ராயல் என்ஃபீல்டு பைக்கில் வைப்ரேஷனைக் குறைக்க ஒரு வழி!
Posted Date : 06:02 (02/03/2018)
Last Updated : 06:03 (02/03/2018)

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக் பட்டியலில் முன்னணியில் இருப்பது ராயல் என்ஃபீல்டுஇந்தப் பெயரை உச்சரிக்கும்போதெல்லாம் யாராவது வந்து, `அட ஏம்பா இந்த வண்டியை வாங்கிக்கிட்டு... 60-க்கு மேல போக முடியலை. ஓவரா அதிருது' என்று புலம்புகிறார்கள். ராயல் என்ஃபீல்டு பைக்கை தெரியாமல் வாங்குபவர்களைவிட தெரிந்து வாங்குபவர்களின் புலம்பல்தான் அதிகம். இந்தத் தேவையற்ற அதிர்வுகளைக் கட்டுப்படுத்த, கார்பெர்ரி மோட்டார் சைக்கிள்ஸ் (carberry motorcycles) நிறுவனம் `வைபரேஷன் ரிடக்‌ஷன் (vibration reduction plate) பிளேட்' என்ற இன்ஜின் பாகத்தைப் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. 

 

ராயல் என்ஃபீல்டு/royal enfield

பொதுவாகவே மற்ற பைக்குகளைவிட ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் வைப்ரேஷன் அதிகம் இருக்கும். இதற்குக் காரணம், இதன் பழைய இன்ஜின் டிசைன். ராயல் என்ஃபீல்டு இன்ஜின்களில் `போர்' எனப்படும் சிலிண்டரின் துவார அளவைவிட `ஸ்ட்ரோக்' எனப்படும் பிஸ்டன் மேலும்கீழும் போய் வரும் தூரம் அதிகம். இதனால், இன்ஜினின் பிஸ்டனில் தேவையற்ற விசைகள் உருவாகின்றன. இந்த விசைதான் வைப்ரேஷனாக மாறுகிறது. பிஸ்டனில் உருவாகும் இந்தத் தேவையற்ற விசை, மனிதனுக்கு மனஅழுத்தம்போல கிரான்க் ஷாஃப்டுக்கும் அழுத்தத்தைக் கொடுத்து மேலும் சில பிரச்னைகளை உருவாக்குகிறது. இன்ஜின் வால்வுகளை இயக்க உதவும் கேம் வீலுக்கும் பவர் கிரான்க் ஷாஃப்டில் இருந்து போவதால் கேம் வீல் அதிகமாகத் தேய்வது மட்டுமல்லாமல், வால்வ் டேப்பட்டில் இருந்து `டப் டப்' என்று கடுப்பைக் கிளப்பும் சத்தத்தையும் உருவாக்குகிறது.

கிரான்க் ஷாஃப்ட்டை சரியான முறையில் வடிவமைப்பதால் தேவையற்ற விசைகள் கிரான்க் ஷாஃப்டில் இருந்து பைக்கின் மற்ற பாகங்களுக்குப் பயணிப்பதைத் தவிர்க்கலாம். ஆனால், 10 வருடங்களுக்குமேல் விற்பனை செய்துவரும் இன்ஜினின் வடிவமைப்பை மாற்றுவது என்பது, எந்த ஒரு நிறுவனத்துக்கும் ஆகாத காரியம். அதிலும், விற்பனை செய்யப்பட்ட பைக்குகள் ஆயிரக்கணக்கில் இருக்கும்போது, வடிவமைப்பை மாற்றுவதெல்லாம் கடினமான காரியம். 

 

 

இதற்காகத்தான் கார்பெர்ரியின் வைப்ரேஷன் ரிடக்‌ஷன் பிளேட். இன்ஜினின் வலதுபக்கம் இருக்கும் கிரான்க் கேஸைக் கழட்டி க்ளட்சுக்குக் கீழே கேம் கியர்களை மறைத்திருக்கும் பிளேட்டை எடுத்துவிட்டு, கார்பெர்ரியின் வைப்ரேஷன் ரிடக்‌ஷன் பிளேட்டைப் பொருத்த வேண்டும். இந்தப் பிளேட், கிரான்க் ஷாஃப்டில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைத்து, பவரை சீராகக் கடத்த உதவும். இதன்மூலம் 60 முதல் 100 கி.மீ வேகத்தில் போகும்போது ஏற்படும் அதிர்வுகள் குறைகின்றன. வால்வுகளை இயக்கும் கேம் வீலில் ஏற்படும் அழுத்தத்தையும் இது குறைப்பதால் இன்ஜினில் இருந்துவரும் தேவையில்லா `டப் டப்' சத்தத்தையும் நிறுத்திவிடும். அழுத்தத்தைச் சீரமைப்பதால் வலதுபக்கம் உள்ள பியரிங் மற்றும் கேம் வீ ல் தேய்வதையும் குறைக்கும். இந்தப் பிளேட்டின் விலை 3,000 ரூபாயாக நிர்ணயித்துள்ளது கார்பெர்ரி. இந்தப் பிளேட்டை கார்பெர்ரியின் இணையதளத்தில் ஆர்டர் செய்து வாங்கலாம். 

carberry virbartion reduction plate

புராடெக்டை வெளியிட்ட சில நாள்களிலேயே ஆர்டர்கள் குவிந்து பிளேட்டுகள் காலியாகவிட்டதாக கார்பெர்ரி நிறுவனத்தினர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தனர். தற்போது மீண்டும் ஸ்டாக் வந்துவிட்டதால் தேவை உள்ளவர்கள் வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர். இந்த வைப்ரேஷன் ரிடக்‌ஷன் பிளேட்டுகளை, தற்போதுள்ள ராயல் என்ஃபீல்டின் 350சிசி, 500சிசி மற்றும் 535சிசி இன்ஜினில் பயன்படுத்த முடியும். பழைய என்ஃபீல்டு இன்ஜினில் பயன்படுத்த முடியாது.

-ரஞ்சித் ரூஸோ

TAGS :   royal enfield