ஆந்திராவில் வரப்போகிறது ஹீரோவின் புதிய தொழிற்சாலை
Posted Date : 11:32 (23/03/2018)
Last Updated : 11:32 (23/03/2018)


ஹீரோ மோட்டார்கார்ப் ஆந்திராவின் சித்தூரில் உள்ள ஶ்ரீ சிட்டியில் தனது 8-வது தயாரிப்பு தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டியுள்ளது. 1600 கோடி செலவில் உருவாகப்போகும் இந்த தொழிற்சாலை மூலம் ஹீரோ ஆண்டுக்கு 18 லட்சம் பைக்குகளை உருவாக்கப்போகிறது. 


ஹீரோ மோட்டார் கார்ப்


600 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தொழிற்சாலை மூலம் ஶ்ரீ சிட்டியில் 2000 வேலைகள் உருவாகும். மேலும் இங்கு அமையும் தொழிற்சாலையால் சுற்றி இருக்கும் பகுதிகளில் 10,000 வேலைவாய்ப்புகள் உருவாகவுள்ளதாக ஹீரோ மோட்டார்கார்ப் கூறியுள்ளது. 

தற்போது வரை ஹீரோவிடம் இந்தியாவில் 5 தொழிற்சாலைகளும், கொலம்பியா மற்றும் வங்கதேசத்தில் ஒரு தொழிற்சாலையும் என மொத்தம் 7 உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இதன் மூலம் ஆண்டுக்கு 92 லட்சம் பைக்குகளை உற்பத்தி செய்கிறது இந்நிறுவனம். தென் இந்தியாவில் முதல் முறை தனது தொழிற்சாலையை தொடங்கப்போகும் ஹீரே 2020-ம் ஆண்டு 1.1 கோடி பைக்குகள் உற்பத்தி செய்யக்கூடிய நிலையை அடைந்திருக்கும்... ஹீரோ  மோட்டார்கார்ப் தற்போது 9 பைக் மாடல்களும் 3 ஸ்கூட்டர் மாடல்களும் இந்தியாவில் விற்பனை செய்துவருகிறது. இன்னும் சில மாதங்களில் தனது 200சிசி பைக்குகளான Xtreme 200 மற்றும் Xpulse பைக்குகளையும் வெளியிடவுள்ளது இந்நிறுவனம். 

- ரஞ்சித் ரூஸோ.
 
TAGS :   ஹீரோ தொழிற்சாலை, ஆந்திரா தொழிற்சாலை