டாடா மோட்டார்ஸின் புது ஜெஸ்ட்
Posted Date : 11:10 (07/03/2018)
Last Updated : 11:14 (07/03/2018)

இண்டிகாவுக்குப் பிறகு டாடாவுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பைக் கொடுத்த கார்களில் ஒன்று ஜெஸ்ட். இப்போதெல்லாம் டாடா கார்களின் தரம் வேற லெவல், அதற்கு ஜெஸ்ட்தான் ஆரம்பம். அதிலும், Global NCAP டெஸ்ட்டில் 4 ஸ்டார் வாங்கிய பிறகு டாடாவின் பாதுகாப்புத் தரமும் அடுத்த லெவலுக்குப் போனது. க்ராஷிங் டெஸ்ட்டில் அதிக மார்க் வாங்கிய முதல் இந்திய பிராண்டும் டாடா ஜெஸ்ட். இதுவரை 85000 ஜெஸ்ட் கார்கள் விற்பனையாகிவிட்டன.


85,000-மாவது ஜெஸ்ட் விற்பனையைக் கொண்டாடும் விதமாக 'Zest Premio' எனும் புதிய வேரியன்ட்டை அறிமுகப்படுத்தியது டாடா மோட்டார்ஸ். ஜெஸ்ட் ப்ரீமியோ டீசல் இன்ஜினோடு மட்டுமே வருகிறது. சாதாரண ஜெஸ்ட்டைக் காட்டிலும் இதில் கூடுதலாக 13 அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அனைத்துமே வெளிப்புற மாறுதல்கள் மட்டுமே. ஓட்டுதல் தரம் மற்றும் பெர்ஃபார்மன்ஸில் எந்த மாற்றமும் இல்லை. Titanium grey மற்றும் Platinum silver என்று இரண்டு நிறத்தில் மட்டுமே வரும் ஜெஸ்ட் ப்ரீமியோவில், பூட் லிட், ரியர் வியூ மிரர், ரூஃப் மற்றும் hood strip ஆகிய இடங்களில் பளபளப்பான பியானோ கறுப்பு நிறம் பூசப்பட்டுள்ளது. எக்ஸ்ட்ராவாக அதே நிறத்தில் Spoiler-ம் இருக்கிறது. அதற்குக் கூடுதல் பணம் செலுத்த வேண்டும். காரின் உள்பகுதியில், ப்ரீமியோ பெயர் பொருத்தப்பட்ட ஸ்ட்ரிப் டிசைனோடு புதிய சீட் கவர் வருகிறது. டேஷ்போர்டில் Tan finish நிறம் சேர்க்கப்பட்டுள்ளது. ப்ரீமியோ காரில் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், நேவிகேஷன் மற்றும் விலையுயர்ந்த ஹார்மன் ஸ்பீக்கர்களுடன் வருகிறது. 
 

ஜெஸ்ட்டின் 1.3 லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி, 75bhp பவரும், 19.4kgm டார்க்கும் தருகிறது. டாடா டிகோர், காம்பேக்ட் செடான் வரிசையில் வந்தாலும், அதில் இருப்பது வெறும் 1.05 லிட்டர் டீசல் இன்ஜின்தான். மிட் வேரியன்ட்டாக வந்துள்ள ஜெஸ்ட் ப்ரீமியோ, மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், ஃபோக்ஸ்வாகன் ஏமியோ கார்களுடன் போட்டி போடுகிறது. ஜெஸ்ட் ப்ரீமியோவின் சென்னை எக்ஸ் ஷோரூம் விலை 7,46,800 ரூபாய்.
 
- ரஞ்சித் ரூஸோ.
TAGS :   Tata Zest premio, Tata motors, tata new edition