''கார் வாங்க ஷோரூமுக்கு போகத் தேவையில்லை, ஷோரூமே உங்களைத் தேடி வரும்'' - மஹிந்திராவின் அதிரடி திட்டம்!
Posted Date : 12:59 (01/02/2018)
Last Updated : 13:17 (01/02/2018)

 

இந்தியாவில் வெளிவருவதற்கு, வரிசையில் பல மஹிந்திரா கார்கள் அணிவகுத்து நின்றுகொண்டிருந்தாலும், இந்நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியிருப்பது ஒரு புதிய சேவையை. 'இனி எங்கள் கார்களை வாங்க, எங்கள் ஷோரூமுக்கு நீங்கள் வரத் தேவையில்லை. நாங்களே உங்கள் வீட்டுக்கு நேரடியாக வருகிறோம். ஏனெனில் இந்தியாவில் ஒருவர் புதிதாகக் கார் வாங்கும்போது, அதில் அதிக ஆதிக்கம் செலுத்துவது அவர்களின் குடும்பம்தான். அதனால்தான் நாங்கள் இப்போது வீட்டுக்கே ஷோரூமை கொண்டுவந்துவிட்டோம்' என்று தங்களின் புதிய சேவையை விவரித்தார், மஹிந்திராவின் சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவுத் தலைவரான விஜய் நக்ரா. 
 
 
 

SYOUV எனும் இந்த புதிய சேவையில் - கார்களை இணையத்தில் புக்செய்வது, இணையத்திலேயே காருக்கான தொகையைச் செலுத்துவது, தேவைக்கேற்ப காரின் உட்புறம் மற்றும் நிறத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்வது, முன்பதிவு செய்த கார் குறித்த அப்டேட் மற்றும் சர்வீஸ் பற்றிய விபரங்கள் என அனைத்தையுமே இணையத்தில் பார்க்க முடியும் என்பது ப்ளஸ். இதனால் ஒருவர் இருக்கும் இடத்திலிருந்தே, தனக்கான காரைப் பார்த்து முடிவெடுத்து வாங்கிவிடலாம் என்கிறது மஹிந்திரா. இச்சேவையின்படி, காரை வாங்கும் முன்பும் வாங்கிய பிறகும், ஒளிவுமறைவில்லாத முழுசுதந்திரத்தை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கவுள்ளதாக இந்நிறுவனம் கூறியுள்ளது. 
 

 
 
மேலும் வாடிக்கையாளர் காரை வாங்கும் முன்பு, அருகில் உள்ள டீலரிடம் ஸ்டாக் உள்ளதா என்பதையும், எப்போது ஸ்டாக் வரும் என்பதையும், இந்த புதிய சேவையின் மூலம் பார்க்கமுடியும். தவிர நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரோடு சேர்ந்து, உங்கள் காரின் உட்புற வேலைப்பாடு மற்றும் நிறம் போன்றவற்றை வீட்டிலிருந்தபடியே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். மேலும் உங்களுக்கு விருப்பமான காரை, அதே இணையச் சேவையில் மற்ற காரின் புகைப்படங்களோடும் ஒப்பிட்டுப் பார்க்கலாம் என்பதுடன், மஹிந்திரா நிறுவனத்தாரிடம் ஆன்லைன் மெஸேஜ் மூலமும் வீடியோ சேட் மூலமும் பேசலாம். இதனுடன் காருக்கான கடன் வசதி - காப்பீடு போன்றவற்றை, எந்தெந்த வங்கிகள் எவ்வளவு விலையில்/வட்டியில் தருகின்றன என்பதையும் பார்த்து முடிவெடுக்க முடியும். 
 

 
 
எனவெ காரை ஓட்டிப்பார்க்க வேண்டுமென்றால், இணையதளத்தில் அதற்கான நேரத்தை குறிப்பிட்டுவிட்டு, கூகுள் மேப் மூலம் டெஸ்ட் ரைடுக்கான கார் எங்கு உள்ளது எப்போது வரும் என்பதையும் பார்த்துக்கொள்ளலாம். காரை மட்டுமல்லாமல், காருக்கான ஆக்சஸரீஸையும் சேர்த்து முன்பதிவு செய்து வாங்கிக்கொள்ளலாம் என்கிறது மஹிந்திரா. இச்சேவைகளின் ஒரு பகுதியாக, ஷோரூமுக்கு போகாமல் விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பம் வாயிலாக, கார் ஷோரூமை கண்ணுக்கு அருகில் கொண்டுவந்து இந்நிறுவனம் நிறுத்துகிறது. காரை வாங்கிய பிறகு வழங்கப்படும் எப்போதும் உங்களுடன் (With You Hamesha) சேவையில்,
 
 
 
 
 
 
காரின் சர்வீஸை bookmyshow போன்ற இணையதளத்திலேயே புக் செய்து, ஜாப் கார்டு மற்றும் சர்வீஸ் விலையையும் அப்போதே பெற்றுக் கொள்ளலாம். கூடுதல் வாரன்ட்டி, சர்வீஸ் நேரம், காப்பீட்டைப் புதுப்பித்தல் போன்றவற்றுக்கு Reminder SMS அனுப்புதல். மஹிந்திராவின் ரிலேஷன்ஷிப் மேனேஜருக்கு வீடியோ கால் அல்லது மெஸேஜ் மூலம் காரின் சர்வீஸ் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ளும் வசதி, சர்வீஸ் செய்வதற்கான பணத்தை கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி ஆன்லைனிலேயே செலுத்தும் வசதிகளையும் வழங்குகிறது மஹிந்திரா. 

ஆக அமேசான் போல எல்லாத்தையும் இணையத்துக்கு கொண்டுவந்துட்டாங்க... ஒருவேளை கிரேட் இந்தியன் சேல் எல்லாம் போடுவாங்களோ!

 - ரஞ்சித் ரூஸோ.
 
 
TAGS :   MAHINDRA, SYOUV, CAR SHOWROOM, SUV, BOOKING, SERVICE, ACCESSORIES, JOB CARD, CHARGES, DISCOUNT, INTERIOR, COLOUR, VIRTUAL REALITY, FAMILY, TESTDRIVE.