சுஸூகி இன்ட்ரூடர் 150 Fi-க்குப் போட்டியாகக், 83,475 ருபாயில் களமிறங்கியது பஜாஜ் அவென்ஜர் 180...!
Posted Date : 20:45 (22/02/2018)
Last Updated : 20:51 (22/02/2018)

 

கடந்த மாதத்தில் அவென்ஜர் 220 சீரிஸ், டொமினார் D400, V15, V12, டியூக் 390 ஆகிய பைக்குகளின் 2018-ம் ஆண்டுக்கான பேஸ்லிஃப்ட் மாடல்களைக் களமிறக்கியது பஜாஜ். இதில் புதிய அவென்ஜருக்குப் போட்டியாக, தான் முன்பே சொன்னது போலவே, ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் கொண்ட இன்ட்ரூடர் பைக்கை, கடந்த வாரத்தில் நடந்துமுடிந்த 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தியது சுஸூகி. அதற்கான தக்க பதிலடியாக, அவென்ஜர் 180 பைக்கை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது பஜாஜ். இந்த பைக்கின் மும்பை எக்ஸ் ஷோரூம் விலை 83,475 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
 
 
 
அவென்ஜர் ஸ்ட்ரீட் 220 மேட் கலர்களைக் கொண்டிருக்க, Gloss கறுப்பு மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களில் அவென்ஜர் 180 கிடைக்கிறது. அவென்ஜர் 220 பைக்கைவிட 10 ஆயிரம் ரூபாய் குறைவாக (அவென்ஜர் 220 சீரிஸ் பைக்கின் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை: 93,786 ரூபாய்) வெளிவந்திருக்கும் அவென்ஜர் 180 பைக்கின் புக்கிங், இந்தியாவின் சில நகரங்களில் ஏற்கனவே தொடங்கிவிட்டது. அங்கே பைக்குக்கான முழுதொகையைச் செலுத்தினால், சுமார் 10 நாட்களில் டீலர் பைக்கை டெலிவரி செய்துவிடுவதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது விற்பனையில் இருந்து நிறுத்தப்பட்டிருக்கும் அவென்ஜர் 150 பைக்கின் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை, 81,779 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. 

 
என்னென்ன வித்தியாசங்கள்?
 

அவென்ஜர் 220 பைக்குடன் ஒப்பிடும்போது, பேஸ்லிஃப்ட்டுக்கு முந்தைய மாடலில் இருந்த அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர்தான், அவென்ஜர் 180 பைக்கிலும் இடம்பெற்றுள்ளது. ஆனால் பேஸ்லிஃப்ட் மாடலில் இருந்த LED DRL உடனான புதிய ஹெட்லைட், கவுல், மேட் ப்ளாக் ஃப்னிஷில் இருக்கும் எக்ஸாஸ்ட், அதற்கு மேலே இருக்கும் அலுமினிய ஃப்னிஷ் கொண்ட Heat Shield, அலுமினிய ஃப்னிஷ் Exhaust Tip, புதிய க்ராப் ரெயில், கூடுதல் சொகுசிற்காக மேம்படுத்தப்பட்ட இருக்கை மற்றும் சஸ்பென்ஷன், புதிய க்ராஃபிக்ஸ் ஆகியவை இதிலும் தொடர்கின்றன.
 
 
 
 
ஒருவேளை 220சிசி பைக்கிலிருந்து 180சிசி பைக்கை வேறுபடுத்திக் காட்டுவதற்காக, அவென்ஜர் 180 மாடலில் Gloss கலர்கள் மற்றும் அனலாக் மீட்டர்களை பஜாஜ் வழங்கியுள்ளதோ? 150சிசி மாடலைவிட 1,700 ரூபாய்தான் அதிகம் என்பதால், இதனை ஏற்றுக் கொள்ளலாம். மேலும் இந்த இரண்டு பைக்குகளுக்கும் வீல்பேஸ் (1480மிமீ) மற்றும் கிரவுண்ட் கிளியரன்ஸில் (169மிமீ) ஒற்றுமை இருந்தாலும், நீளம் (2210மிமீ) மற்றும் அகலத்தில் (806மிமீ) வித்தியாசம் இருக்கிறது. 

 
இன்ஜின் விபரங்கள்!
 

பெயருக்கு ஏற்றபடியே அவென்ஜர் 180 பைக்கில் இருப்பது, 178.6சிசி DTS-i இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணிதான். இது நேக்கட் ஸ்ட்ரீட் பைக்கான பல்ஸர் 180 மாடலில் இருக்கும் அதே சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு, கார்புரேட்டட் இன்ஜின் என்பது கவனிக்கத்தக்கது. ஆனால் அவென்ஜர் பைக்கின் க்ரூஸர் பொசிஷனிங்கை மனதில்வைத்து, ஆரம்ப கட்ட மற்றும் மிட் ரேஞ்ச் வேகத்துக்கு ஏற்ப இன்ஜின் டியூனிங்கில் மாற்றங்களைச் செய்திருக்கிறது. இது இந்த பைக் வெளிப்படுத்தும் 15.5bhp பவர் மற்றும் 1.37kgm டார்க்கிலேயே புரிந்துகொள்ள முடிகிறது.
 
 
 
 
மற்றபடி MRF டயர் (முன்: 90/70 -17; பின்: 130/90-15) 130 - சஸ்பென்ஷன் - பிரேக்ஸ் (முன்: 260மிமீ டிஸ்க்; பின்: 130மிமீ டிரம்) - 13 லிட்டர் பெட்ரோல் டேங்க் ஆகியவை, அப்படியே அவென்ஜர் 220 பைக்கின் ஜெராக்ஸ்தான்! ஆனால் அவென்ஜர் 150 (148 கிலோ எடை) உடன் ஒப்பிடும்போது, அவென்ஜர் 180 பைக்கின் எடை 2 கிலோ அதிகரித்திருக்கிறது (150 கிலோ எடை). இது பவர்ஃபுல்லான அவென்ஜர் ஸ்ட்ரீட் 220 பைக்குக்குச் சமம் என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

 
முதல் தீர்ப்பு:
 

முதன்முறையாக அவென்ஜர் பைக், கடந்த 2005-ம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தபோது, அது 180சிசி இன்ஜினுடன் வந்தது தெரிந்ததே. ஆக 13 வருடங்களுக்குப் பிறகு, 180சிசி BS-IV இன்ஜினுடன் கம்பேக் கொடுத்திருக்கிறது, வருத்தமான விஷயம் என்னவென்றால், இதனால் அவென்ஜர் 150 பைக்கிற்கு எண்ட் கார்டு போட்டுவிட்டது பஜாஜ். புதிய 2018 அவென்ஜர் 180. ஏற்கனவே அவென்ஜர் 220 பைக்கைவிட 11 ஆயிரம் ரூபாய் விலை அதிகமாக இருக்கிறது சுஸூகி இன்ட்ரூடர் 150 (இன்ட்ரூடர் பைக்கின் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை: 1.04 லட்ச ரூபாய்). எனவே எப்படிப் பார்த்தாலும், அவென்ஜர் 180 பைக்கைவிட 21 ஆயிரம் ரூபாய் அதிக விலையைக் (எக்ஸ்-ஷோரூம்) கொண்டிருக்கும் நிலையில்,
 
 
 
 
ஆன்-ரோடு விலைகள் வரும்போது வித்தியாசம் இன்னும் அதிகமாக இருக்கும். என்னதான் மாடர்ன் டிசைன், ஸ்மூத் இன்ஜின், ஆப்ஷனலாகக் கிடைக்கும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மற்றும் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன், பின்பக்க டிஸ்க் பிரேக், சிறப்பான மெக்கானிக்கல் பாகங்கள், LED DRL மற்றும் டெயில் லைட் எனப் பல ப்ளஸ் பாயின்ட்களை சுஸூகி இன்ட்ரூடர் 150 கொண்டிருந்தாலும், கொடுக்கும் காசுக்கு மதிப்புமிக்க க்ரூஸர் பைக் வேண்டும் என்பவர்களது சாய்ஸ், அவென்ஜர் சீரிஸ் பைக்காக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.  
 
 
 

- ராகுல் சிவகுரு.
 
 
 
TAGS :   BAJAJ, AVENGER STREET 150, AVENGER STREET 180, AVENGER CRUISE 220, AVENGER STREET 220, SUZUKI INTRUDER 150, BUDGET CRUISEER BIKE, FI, 2018 DELHI AUTO EXPO.