7.4 லட்சத்துக்குக் களமிறங்கியது, ஸ்வராஜ் 963FE டிராக்டர்!
Posted Date : 17:10 (10/03/2018)
Last Updated : 17:15 (10/03/2018)


யுட்டிலிட்டி வாகனங்களைத் தயாரிப்பதில் பெயர்பெற்ற மஹிந்திரா நிறுவனத்துக்குச் சொந்தமானதுதான். டிராக்டர்களைத் தயாரிக்கும் ஸ்வராஜ் நிறுவனம். 60 முதல் 75HP செயல்திறனைக் கொண்ட 963FE எனும் புதியரக 2WD டிராக்டரை, 7.40 லட்ச ரூபாய்க்கு (அறிமுக இந்திய எக்ஸ்-ஷோரூம் விலை) இந்நிறுவனம் களமிறக்கியுள்ளது. அடுத்த 4 மாதத்தில், இந்த டிராக்டரின் 4WD மாடலை, இந்தியா முழுக்க 875 டீலர்களைக் கொண்ட ஸ்வராஜ் அறிமுகப்படுத்தும் முடிவில் இருக்கிறது.
 
 
 
 
பவர்ஃபுல் தயாரிப்பாகப் பொசிஷன் செய்யப்பட்டிருக்கும் (31.5kmph டாப் ஸ்பீடு) 963FE-ன் வடிவமைப்பு, R&D மற்றும் உற்பத்தி பணிகள், மொகாலியில் இருக்கும் இந்நிறுவனத்தின் தொழிற்சாலையில், 100 கோடி ரூபாய் முதலீட்டில் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, தமிழ்நாடு, சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இந்த டிராக்டர் முதற்கட்டமாகக் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள்ளாக இந்தியா முழுவதும் 963FE டிராக்டர் கிடைக்கும் எனத் தெரிகிறது. ''400 மணிநேரம் இயக்கியதற்கு பின்பு ஒருமுறை இந்த டிராக்டரை சர்வீஸ் செய்தாலே போதுமானது. தவிர விவசாயிகள் விவசாயிகளுக்காகத் தயாரித்திருக்கும் டிராக்டர் இது'' என ஸ்வராஜ் பிரகடனப்படுத்துகிறது.
 
 
 

''போட்டியாளர்களைவிட ஸ்வராஜ் முன்னணியில் இருப்பதற்கு, வாடிக்கையாளர்கள் அதன் தயாரிப்புகள்மீது கொண்டிருக்கும் பிணைப்புதான் காரணம். 'Make In India' கோட்பாடுக்கு ஏற்ப செயல்படுவதுடன், நம்பகத்தன்மை வாய்ந்த பிராண்டாகவும் இருக்கிறோம். 963FE டிராக்டர் வாயிலாக, பலவிதமான விவசாயத் தேவைகளுக்கு ஏற்ற டிராக்டர்களை ஸ்வராஜ் கொண்டிருப்பது புலனாகிறது'' என்றார், மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பவன் கோயங்கா. இவரைத் தொடர்ந்து பேசிய ஸ்வராஜ் நிறுவனத்தின் முதன்மை இயக்குனர் விரேன் பாப்லி கூறியதாவது,
 
 
 
 
''எங்களின் புதிய ப்ளாட்ஃபார்மில், 60 முதல் 75HP செயல்திறனைக் கொண்ட டிராக்டர்களைத் தயாரிக்கத் தொடங்கி உள்ளோம். இதன் வெளிப்பாடாக வந்திருக்கும் 963FE, பெரிய நிலப்பரப்பைக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்குப் பொருத்தமாக இருக்கும். சிங்கிள் பீஸ் பானெட், 12F+2R ஸ்பீடு கியர்பாக்ஸ், 2.2 டன் எடை சுமக்கும் திறன்கொண்ட ஹைட்ராலிக் பம்ப் போன்ற பல வசதிகளைக் கொண்டிருக்கும் 963FE, 'Mera Swaraj' என்கின்ற கூற்றுக்கு ஏற்ப இருக்கும்'' என்றார். நியூட்ரலில் இருக்கும்போது மட்டுமே இன்ஜினை ஸ்டார்ட் செய்யமுடியும் என்பதால், தேவையற்ற விபத்துகளைத் தவிர்க்க வழி செய்திருக்கிறது ஸ்வராஜ்.
 

 
 
மல்ட்டி ரிஃப்ளெக்டர் ஹெட்லைட்களுடன் ஸ்டைலாக டிசைன் செய்யப்பட்டிருக்கும் இந்த டிராக்டரில். Single Lever வழிமுறை (540 PTO, 540 Economic PTO, Multi Speed Forward with Reverse PTO, Easy Hitch, Tractor Forward & Reverse) உள்ளது. இதனால் டிராக்டரைப் பயன்படுத்தி அறுவடை செய்வது எளிதாக இருக்கும் எனலாம். இதற்கேற்ப பொசிஷன் செய்யப்பட்டிருக்கும் ஆக்ஸிலரேட்டர் மற்றும் பிரேக் பெடல்கள் மற்றும் பக்கவாட்டில் இயங்கும் கியர் லீவர் ஆகியவை துணைநிற்கின்றன.
 
 
 
 
சர்வீஸ் ரிமைண்டர், லோ பேட்டரி மற்றும் ஹை டெம்ப்ரேச்சர் வார்னிங் இண்டிகேட்டர்களை உள்ளடக்கிய அனலாக் - டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், டிஃப்ரன்ஷியல் லாக், Casted Front Axle Bracket, சேஃப்ட்டி ஸ்விட்ச், சொகுசான சீட் ஆகிய வசதிகள் இருக்கின்றன. 963FE டிராக்டரில் புதிய SE4 Naturally Aspirated இன்ஜின் - Synchromesh கியர்பாக்ஸ் கூட்டணி பொருத்தப்பட்டுள்ளது. இது 60HP பவர் மற்றும் 22.8kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது என்பதுடன், 0.5kmph Creep Speed வழங்கப்பட்டிருப்பது பெரிய ப்ளஸ். போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது 15% கூடுதல் டார்க் கிடைப்பதால், Rotary Tillers, MB plough, TMCH, Potato Planter, Dozers, Balers, Banana Mulchers போன்ற பணிகளைச் செய்வது சுலபமாக இருக்கும் எனலாம்.

 
 - ராகுல் சிவகுரு.
 
 
TAGS :   MAHINDRA, SWARAJ, TRACTORS, 963FE, MAKE IN INDIA, FARMERS, PUNJAB, AP, TELENGANA, CHATTISGARH, TAMILNADU, 14 SPEED GEARBOX, NATURALLY ASPIRATED ENGINE, 400 HRS, SERVICE INTERVAL.