ஆந்திராவில் இருந்து 2019-ல் வருகிறது, கியா SP கான்செப்ட் எஸ்யூவி!
Posted Date : 20:52 (28/02/2018)
Last Updated : 21:01 (28/02/2018)


2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் தனது மொத்த வித்தையையும் இறக்கிய கியா மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியாவில் தனது செயல்பாடுகளை முடுக்கி விட்டுள்ளது. ஆந்திர பிரதேச மாநிலத்தில் இருக்கும் அனந்தாபூரில், தென் கொரியாவைச் சேர்ந்த இந்நிறுவனம் கட்டிவரும் புதிய தொழிற்சாலையின் கட்டமைப்பை ஊடகத்துக்குக் காண்பித்தது. 23 மில்லியன் சதுர அடியில் (586 ஏக்கர்) உருவாகிவரும் கியாவின் தொழிற்சாலை, 3,000 ஊழியர்களின் உதவியுடன், வருடத்துக்கு 3 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது.
 
 
 
 
மேலும் வருங்காலத் தேவைகளை மனதில்வைத்து, 750 ஏக்கர் வரை இந்தத் தொழிற்சாலையின் பரப்பளவை அதிகரித்துக் கொள்ள முடியும் எனக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டின் நடுவே, சுமார் 7,050 கோடி ரூபாய் முதலீட்டில், தனது தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகளை கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் துவக்கியது கவனிக்கத்தக்கது. தவிர உலகளவில் கார்களை விற்பனை செய்யும் இந்நிறுவனத்தின் 15-வது தொழிற்சாலை, இந்தியாவில் இருக்கிறது. 

 
வேலை வாய்ப்புகள் எப்படி?
 

2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்நிறுவனம் காட்சிபடுத்திய SP கான்செப்ட் எஸ்யூவிதான், இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படப்போகும் முதல் கார். '2019-ம் ஆண்டின் நடுவில் SP கான்செப்ட் எஸ்யூவியின் உற்பத்தி துவங்கும். அந்த ஆண்டு தீபாவளி நேரத்தில் அதன் விற்பனை துவங்கும்' என கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு உயர் அதிகாரியான மனோகர் பட் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, அடுத்த 2 ஆண்டுகளுக்குள் மற்றுமொரு புதிய கார் அறிமுகப்படுத்தப்படும். அது ஹேட்ச்பேக்கா, செடான் காரா, காம்பேக்ட் எஸ்யூவியா என்பது குறித்து கேட்டபோது, மெளனமே அதற்கான பதிலாக இருந்தது. தற்போது ஆந்திர பிரதேச அரசுடன் இணைந்து,
 
 
 
 
தனது 3,000 ஊழியர்களுக்கு இந்நிறுவனம் பயிற்சி அளிக்க இருக்கிறது. மேலும் வருகின்ற 2021-ம் ஆண்டுக்குள்ளாக, தனது தொழிற்சாலையில் மீண்டும் 7,050 கோடி ரூபாயை முதலீடு செய்வதுடன், கூடுதலாக 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை அளிக்க உள்ளது கியா மோட்டார்ஸ் இந்தியா. தவிர முன்பு சொன்னது போலவே, ஒருவேளை தொழிற்சாலையின் பரப்பளவு அதிகரிக்கப்பட்டால், கூடுதலாக 1 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும் என்பது ப்ளஸ். எனவே உள்நாட்டுத் தேவைகளுடன், ஏற்றுமதியும் இந்நிறுவனத்தின் திட்டங்களுள் ஒன்றாக இருப்பது தெரிகிறது.  

 
எந்த மாதிரியான கார்கள் விற்பனைக்கு வரும்?

 
Mohave, Cerato, Stinger, Ceed, Soul, Rio, Sportage எனக் கிட்டத்தட்ட சர்வதேச சந்தைகளில் தான் விற்பனை செய்யும் கார்கள் அனைத்தையுமே, இந்த மாதத்தின் துவக்கத்தில் நடந்து முடிந்த 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்நிறுவனம் காட்சிபடுத்தியது தெரிந்ததே. இதில் எவை இந்திய சந்தைக்கு வரும் என்பதில் இன்னும் தெளிவு ஏற்படாத நிலையில், இந்தியாவுக்கு எனப் பிரத்யேகமான கார்களையே கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் தயாரிக்கும் முடிவில் இருக்கிறது. ஏனெனில் 'போட்டிமிகுந்த இந்திய கார் சந்தையில் பல ஆண்டுகளாகக் கோலோச்சி வரும் மாருதி சுஸூகி மற்றும் ஹூண்டாய் ஆகிய நிறுவனங்களுடன்,
 
 
 
 
விலை விஷயத்தில் எங்களால் நிச்சயமாகப் போட்டி போட முடியாது. எனவே பிரீமியம் பிரிவில், அதிலும் தற்போது டிரெண்டிங்கில் இருக்கும் எஸ்யூவி செக்மென்ட்டில்தான் எங்களின் முழு கவனமும் உள்ளது' என இந்நிறுவனத்தின் தலைவரான Han-Woo Park, 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ துவங்குவதற்கு முன்பாகத் தெரிவித்திருந்தார். SP கான்செப்ட் எஸ்யூவி, இந்தியாவுக்கு மட்டுமல்லாது, உலக சந்தைகளுக்கும் ஏற்ற தயாரிப்பாக இருக்கும் என கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. 

 
எப்படி இருக்கிறது SP கான்செப்ட் எஸ்யூவி?

 
போட்டி அதிகமாக இருப்பதால், தனது கார்களின் டிசைன் ஸ்டைலாக இருக்க வேண்டும் என்பதில், கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் மிகவும் திட்டவட்டமாக இருக்கிறது. இதனை இந்நிறுவனம் 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்திய SP கான்செப்ட் எஸ்யூவியிலேயே பார்க்க முடிந்தது. ஹூண்டாய் கார்களுக்கு எப்படி Cascade கிரில் அடையாளமாக இருக்கிறதோ, அதுபோலவே தனது கார்களுக்கு eTiger Nosef பாணியிலான கிரில்லை அடையாளமாக வைத்திருக்கிறது கியா. இதனுடன் மெலிதான ஹெட்லைட்ஸ், அகலமான பனி விளக்குகள், தடிமனான வீல் ஆர்ச்கள், பெரிய வீல்கள் என ஒரு மாடர்ன் எஸ்யூவிக்கான டிசைன் அம்சங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது SP கான்செப்ட் எஸ்யூவி.
 
 
 
 
ரெனோ கேப்ச்சர், நிஸான் டெரானோ, மாருதி சுஸூகி எஸ்-க்ராஸ், ஹூண்டாய் க்ரெட்டா ஆகிய கார்களுக்குப் போட்டியாகப் பொசிஷன் செய்யப்படவிருக்கும் இந்த எஸ்யூவி, 5 சீட் மற்றும் 7 சீட் ஆப்ஷன்களைக் கொண்டிருக்கிறது. முதலில் 5 சீட்டர்தான் விற்பனைக்கு வரும் என்றாலும், இதற்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, 7 சீட்டரைப் பின்னாளில் கியா மோட்டார்ஸ் இந்தியா களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  அடுத்த தலைமுறை க்ரெட்டாவை, இதே ப்ளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டுதான் ஹூண்டாய் தயாரிக்க உள்ளது என்பது கொசுறு தகவல். 

- ராகுல் சிவகுரு.
 
 

 

TAGS :   KIA MOTORS, SP CONCEPT, COMPACT SUV, INDIA, 2018 DELHI AUTO EXPO, HYUNDAI, SOUTH KOREA, ANDHRA PRADESH, PETROL, DIESEL, MARUTI SUZUKI, PREMIUM SEGMENT.