ஆண்ட்ராய்டு, ஆட்டோமொபைல், க்யூப்... எல்லாமே தெரிஞ்சுக்கலாம்! சென்னையில் நடந்த ஜாலி சிம்போஸியம்!
Posted Date : 13:42 (19/02/2018)
Last Updated : 17:19 (20/02/2018)

 

கனவு நாயகன் அப்துல் கலாம் பயின்ற குரோம்பேட்டையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி வளாகத்தில் 'கார்ட்டே பிளான்சே' என்கிற தொழில்நுட்ப கருத்தரங்கு (Technical Symposium) வருடந்தோறும் நடந்து வருகிறது. இதன் நோக்கம் - “XPLORE THE FREEDOM”. அதாவது, சுதந்திரத்துக்கான தேடல் என்று சொல்லலாம். பிப்ரவரி 9 முதல் பிப்ரவரி 11ஆம் தேதி வரை மூன்று நாட்கள் இந்த கருத்தரங்கு நடைபெற்றது. கிட்டத்தட்ட இரண்டாயிரம் மாணவர்கள் கலந்து கொண்டார்கள். பள்ளிக் குழந்தைகளுக்கான போட்டிகளில் பல்வேறு பள்ளிகளில் இருந்து ஐந்நூறுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். 

 

 
இதில் இயந்திர பொறியியல் (Mechanical Engineering) துறையில் பல தொழில்நுட்ப போட்டிகள், தொழிற்பட்டறைகள்  நடத்தப்பட்டன. ஆட்டோமொபைல் இன்ஜின்களை மாணவர்களின் கண் முன்னே அறுவை சிகிச்சை செய்து காட்டி, பின்னர் மாணவர்களையே அதைச் செய்ய வைத்த தொழிற்பட்டறைதான் ஹைலைட்.
 
 
இதன் பின்னர் ஆட்டோமோட்டிவ் ஸ்கெட்சிங் மற்றும் ஏரோடைனமிக்ஸ் மாடலிங் என்கிற தொழிற்பட்டறை நடந்தது. பல்வேறுவிதமான கார்களினுடைய டிசைன்களை மேல் கோணம் (TOP VIEW ) , நேர் கோணம் (FRONT VIEW) எனப் பல்வேறு கோணங்களில் இருந்து கார்களின் டிசைன்களை மாணவர்கள் தங்கள் கைப்பட வரைந்தார்கள். படித்து எழுதிப் பார்க்கும் ஏட்டுக் கல்வியைவிட, இதுபோன்ற பிராக்டிக்கலான டெஸ்ட்கள்தான் மெக்கானிக்கல் இன்ஜினீயர்களைப் பொறுத்தவரை ரொம்ப முக்கியம் என்பது புரிந்தது. "படிக்கிறதை விட இப்போதான் எல்லாமே தெளிவா புரியுது" என்றார் திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த பாலமணிகண்டன் என்ற மாணவர்.
 
 
இந்தக் கருத்தரங்கில் மிக முக்கியமான போட்டி நடந்தது. அது, சர்வதேச கியூப் போட்டி (Carte Blanche Kube Open). இது ஒரு தேசிய அளவிலான கருத்தரங்கு என்றாலும், இந்த கியூப் போட்டிக்கு மட்டும் அமெரிக்கா, இலங்கை  போன்ற வெளிநாடுகளில் இருந்து பலர் வந்து கலந்து கொண்டார்கள். கார்ட்டே பிளான்சே என்றால் பிரெஞ்ச் மொழியில் வரம்பற்ற செயல் அதிகாரம் அல்லது வரம்பற்ற செயல் விருப்பம். 
 
 
”எனக்கு 13 வயது இருக்கும்போதிலிருந்தே யூடியூப் வீடியோக்கள் மூலம் கியூப்பை வேகமாக தீர்க்க கற்றுக்கொண்டேன். இணையதளத்தில் இங்கு நடக்கும் போட்டி பற்றிக் கேள்விப்பட்டேன். உடனே பறந்து வந்துவிட்டேன். எனக்கு கியூப் என்றால் கொள்ளைப் பிரியம்” என்கிறார் இலங்கையைச் சேர்ந்த ஃபெர்னாண்டோ. இந்த முறை, காலால் கியூப்பைத் தீர்க்கும் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதித்யா என்பவர் தனது முந்தைய தேசிய சாதனையை முறியடித்து வெறும் 33 வினாடிகளில் க்யூப்களைத் தீர்த்து புதிய சாதனை படைத்தார். “எனக்கு கியூப் என்றால் ரொம்ப ஆர்வம். பல்வேறு விதமான கியூப்களை நான் தீர்ப்பேன். மிகவும் நெகிழ்ச்சியான தருணமாக இருக்கிறது” என்றார் ஆதித்யா.
 
 
இதேபோல கணினி பொறியியல் துறையில் நடத்தப்பட்ட ஆண்ட்ராய்ட் தொழிற்பட்டறைகளில் பல்வேறு மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்தது கொண்டனர். “இங்கு ஆண்ட்ராய்ட் பற்றிக் கற்றுக்கொள்ள வந்தோம். படிபடிப்படியாக அடிப்படையிலிருந்து கற்றுக்கொடுத்தார்கள். இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கோடிங் என்றாலே எனக்குப் பயம். இப்போது கோடிங் மேல் ஆர்வமாகி விட்டேன்” என்றார் பனிமலர் கல்லூரியைச் சேர்ந்த ஷரோன்.
 
 
'போட்டியிலேயும் படிப்பு சம்பந்தமாகத்தான் இருக்கணுமா' என்ற சிலரின் ஆதங்கமும் இங்கே தீர்க்கப்பட்டது. தொழில்நுட்பப் போட்டிகள் மற்றும் தொழிற்பட்டறைகள் மட்டுமில்லாமல், புதையல் தேடுதல் (Treasure hunt), ஐ.பி.எல். ஏலம் (IPL Auction), வார்த்தை விளையாட்டு (Game of words) போன்ற தொழில்நுட்பம் அல்லாத ஜாலியான விளையாட்டுகளும் நடத்தப்பட்டன. 
 
 
மொத்தத்தில், இந்த வருஷ சிம்போஸியம் ஜாலியோ ஜாலி!
 
- வாஞ்சிநாதன் (மாணவப் பத்திரிகையாளர்) 
 
 
TAGS :   Symposium