புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய சிக்கந்தர் டிராக்டரை அறிமுகப்படுத்தியது சோனாலிகா!
Posted Date : 21:57 (13/02/2018)
Last Updated : 10:46 (14/02/2018)

 

இந்தியாவில் இருக்கும் முன்னணி டிராக்டர் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சோனாலிகா இன்டர்நேஷனல் நிறுவனம், தனது புதியரக மற்றும் நவீனமான சிக்கந்தர் சீரிஸ் டிராக்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. நவீன வசதிகளையும், புதிய தொழில்நுட்பங்களையும் உள்ளடக்கிய இந்த டிராக்டர்கள், 35bhp முதல் 90bhp வரையிலான பவரை வெளிப்படுத்துகின்றன. தற்போது விற்பனையில் இருக்கும் சோனாலிகாவின் 20bhp முதல் 120bhp மாடல்களுடன் சேர்ந்தே இந்த புதியரக டிராக்டர்களும் விற்பனையாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயத் தேவைகளை மனதில்வைத்து தயாரிக்கப்பட்டிருக்கும் சிக்கந்தர் சீரிஸ் டிராக்டர்கள், 6 வேரியன்ட்களில் கிடைக்கின்றன. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான் உட்பட இந்தியாவின் அனைத்து மாறிலங்களிலும் விற்பனைக்குக் கிடைக்கும். 45bhp பவரை வெளிப்படுத்தும் சிக்கந்தர் DI 750-III RX டிராக்டரின் விலை, 7.5 லட்ச ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

 
 
 
நிலத்தின் தன்மையை புரிந்து, நிலப்பரப்புக்கு ஏற்ப உழவுசெய்வதற்கான அழுத்தத்தைத் தரும் எக்ஸோ-சென்ஸிங் தொழில்நுட்பத்துடன் கூடிய ஹைட்ராலிக் பவர் Tiller, இந்த டிராக்டரில் உள்ளது. சோனாலிகாவின் Cool-Comfortable-Spacious என்று சொல்லப்படும் CCS ப்ளாட்ஃபார்மில் தயாராகும் இந்த டிராக்டரில் மெல்லிய டிசைன், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், மழை-பனி என்று எதிலுமே பார்வையை குலைக்காத See-Through ஹெட்லைட், 1600 கிலோ வரையிலான எடையைத் தூக்கும் ஹைட்ராலிக் பவர் Tiller, டிராக்டரைச் சுற்றி க்ரோம் பூச்சு என்று பார்க்க ஸ்டைலாகவும், தேவையான வசதிகளுடனும் வருகிறது சிக்கந்தர் டிராக்டர். HDM டீசல் இன்ஜின் - 24 ஸ்பீடு HS-HT கியர்பாக்ஸ் கூட்டணியோடு வருகிறது. கார்களில் இருப்பதுபோன்ற ஓட்டுநர் இருக்கை, கைக்கு எட்டும் தூரத்தில் கன்ட்ரோல் லீவர்கள், ரப்பர் க்ரிப் கொண்ட பெடல்கள், இன்ஜினின் வெப்பம் காலருகே வராமல் இருக்க கேபினுக்கும் - இன்ஜினுக்கும் இடையே தடிமனான Heat Shield என டிராக்டரை ஓட்டுபவரின் சௌகரியத்துக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
 
 சாதாரண கன்ட்ரோல் வால்வு மட்டுமல்லாமல் ஒன்-டச் கன்ட்ரோல் இருக்கிறது. எனவே விவசாயப் பணிகள் மட்டுமில்லாமல் ஆழமான பள்ளங்களைத் தோண்டுவது, குப்பைகளை அகற்றுவது, அதிக எடையுள்ள பொருட்களை எடுத்துச் செல்வது போன்ற வேலைகளையும் இதில் சுலபமாகச் செய்ய முடியும் என்கிறார்கள் சோனாலிகா நிறுவனத்தினர். தமிழகத்தில் தற்போது 29 டீலர்களை கொண்டுள்ள இந்நிறுவனம், வேளாண்மை துறையில் உள்ள தொழில்நுட்ப மேம்பாடுகள் மற்றும் இயந்திரமயமாக்கல் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு தரும் வகையில் திறன் மேம்பாட்டு மையத்தையும் இந்திய அரசுடன் சேர்ந்து நடத்திவருகிறது. 'உலகிலேயே மிகப்பெரிய டிராக்டர் தொழிற்சாலையை வைத்துள்ள சோனாலிகா நிறுவனம், ஜப்பானின் Yanmar நிறுவனத்துடன் தொழில்நுட்ப பகிர்வு கொண்டுள்ளதுடன், அந்நிறுவனத்தின் 30 சதவிகித பங்குகளையும் வைத்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும், தமிழ்நாட்டில் 85% வளர்ச்சியை அடைந்த சோனாலிகா நிறுவனம், இந்த ஆண்டு அதைவிடப் பலமடங்கு வளர்ச்சியடைய முடிவெடுத்திருக்கிறது' என இந்நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் செயல்திட்ட கூட்டமைப்பு பிரிவின் தலைவர் முதித் குப்தா கூறினார். 
 
- ரஞ்சித் ரூஸோ.
 
 
TAGS :   Sonalika introduced new tractor series in Tamilnadu