ராயல் என்ஃபீல்டின் முதல் வின்டேஜ் ஸ்டோர் நம்ம சென்னையில்...
Posted Date : 20:11 (08/03/2018)
Last Updated : 17:16 (10/03/2018)
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது முதல் 'Vintage Store'  எனும்  ஷோரூமை சென்னையில் திறந்துள்ளது. இந்த ஷோரூமின் சிறப்பம்சம் இங்கு பயன்படுத்தப்பட்ட பழைய ராயல் என்ஃபீல்டு பைக்குகளை விற்கவும், வாங்கவும் முடியும். அதுமட்டுமல்லாமல் பழமையான ராயல் என்ஃபீல்டு பைக்குகளை இங்கு சர்வீஸ் செய்து புதிய பாகங்களை பொருத்தி புதிதாக மாற்றமுடியும். இந்தியாவிலேயே முதல் முறை சென்னையில் உள்ள பள்ளிக்கரனையில் திறக்கப்பட்டுள்ளது இந்த ஷோரூம்.
 
 

வின்டேஜ் ஸ்டோர் மூலம் வாங்கும் பைக்குகளின் தரத்தை 92 பரிசோதனைகளின் மூலம் ராயல் என்ஃபீல்டு மெக்கானிக்குகளே உறுதிசெய்வதுமட்டுமல்லாமல், வாரன்டியும் தருகின்றனர்.  3 வருட பழைய பைக்குகளுக்கு 3 சர்வீஸ்களும், மற்ற பைக்குகளுக்கு 2 சர்வீஸ்களும் இலவசமாக தருகின்றனர். மேலும், வாங்கும் பழைய பைக்குகளுக்கும், ரீஸ்டோர் செய்யப்படும் பைக்குகளுக்கும் பெயர் மாற்றம், RC புதுப்பித்தல் போன்ற பைக்கின் பதிவு வேலைகளையும் இவர்களே முடித்துக்கொடுக்கிறார்கள். இங்கு வாங்கும் பயன்படுத்தப்பட்ட பைக்குகளுக்கு கடன் உதவிகளும் ஏற்பாடு செய்யப்பட்டும். சென்னையில் திறந்ததை போன்று இந்த ஆண்டில் மேலும் 10 நகரங்களில் வின்டேஜ் ஸ்டோர் திறக்கவுள்ளதாக ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இந்திய வர்த்தக தலைவர் ஷாஜி கோஷி கூறினார்.
 

1901-ம் ஆண்டு முதல் பைக்குகளை தயாரித்து விற்பனை செய்துவரும் ராயல் என்ஃபீல்டுக்கு இந்தியாவில் மட்டுமே தற்போது 700 விற்பனையகங்கள் உள்ளன. மேலும், இந்தியாவில் 3 மில்லியன் ராயல் என்ஃபீல்டு பைக்குகள் ஓடிக்கொண்டிருப்பதாக சொல்கின்றனர் இந்நிறுவனத்தினர். இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு பைக்கிற்கு ஃபேன்ஸ் அதிகம். பழைய ராயல் என்ஃபீல்டு பைக்குகளை தனிநபர் சர்வீஸ் சென்டர்கள் மூலம் பலர் சர்வீஸ் செய்தும், புதிய பாகங்களை பொருத்தி மீண்டும் புதிதாக மாற்றிக் கொண்டும் உள்ளனர். பழைய ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு பாகங்கள் கிடைப்பது கடினம். ஆனால், வின்டேஜ் ஸ்டோர் மூலம் வரும் பைக்குகளுக்கு தற்போது தயாரிப்பில் இல்லாத பாகங்களை கூட இந்நிறுவனம் தயாரித்து தருவதற்கு உத்தேசமாக உள்ளதாக கூறினார் ஷாஜி கோஷி. விற்பனை எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் கடைவிரிக்கும் ராயல் என்ஃபீல்டின் விற்பனை டீமுக்கு வாழ்த்துகள்.
 
- ரஞ்சித் ரூஸோ
TAGS :   royal enfield vintage store