இந்தியாவின் முதல் ரோல்ஸ் ராய்ஸ் ஃபேண்டம் 8 கார்... நம்ம சென்னையில்!
Posted Date : 13:09 (23/02/2018)
Last Updated : 16:01 (23/02/2018)
 
எல்விஸ் பிரெஸ்லியில் ஆரம்பித்து உலகின் பல ராஜ வம்சத்தவர்களும், தொழிலதிபர்களும், கலைஞர்களும் வாங்கிய ஆடம்பர காரான ஃபேண்டமின் 9-ம் தலைமுறை கார் ரோல்ஸ் ராய்ஸ் ஃபேண்டம் 8 சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஃபேண்டம் 7 காரை தொடர்ந்து 15 ஆண்டுகள் கழித்து ரிலீஸாகி இருக்கும் ஃபேண்டம் 8 காருக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. உலகளவில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்ட இந்த கார், இந்தியாவில் முதல் முறையாக டயர் பதித்துள்ளது. சென்னையில் உள்ள தொழிலதிபர் ஒருவர் இந்த காரை வாங்கியுள்ளதாக தகவல்.
 
 
 
 
முன்பை விட எடை குறைவான அலுமினியத்தால் ஆன  புதிய ஸ்பேஸ் ஃப்ரேம் சேஸியில் உருவாகியிருக்கிறது ஃபேண்டம் 8. ரோல்ஸ் ராய்ஸின் பேடன்ட் வாங்கப்பட்ட சேஸி என்பதால் இது ஃபேண்டம் கார்களை தவிற வேறு எதிலும் பயன்படுத்தப்படாது என்கிறது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம். காரின் முன்பகுதியை பார்த்தாலே தெரியும் இந்த காரின் ஹெட்லைட்டுகள் மாற்றப்பட்டிருப்பது. முன்ந்தைய மாடலில் இருந்த சாதாரண LED லைட்டுக்கு பதிலாக இப்போது லேஸர் ஹெட்லைட் வந்துள்ளது. இந்த ஹெட்லைட் 600 மீட்டர் தூரம் வரை வெளிச்சத்தை தருமாம். ஹெட்லைட் முன்பை விட கொஞ்சம் முறைப்பது போல தெரிகிறது.
 
இந்த காரில் ரோல்ஸ் ராய்ஸின் பாரம்பரிய க்ரில் டிசைன்தான் உள்ளது என்றாலும், புதிதாக இந்த க்ரில் பாடியோடு ஒருங்கிணைந்து வருகிறது. காரின் கரில்லில் ஆரம்பித்து காரின் பின்பக்கம் வரை முழுவதுமாக நீண்டு முடிகிற ஷோல்டர் லைன் முன்பை விட கொஞ்சம் ஸ்போர்ட்டியாக இருந்தாலும், டோர்களுக்கு கீழே வரும் பாடிலைன் முந்தைய கார்களை போல ஆழமாகவும் நீலமாகவும் இல்லை. காரின் ரூஃப் லைன் தங்குதடையின்றி ஸ்மூத்தாக டிஸைன் செய்யப்பட்டுள்ளது.
 
 
 
  
இன்ஜினும் பாரம்பரிய 6.75 சிசி V12 இன்ஜின்தான் என்றாலும் பவர் மற்றும் டார்க் அப்கிரேட் ஆகியுள்ளது. 8 ஸ்பீடு ஆட்டோமெடிக் கியர்பார்கஸ் கூட்டணியோடு வரும் இந்த இன்ஜின் 563bhp பவர் மற்றும் 900Nm டார்க் தருகிறது. புதிய ஃப்ரேம் என்பதால் காரில் இடவசதி கூடுதலாகவே உள்ளது. suicide door-ஐ திறந்து உள்ளே நூழைந்தால் காரின் உட்புறம் 5 நட்சத்திர விடுதியின் சொகுசு அறை போல உள்ளது. நல்ல மென்மையான சீட்டு மற்றும் கார்ப்பெட்டுகள் வரவேற்கிறது.
 
கதகதப்பை தரும் ஹீட்டட் சீட்டுகள் மசாஜ் வசதியுடன் உள்ளது. பின் பக்க பேஸஞ்சர் கேபினில் இரண்டு பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மன்ட் சிஸ்டம் உள்ளது. டிரைவர் கேபின் இப்போது டிஜிட்டல் மயமாகிவிட்டது. ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் கன்ட்ரோல்கள் உள்ளது. மேலும் இதில் காரில் 1300 watt பவர் கொண்ட 16 ஸ்பீக்கர்கள் உள்ளது.
 
 
 
 
முந்தைய மாடலை விட சற்று பெரிதாக இருக்கிறது ஃபேண்டம் 8 மாடல். அதற்கேற்ப காரில் உள்ள ஏர்  சஸ்பென்ஷனிலும் 30 சதவிகிதம் அதிக காற்று உள்ளதாம். இந்த சஸ்பன்ஷனில் ரோட்டை கணித்து அதற்கேற்ப ஸ்டிஃப்னஸை மாற்றிகொள்ளும் தொழில்நுட்பமும் உள்ளது. இந்த கார், அமைதியோ அமைதி.
 
காரின் உள்ளளே இருந்தால் கார் நகர்கிறதா இல்லையா என்று கூட தெரியாத அளவு அமைதியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது இதன் கேபின். காரின் வெளியே நின்றால் கூட இன்ஜின் சத்தத்தை உணரத்தான் முடியும் கேட்க முடியாது. பழைய மாடலை விட இது 10 சதவிகித அமைதியாக உள்ளது. இந்த அமைதிக்காக காரில் 130 கிலோ NVH பொருட்களை பயன்படுத்தியுள்ளது ரோல்ஸ் ராய்ஸ் பொறியியல் குழு. 
 
 
 
 
சிறந்த பொருட்கள் மற்றும் வேலைபாடுகளுடன் கூடிய இந்த கார் இரண்டு வேரியண்டுகளாக கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.9.5 கோடி (ஸ்டாண்டர்ட் வேரியண்ட்) மற்றும் ரூ.11.35 கோடி (எக்ஸ்டண்டட் வீல்பேஸ் வேரியண்ட்).  
 
 - ரஞ்சித் ரூஸோ.
 
 

 

TAGS :   Rolls Royce launched its Phantom 8 car in India