, நவீனமான பாணியில் டிசைன் செய்யப்பட்டிருக்கும் எஸ்யூவி '' என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

 
 
கியாவின் இந்த SP எஸ்யூவி கான்செப்ட், அடுத்தவராம் துவங்கவிருக்கும் 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது என்பது ப்ளஸ். ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அனந்தபுரியில், 536 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலை, தற்போது வேகமாக உருவாகிக்கொண்டிருக்கிறது. 2019-ம் ஆண்டின் பிற்பாதியில் இந்த எஸ்யூவி விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நமக்குக் கிடைத்த சில தகவல்களின்படி, இதை முற்றிலும் புதிய ப்ளாட்ஃபார்மில் உருவாக்க உள்ளது கியா மோட்டார்ஸ். இதில் பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு உட்பட்ட புதிய 1.5 லிட்டர் டீசல் இன்ஜினும், ஹைபிரிட் ஆப்ஷனுடன் கூடிய 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜினும் -
 
 
 
 
அதற்கு ஏற்றபடியான 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் கூட்டணியும் பொருத்தப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம்! முற்றிலும் புதிய க்ரெட்டா எஸ்யூவியை, இதே ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கும் முடிவில் ஹூண்டாய் இருக்கிறது. எனவே எதிர்காலத்தில் இதே இன்ஜின் - கியர்பாக்ஸ் அமைப்பு மற்றும் 5/7 சீட் ஆப்ஷன்களும் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ரெனோ டஸ்ட்டர், மாருதி சுஸூகி எஸ்-க்ராஸ் ஆகிய கார்களுக்குப் போட்டியாக, இந்த SP எஸ்யூவியை பொசிஷன் செய்திருக்கிறது கியா மோட்டார்ஸ். இந்தக் காருடன் சேர்ந்து மொத்தம் 16 கார்களை, 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்நிறுவனம் காட்சிப்படுத்த உள்ளது!
 
 
 

 - ரஞ்சித் ரூஸோ.
 
 
TAGS :   KIA MOTORS, INDIA, SOUTH KOREA, HYUNDAI, CHENNAI, ANDHRA PRASESH, CAR PLANT, SP CONCEPT, 2018 DELHI AUTO EXPO, 16 MODELS, HYUNDAI CRETA, RENAULT DUSTER, MARUTI SUZUKI S-CROSS, DIESL, PETROL, HYBRID, 6 SPEED GEARBOX, MT, AT, LED.