ராயல் என்ஃபீல்டு, டொமினார், டியூக் பைக்குகளுக்கு இன்ஷூரன்ஸ் அதிகரிக்கப்போகிறது
Posted Date : 17:59 (13/03/2018)
Last Updated : 19:00 (13/03/2018)

 

The Insurance Regulatory and Development Authority of India (IRDAI) என்பது இந்தியாவில் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களை ஒழுங்குமுறை படுத்த அமைக்கப்பட்டதுறையாகும். இத்துறை ஒவ்வொரு ஆண்டும் நாம் செலுத்தும் இன்ஷூரன்ஸ் ப்ரீமியத்தை முடிவு செய்யும். தற்போது 2018-19-ம் ஆண்டிற்கான மோட்டார் இன்ஷூரன்ஸ் ப்ரீமியம் வரையறுக்கப்பட்டுள்ளது. 

 

insurance


 
இந்தியாவில் Third Party இன்ஷூரன்ஸ் எனப்படும் மோட்டார் இன்ஷூரன்ஸ் வாகனங்களுக்குக் கட்டாயமானது. IRDAI-ன் விலை மாற்றத்தின் படி மாருதி ஆல்டோ 800, டட்ஸன் ரெடிகோ, ரெனோ க்விட், ஹூண்டாய் இயான் போன்ற 1000 சிசிக்கு குறைவான கார்களுக்கு  இன்ஷூரன்ஸ் தொகை ரூ.2055-ல் இருந்து 1850 ரூபாயாகக் குறைந்துள்ளது. ஆனால், இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் 1000 சிசி-க்கு அதிகமான இன்ஜின் உள்ள வாகனங்களுக்கு இன்ஷூரன்ஸ் தொகையில் எந்த மாற்றமும் அறிவிக்கப்படவில்லை. வின்டேஜ் கார்களை பொருத்தவரை, வின்டேஜ் மற்றும் க்ளாசிக் கார் க்ளப்பிடம் சரியான சான்றிதழ் வாங்கியிருந்தால் TP ப்ரீமியத்தின் விலை 50 சதவிகிதம் குறையும்.

இருசக்கர வாகனங்களைப் பொருத்தவரை 75 சிசி மற்றும் அதற்குக் குறைவான இன்ஜின் கொண்ட வாகனங்களுக்கு இன்ஷூரன்ஸ் விலை ரூ. 569-ல் இருந்து ரூ.427-ஆக குறைந்துள்ளது. மேலும், கே.டி.எம் டியூக் 390, டொமினார் 400, நின்ஜா 300, ராயல் என்ஃபீல்டு புல்லட் 500 போன்ற 350சிசி-க்கும் அதிகமான இன்ஜின் கொண்ட பைக்குகளுக்கு இன்ஷூரன்ஸ் விலை ரூ.1019-ல் இருந்து ரூ.2,323-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்பை விட இது இரண்டு மடங்கு அதிகமாகும்.  இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் 150 முதல் 350 சிசி இன்ஜின் கொண்ட பைக்குகளுக்கு TP இன்ஷூரன்ஸ் 11 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
 

 
 
 
டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் மின்சார ஆட்டோவுக்கு இந்த ப்ரீமியம் ரூ.1685-ல் இருந்து ரூ.1140-ஆக குறைகிறது. 6bhp வரை பவர் தரும் டிராக்டர்களுக்கு ரூ.653-ல் இருந்து ரூ.816-ஆக கூடுகிறது இந்த ப்ரீமியம். பொருட்களைக் கொண்டுபோகும் சரக்கு வாகனங்களுக்கும் இந்த ப்ரீமியம் அதிகரித்துள்ளது. 40,000 கிலோவுக்கு அதிகமான எடை கொண்ட வாகனங்களுக்கான TP ப்ரீமியம் ரூ.33,024-ல் இருந்து ரூ.39,299-ஆக அதிகரித்திருக்கிறது. 

இந்த Third Party ப்ரீமியத்தை சேர்த்தே நீங்கள் செலுத்தும் இன்ஷூரன்ஸ் தொகை கணக்கிடப்படுகிறது. விபத்தின்போது எதிர்தரப்பில் உள்ளவருக்கு ஏதும் சேதம் ஏற்பட்டால் அதற்கு நஷ்ட ஈடாகத் தரும் தொகை இந்த TP ப்ரீமியத்தில் இருந்து வரும் தொகைதான். பல இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வாங்கும் ப்ரீமியத்தை விட அதிகமாக நஷ்டஈடு செலுத்துவதாகவும், அதனால் குறிப்பிடும்படியான சில வாகனங்களுக்கு இதை அதிகப்படுத்தவேண்டும் என்று பல காலமாகக் கேட்டுவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விலை மற்றங்கள் இறுதியானது அல்ல. இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் கருத்து கேட்பதற்காக இவை வெளியிடப்பட்டுள்ளது. இந்த விலைமாற்றத்துக்கு கிடைக்கும் கருத்துக்களை முன்வைத்தே இறுதியான இன்ஷூரன்ஸ் ப்ரீமியம் முடிவுசெய்யப்படும். இந்த விலை மாற்றங்கள் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரலாம். 
 
- ரஞ்சித் ரூஸோ
 
TAGS :   insurance