ஃப்ரிஸ்டைல்... ஃபோர்டு நிறுவனத்தின் புதிய க்ராஸ் ஓவர்!
Posted Date : 20:18 (01/02/2018)
Last Updated : 20:41 (01/02/2018)
 
கடந்த ஆண்டில், காம்பேக்ட் எஸ்யூவியான எக்கோஸ்போர்ட்டின் பேஸ்லிஃப்ட் மாடலை வெளியிட்டது ஃபோர்டு நிறுவனம். தற்போது 2018-ம் ஆண்டில், முதல் முறையாக க்ராஸ்ஓவர் கார் ஒன்றை அசத்தலாகக் களமிறக்கியுள்ளது. ஃபிகோவை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த க்ராஸ்ஓவருக்கு,
 
 
 
 
ஃப்ரீஸ்டைல் (freestyle) என்று இந்நிறுவனம் பெயர் சூட்டியுள்ளது. ஒரு எஸ்யூவியை போன்ற ஆஜானுபாகுவான தோற்றம் - அதிக க்ரவுண்ட் கிளியரன்ஸ் உடன், ஹேட்ச்பேக்கைப் போன்ற குறைந்த எடை - காம்பேக்ட் சைஸ் - போதுமான பர்ஃபாமென்ஸ் மற்றும் மைலேஜ் என எல்லாம் கலந்த கலவையாக இக்காரைத் தயாரித்திருக்கிறது ஃபோர்டு. 
 
 
 

ஃபிகோ ஹேட்ச்பேக்கைவிட 15 மிமீ அதிக க்ரவுண்ட் கிளியரன்ஸ், அகலமான டிராக், புதிதாக ரூஃப் ரெயில், கறுப்பு நிற பாடி க்ளாடிங்- பில்லர்கள் - ரியர் வியூ மிரர்கள் என க்ராஸ்ஓவர் கார்களுக்கே உரித்தான அம்சங்கள் இதில் இருக்கின்றன. தவிர ஃபிகோவுடன் ஒப்பிடும்போது, 185/60 R15 அளவுள்ள பெரிய அலாய் வீல் மற்றும் அகலமான டயர்கள், புதிய க்ரில் மற்றும் பானெட், ஸ்கிட் பிளேட் ஆகியவை இடம்பெற்றிருப்பது ப்ளஸ். 
 
 
 

இந்த காரில் தனது புதிய 1.2 லிட்டர், 3 சிலிண்டர் Dragon பெட்ரோல் இன்ஜின் - Getrag 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கூட்டணியை அறிமுகப்படுத்தியுள்ளது ஃபோர்டு. 96bhp பவரையும், 12kgm டார்க்கையும் வெளிப்படுத்தும் இந்த இன்ஜின், தனது வகையிலேயே  அதிக செயல்திறனைக் கொண்டதாக மாறியுள்ளது. இதனுடன் எக்கோஸ்போர்ட்டில் இருக்கும் 1.5 லிட்டர் TDCi டீசல் இன்ஜின் - 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், 1.5 லிட்டர் Ti-VCT பெட்ரோல் இன்ஜின் - 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் விரைவில் வரவுள்ளது. ஃபிகோவுடன் ஒப்பிடும்போது குறைந்த வேகங்களில் ஸ்டீயரிங் எடை குறைவாகவும், சொகுசான ஓட்டுதலைத் தரும் விதமாக சஸ்பென்ஷன் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக ஃபோர்டு கூறியுள்ளது. 
 

 
 
இந்த காரின் கேபினில், ஃபோர்டு நிறுவனத்தின் லேட்டஸ்ட் Sync 3 வசதியுடன் கூடிய 6.5 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இருக்கிறது. டாப் வேரியன்ட்களில், பயணிகள் பாதுகாப்புக்காக 6 காற்றுப்பைகள் வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் விற்பனைக்கு வரவிருக்கும் இந்த கார், டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ் - ஃபியட் அவென்ச்சுரா மற்றும் அர்பன் க்ராஸ் - ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் - ஹோண்டா WR-V போன்ற க்ராஸ்ஓவர்களுடன் போட்டிபோடுகிறது.
 
 
 
 
சமீபத்தில் வெளிவந்த மாருதி சுஸூகியின் செலெரியோ எக்ஸ் காரைவிட அதிகமாகவும், ஐ20 ஆக்டிவ் காரைவிட குறைவாகவும் இதன் விலையை நிர்ணயிக்க இந்நிறுவனம் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதுதவிர, இந்த ஆண்டில் தனது சர்வீஸ் மற்றும் ஆஃப்டர் சேல்ஸ் பிரிவில் அதிக கவனத்தைச்  செலுத்தவுள்ளதாகவும், தற்போது 350 என்றளவில் இருக்கும் சர்வீஸ் சென்டர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவுள்ளதாகவும், ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அனுராக் மேரோத்ரா தெரிவித்துள்ளார். ஆக இந்தியாவில் எஸ்யூவி டிசைன்தான் வெற்றிவாய்ப்பை தரும் என, ஃபோர்டு உணர்ந்துவிட்டது போல!

 
 - ரஞ்சித் ரூஸோ.
 
TAGS :   FORD, INDIA, AMERICA, FREESTYLE, FIGO, HATCHBACK, CROSSOVER, FIAT, AVVENTURA, URBAN CROSS, TOYOTA, ETIOS CROSS, HONDA WR-V, HYUNDAI, I20 ACTIVE, CUV, SUV, COMPACT CARS, GROUND CLEARENCE, BODY CLADDING, ROOF RAILS, AT, MT, PETROL, DIESEL, TDCI, DRAGON, GETRAG