பஜாஜ் பல்ஸர் NS200 மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 உடன் போட்டி போடும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R - பர்ஸ்ட் லுக்!
Posted Date : 22:06 (03/02/2018)
Last Updated : 12:48 (05/02/2018)


''உலகளவில் அதிக டூ-வீலர்களைத் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனம்'' என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான ஹீரோ மோட்டோகார்ப், இந்தியாவில் 50% டூ-வீலர் சந்தையைத் தன்வசம் வைத்திருக்கிறது. இப்போதைய சூழ்நிலையில், தான் ஏற்கனவே விற்பனை செய்யும் பைக்குகளின் மேம்படுத்தப்பட்ட மாடல்களைக் (மேஸ்ட்ரோ எட்ஜ், ஸ்ப்ளெண்டர் i-Smart, அச்சீவர், கிளாமர், சூப்பர் ஸ்ப்ளெண்டர்) களமிறக்கிக் கொண்டிருக்கும் இந்நிறுவனம், 150சிசி-க்கும் அதிகமான பைக் பிரிவில் இருந்து விலகியே இருந்தது. இதற்கான விடையாக,  கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மற்றும் 2016 மிலன் மோட்டார் ஷோவில் (EICMA), நேக்கட் ஸ்ட்ரீட் வகையிலான எக்ஸ்ட்ரீம் 200S பைக்கை ஹீரோ மோட்டோகார்ப் காட்சிபடுத்தியது தெரிந்ததே.
 
 
 
 
மேலும் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் அட்வென்ச்சர் பைக் செக்மென்ட்டில், இந்நிறுவனம் விற்பனை செய்துகொண்டிருந்த இம்பல்ஸ் பைக்குக்கு மாற்றாக, எந்தவொரு புதிய தயாரிப்பும் வெளிவராமலேயே இருந்தது. அதற்கான தீர்வாக, 2017 மிலன் மோட்டார் ஷோவில் (EICMA) எக்ஸ்-பல்ஸ் எனும் 200சிசி அட்வென்ச்சர் பைக்கை ஹீரோ மோட்டோகார்ப் காட்சிபடுத்தியது. ஜெய்ப்பூரில் இருக்கும் ஹீரோவின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இவை இரண்டும், அடுத்த வாரத்தில் துவங்கவிருக்கும் 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. என்றாலும் கடந்த ஜனவரி 30, 2018 அன்று, தனது புதிய ரோடுஸ்டர் பைக்காக, எக்ஸ்ட்ரீம் 200R பைக்கை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. 
 

 
 
டிசைன்: 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் எக்ஸ்ட்ரீம் 200S காட்சிபடுத்தப்பட்ட போது, சிறுத்தையை அடிப்படையாகக் கொண்டு இந்த பைக்கை டிசைன் செய்திருப்பதாக ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்திருந்தது. ஆனால் விரைவில் உற்பத்தி செய்யப்படவிருக்கும் எக்ஸ்ட்ரீம் 200R ரோடுஸ்டர் பைக், 150சிசி எக்ஸ்ட்ரீம் பைக்கைப் பின்பற்றி வடிவமைக்கப்பட்டிருப்பது போலவே இருக்கிறது. இதைப் பற்றி அந்நிறுவனத்திடம் கேட்டபோது, ''150சிசி எக்ஸ்ட்ரீம் ஷார்ப்பான டிசைன் என்றால், 200சிசி எக்ஸ்ட்ரீம் கட்டுமஸ்தான டிசைன்'' என விளக்கமளித்திருக்கிறது. ஆனால் 6 வருட டிசைனாக இருந்தாலும், பல்ஸர் NS200 பார்க்க அழகாகவே இருக்கிறது. இதுவே அப்பாச்சி RTR 200 4V, கச்சிதமான தோற்றத்தில் கவர்கிறது. 
 

 
 
போட்டியாளர்கள்: 200சிசி பைக் என்பதால், பஜாஜ் பல்ஸர் NS200 மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V ஆகியவைதான், எக்ஸ்ட்ரீம் 200R பைக்கின் பிரதான போட்டியாளர்கள். ஆனால் 160சிசி - 180சிசி பைக்குகளுக்கும் போட்டியாக, அதாவது 1 லட்ச ரூபாயில், இந்த பைக்கைக் கொண்டுவரும் முடிவில் ஹீரோ மோட்டோகார்ப் இருக்கிறது. அதற்கேற்பதான், எக்ஸ்ட்ரீம் 200R பைக்கின் இன்ஜினை ஹீரோ மோட்டோகார்ப் தயாரித்திருக்கிறது எனலாம். இந்த பைக்கின் டாப் ஸ்பீடான 112கிமீ, இதை உறுதிபடுத்திவிடுகிறது. இதுவே அப்பாச்சி RTR 200 4V மற்றும் பல்ஸர் NS200 பைக்குகளின் டாப் ஸ்பீடு, முறையே 128 கிமீ மற்றும் 136 கிமீ என்றளவில் இருக்கின்றன.
 

 
 
இன்ஜின்: அச்சீவர் 150 பைக்கில் இருக்கும் 149.1சிசி இன்ஜினை அடிப்படையாகக் கொண்டு, எக்ஸ்ட்ரீம் 200R பைக்கில் இருக்கும் புதிய ஏர் கூல்டு, 2 வால்வ், 199.6சிசி, கார்புரேட்டட் இன்ஜினைத் தயாரித்துள்ளது ஹீரோ. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் கார்புரேட்டருடன் கூட்டணி அமைத்திருக்கும் இந்த இன்ஜின், 18.4bhp பவர் மற்றும் 1.71kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. இது அச்சீவரை விட 5bhp அதிக பவர் மற்றும் 0.43kgm அதிக டார்க் ஆகும்! ஆனால் அப்பாச்சி RTR 200 4V உடன் ஒப்பிடும்போது 1.1bhp பவர் மற்றும் 0.1kgm டார்க் குறைவு; இதுவே பல்ஸர் NS200 என்றால், 5.1bhp பவர் மற்றும் 0.12kgm டார்க் குறைவு மக்களே! அச்சீவரில் i3S சிஸ்டம் வழங்கப்பட்டிருந்த நிலையில், எக்ஸ்ட்ரீம் 200R பைக்கில் இன்ஜின் கில் ஸ்விட்ச்சைப் பொருத்தியுள்ளது ஹீரோ. மேலும் இங்கிருக்கும் மற்ற பைக்குகளைப் போலவே, அதிர்வுகளைக் கட்டுப்படுத்தும் Counter Balancer Shaft பயன்படுத்தப்பட்டிருப்பது பெரிய ப்ளஸ். மேலும் பைக்கின் எக்ஸாஸ்ட் சத்தத்துக்காக, ஹீரோவின் பொறியாளர்கள் குழு ஸ்பெஷலாகப் பணிபுரிந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
 

 
 
டெக்னிக்கல் விபரங்கள்: 146 கிலோ எடையுள்ள எக்ஸ்ட்ரீம் 200R பைக்கில், புதிய டயமண்ட் டைப் ஃப்ரேம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் முன்பக்கத்தில் 37மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் - 100/80 17 இன்ச் MRF டீயுப்லெஸ் டயர் - 276மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்கத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷன் - 130/70 R17 MRF ரேடியல் டீயுப்லெஸ் டயர் - 220மிமீ டிஸ்க் பிரேக் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த இடத்தில்தான் போட்டியாளர்களுக்குச் சமமான நிலையில் எக்ஸ்ட்ரீம் 200R இருக்கிறது. 152 கிலோ எடையுள்ள பல்ஸர் NS200 பைக்கைப் போலவே, எக்ஸ்ட்ரீம் 200R பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ஆப்ஷனலாக வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் 149 கிலோ எடையுள்ள அப்பாச்சி RTR 200 4V பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ் ஆப்ஷன் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆக போட்டியாளர்களை விடக்குறைவான எடை மற்றும் பவர் என்பதால், சிறிய டிஸ்க் பிரேக்ஸ் மற்றும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் போதும் என ஹீரோ நினைத்துவிட்டதோ?
 

 
 
வசதிகள்: சர்வீஸ் இண்டிகேட்டர் - சைடு ஸ்டாண்ட் இண்டிகேட்டருடன் கூடிய அனலாக் டிஜிட்டல் இன்ஸ்ரூமென்ட் க்ளஸ்டர், LED பார்க்கிங் லைட் மற்றும் டெயில் லைட், சிங்கிள் பீஸ் சீட், ஏர் ஸ்கூப்புடன் கூடிய 12.4 லிட்டர் பெட்ரோல் டேங்க் மற்றும் இன்ஜின் கார்டு என 200சிசி செக்மென்ட் பைக்குகளுக்கே உரித்தான வசதிகள் இருக்கின்றன. மேலும் Steel Braided Brake Line, சிங்கிள் சேனல் ஏபிஎஸ், இன்ஜின் கில் ஸ்விட்ச், மோனோஷாக் சஸ்பென்ஷன், பின்பக்க ரேடியல் டயர் எனத் தனது பைக்குகளில் பரவலாகக் காணக்கிடைக்காத வசதிகளை, எக்ஸ்ட்ரீம் 200R பைக்கில் சேர்த்திருக்கிறது ஹீரோ. ஆனால் ஆயில்/லிக்விட் கூலிங், 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், 4 வால்வ், 2 பீஸ் ஹேண்டில்பார் போன்ற வசதிகள் மிஸ்ஸிங் என்பதுதான் கொஞ்சம் நெருடல். ஃபுல் டிஜிட்டல் மீட்டர், ஆப்ஷனல் Fi சிஸ்டம் - பைரலி டயர்கள் - டூயல் சேனல் ஏபிஎஸ் ஆகியவற்றை அப்பாச்சி RTR 200 4V கொண்டிருந்தால், பெரிமீட்டர் ஃப்ரேம் - லிக்விட் கூலிங் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் - 3 ஸ்பார்க் ப்ளக் இன்ஜின் என எகிறியடிக்கிறது பல்ஸர் NS200.
 

 
 
முதல் தீர்ப்பு: ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, பல்ஸர் NS200 மற்றும் அப்பாச்சி RTR 200 4V ஆகியவை, அடுத்த லெவலில் இருக்கின்றன! ஆனால் அசத்தலான விலையில், 790மிமீ சீட் உயரத்துடன் எளிதான ஓட்டுதலுடன் கூடிய 200சிசி பைக்காக, எக்ஸ்ட்ரீம் 200R பைக்கை ஸ்மார்ட்டாகப் பொசிஷன் செய்திருக்கிறது ஹீரோ மோட்டோகார்ப். எனவே நாம் முன்பே சொன்னது போலவே, 160சிசி - 180சிசி பைக்குகளுக்கான மாற்றாக இது இருக்குமா என்பது, போகப் போகத் தெரியும். ஏனெனில் வேலைக்குச் செல்லும் 30 வயதுக்கும் குறைவான இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை மனதில் வைத்தே, 40கிமீ மைலேஜ் தரக்கூடிய பைக்காக, எக்ஸ்ட்ரீம் 200R பைக்கைத் தயாரித்துள்ளது ஹீரோ. ஏப்ரல் மாதத்தில் இந்த பைக் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   
 

கட்டுரை, படங்கள் - ராகுல் சிவகுரு.
 
 
TAGS :   HERO, XTREME 200R, EICMA, MILAN MOTOR SHOW, 2016, 2018 DELHI AUTO EXPO, BAJAJ, PULSAR NS200, TVS, APACHE RTR 200, 200CC PERFORMANCE BIKES, INDIA, ABS, LED, DISC BRAKES, TUBELESS TYRES, MONOSHOCK SUSPENSION, PETROL