நாளை வெளிவருகிறது முற்றிலும் புதிய அப்பாச்சி RTR 160 - என்ன எதிர்பார்க்கலாம்? #BornOfAChampion #TVSRacing
Posted Date : 13:06 (13/03/2018)
Last Updated : 13:16 (13/03/2018)

 

கடந்த ஆண்டைத் தனது பவர்ஃபுல் - பிரிமியம் பைக்கான அப்பாச்சி RR 310 உடன் நிறைவு செய்த டிவிஎஸ், 2018-ம் ஆண்டை என்டார்க் 125 ஸ்கூட்டருடன் அதிரடியாகத் துவக்கியது. இந்நிலையில் வருகின்ற மார்ச் 14, 2018 அன்று, ஒரு புதிய பைக்கை இந்நிறுவனம் களமிறக்க உள்ளது. டிவிஎஸ்ஸின் இணையதளம் மற்றும் சமூக வலைதளப் பக்கங்களை வைத்துப் பார்க்கும்போது,
 
 
 
 
அது முற்றிலும் புதிய அப்பாச்சி RTR 160 பைக்காக இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம் எனத் தெரிகிறது! ஏனெனில் கடந்த ஆண்டில் RR 310 பைக்குடன், அப்பாச்சி RTR 160 பைக்கின் ஸ்பை படங்களும் இணைய உலகில் அதிகமாகப் பகிரப்பட்டன. எப்படி இருக்கப்போகிறது புதிய அப்பாச்சி RTR 160?
 
 
டிசைன் எப்படி இருக்கும்?
 
இணையத்தில் பரவிய ஸ்பை படங்களை வைத்துப் பார்க்கும்போது, அது 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த அப்பாச்சி RTR 200 பைக்கைப் போன்ற தோற்றத்தைக் கொண்டிருப்பது புரிகிறது. இன்னும் சொல்லப்போனால், எப்படி பல்ஸர் NS200 பைக்கிலிருந்து NS160 பைக் உருவானதோ, அதே பாணியைப் பின்பற்றித்தான் அப்பாச்சி RTR 160 பைக்கின் வடிவமைப்பு பணிகள் நடைபெற்றிருக்கும் என்பதை யூகிக்கமுடிகிறது.
 
 
 
 
எனவே எல்ஈடி DRL உடனான ஹெட்லைட், டிஜிட்டல் மீட்டர், பெட்ரோல் டேங்க், பாடி பேனல்கள், எல்ஈடி டெயில் லைட், ஸ்விட்ச் கியர், இண்டிகேட்டர்கள், ரியர் வியூ மிரர்கள், மோனோஷாக் சஸ்பென்ஷன், டபுள் பேரல் எக்ஸாஸ்ட், ஸ்ப்ளிட் கிராப் ரெயில் போன்ற அம்சங்கள், அப்படியே அப்பாச்சி RTR 200 பைக்கின் ஜெராக்ஸ்தான்! இதனுடன் தற்போது விற்பனையில் இருக்கும் அப்பாச்சி RTR 160 பைக்கின் சில பாகங்களையும், புதிய பைக்கில் காண முடிகிறது. 6 ஸ்போக் அலாய் வீல்கள், டெலிஸ்கோபிக் ஃபோர்க், சிங்கிள் பீஸ் சீட், Remora டியூப்லெஸ் டயர்கள் ஆகியவற்றை, இதற்கான உதாரணங்களாகச் சொல்லலாம். 
 
 
என்னென்ன வித்தியாசங்கள்?
 
அப்பாச்சி சீரிஸ் பைக்கின் தனித்துவமான அம்சங்களுள் ஒன்றாக இருப்பது ஸ்ப்ளிட் ஹேண்டில்பார். அதை சொகுசான ரைடிங் புதிய அப்பாச்சி RTR 160 பைக் தியாகம் செய்துவிட்டதோ எனத் தோன்றுகிறது. ஆம், இந்தப் புதிய அப்பாச்சியில் இருக்கப்போவது, அப்பாச்சி 150 பைக்கில் இருந்ததுபோன்ற சிங்கிள் பீஸ் ஹேண்டில்பார்தான் மக்களே! மேலும் அப்பாச்சி RTR 200 பைக்குடன் ஒப்பிடும்போது, அப்பாச்சி RTR 160 பைக்கின் பேட்டரி மற்றும் ஏர் ஃபில்டர் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டிருக்கும் பாடி பேனல், சில்வர் நிறத்துக்கு மாறியிருக்கிறது.
 
 
 
 
டபுள் க்ரெடில் ஃப்ரேம் மற்றும் ஆயில் கூலர் அமைப்பு ஆகியவை, அப்பாச்சி RTR 200 பைக்கிலிருப்பது போலவே இருந்தாலும், அவை திறன் குறைவான அப்பாச்சி RTR 160 பைக்குக்கு ஏற்ப ரீ-டியூன் செய்யப்பட்டிருக்கலாம். ஸ்பை படங்களில் இருந்த பைக், பல்ஸர் NS160 போலவே முன்பக்கம் டிஸ்க் மற்றும் பின்பக்க டிரம் என்கிற பிரேக் அமைப்பைக் கொண்டிருந்தது. ஆனால் பின்னாளில், பின்பக்க டிஸ்க் பிரேக் ஆப்ஷனலாக வழங்கப்படலாம்.
 
 
இன்ஜின் மாறியிருக்கிறதா?
 
அப்பாச்சி RTR 180 பைக்கின் இன்ஜினை அடிப்படையாகக் கொண்டு உருவானதுதான், அப்பாச்சி RTR 200 பைக்கில் இருக்கும் இன்ஜின்! எனவே 15.1bhp பவர் மற்றும் 1.3kgm டார்க்கை வெளிப்படுத்தும் தற்போதைய அப்பாச்சி RTR 160 பைக்கின் இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணியை எடுத்துக் கொண்டு, 4 வால்வ் - ஆயில் கூலர் எனக் காலத்துக்கு ஏற்ற முன்னேற்றங்களை அதில் டிவிஎஸ் செய்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
 
 
பல்ஸர் NS160 பைக்கில் இருக்கும் 160.3 சிசி இன்ஜின், 4 வால்வ் - ஆயில் கூல்டு - DTSi - கார்புரேட்டர் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் செட்-அப்பைக் கொண்டிருப்பதை, இங்கே குறிப்பிட்டாக வேண்டும். அப்பாச்சி RTR 200 பைக்கிலேயே 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இல்லாத நிலையில், புதிய அப்பாச்சி RTR 160 பைக்கில் அது வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவுதான். பல்ஸர் போலவே இங்கும் கிக்-ஸ்டார்ட் உண்டு. என்றாலும், ஒருவேளை சர்ப்ரைஸாக A-RT க்ளட்ச் அமைப்பு இங்கே இருக்கலாம். 
 
 
விலை உயர்வு எவ்வளவு?
 
அப்பாச்சி RTR 200 பைக்கில் மேட் கலர்கள் இருக்கும் நிலையில், ஸ்பை படங்களில் காணப்பட்ட பைக், ரேஸிங் ஸ்ட்ரிப் உடன் கூடிய Gloss கலரைக் கொண்டிருந்தது. இப்போது விற்பனை செய்யப்படும் அப்பாச்சி RTR 160 பைக்கின் சென்னை எக்ஸ் ஷோரூம் விலை, 77,929 ரூபாய் முதல் 81,459 ரூபாய் வரை செல்கிறது. விரைவில் அறிமுகமாக இருக்கும் புதிய அப்பாச்சி RTR 160 பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை, எப்படியும் 5 ஆயிரம் ரூபாயாவது அதிகமாக இருக்கும் எனலாம். ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது,
 
 
 
 
200சிசி அப்பாச்சியில் இருந்து 160சிசி அப்பாச்சி பைக்கை வேறுபடுத்திக் காட்டுவதற்காகவும், அசத்தலான ஆரம்ப விலையை மனதில்வைத்தும், சில சமரசங்களை டிவிஎஸ் மேற்கொண்டிருப்பதை உணர முடிகிறது. பல்ஸர் NS160 தவிர சுஸூகி ஜிக்ஸர், ஹோண்டா ஹார்னெட், யமஹா FZ-V2.0 போன்ற ஸ்ட்ரீட் நேக்கட் 150-160சிசி பைக்குகளுடன் போட்டிபோட, மாடர்ன் அவதாரத்தில் வெளிவரப்போகும் அப்பாச்சி RTR 160, அதன் பலங்களைக் கொண்டிருக்கும் என்பதே பைக் ஆர்வலர்களின் ஏகோபித்த கருத்தாக இருக்கிறது.  
 
- ராகுல் சிவகுரு.
 
 
TAGS :   TVS, APACHE, RTR 160, FACELIFT, INDIA, BAJAJ PULSAR NS160, HONDA HORNET 160R, SUZUKI GIXXER, YAMAHA FZ V2.0, NAKED STREET BIKE, 160CC, 150CC, MONOSHOCK, DISK BRAKE, LED, DIGITAL METER, 5 SPEED GEARBOX, OIL COOLER, PERFORMANCE, MILEAGE