இந்தியாவுக்காக இணைந்த எதிரிகள்... சுஸுகி-டொயோட்டா ஒப்பந்தம்
Posted Date : 17:25 (29/03/2018)
Last Updated : 11:13 (30/03/2018)
 
ஜப்பானின் இரண்டு பெரும் ஆட்டோமொபைல் நிறுவனங்களான சுஸுகியும் டொயோட்டாவும் புதிய ஒப்பந்தம் ஒன்றைப் போட்டுள்ளன. அதன்படி இந்தியாவில் இரண்டு நிறுவனங்களும் சில மாடல் கார்களை பகிர்ந்துகொள்ளப்போகின்றன. 
 
 
மாருதி சுஸுகி - டொயோட்டா
 
 
மாருதி சுஸுகி தனது பெலினோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா மாடல்களை டொயோட்டா நிறுவனத்துக்காக உற்பத்திசெய்யும். டொயோட்டா தனது கரோலா காரை மாருதி சுஸுகிக்காக உற்பத்திசெய்யப்போகிறது. இவற்றில் முதல் கார் 2019-ன் இறுதியில் வரவுள்ளது. டொயோட்டாவும், மாருதியும் உற்பத்தி செய்யும் இந்த கார்களின் லோகோ மற்றும் இன்ஜினை மட்டும் மாற்றிவிட்டு காரை வெளியிடாமல், சில வடிவமைப்பு மாற்றங்களையும் செய்யவுள்ளார்கள். பெரும்பாலும் பம்பர், க்ரில், ஹெட் மற்றும் டெயில் லைட், இன்டீரியர், ரூஃப், காரின் நிறங்கள் போன்றவை புதிதாக வரலாம்.
 
 

 
இந்த காரிகளில் ஒரே இன்ஜின்-கியர்பாக்ஸ் கூட்டணிதான் இருக்கும். ஆனால், இதை இருநிறுவனங்களும் உருவாக்கும். ஒப்பந்தத்தின்படி மாருதிக்கு தரவிருக்கும் விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் பெலினோ காரிகளில் பெட்ரோல் மற்றும் ஹைப்ரிட் கார்களை டொயோட்டா தயாரிக்கவுள்ளது. இதே கார்களின் மின்சார மாடல்கள் எதிர்காலத்தில் வருவதற்கு வாய்ப்புள்ளது.
 
 இரண்டு நிறுவனங்களும் மாடல்களை பகிர்ந்துகொள்வதால் டொயோட்டாவுக்கு இந்தியாவில் விற்பனை செய்ய ப்ரீமியம் எஸ்யூவியும், ப்ரீமியம் ஹேட்ச்பேக் காரும் கிடைத்துவிடும். மாருதிக்கு ப்ரீமியம் செடான் கிடைத்துவிடும். தற்போது டெயோட்டாவின் சிறிய கார் மார்க்கெட் சரிவில் உள்ளது. மாருதிக்கு, ஹேட்ச்பேக் அளவுக்கு செடான் மார்க்கெட் வளரவில்லை. இந்தப் பகிர்வு இருநிறுவனங்களுக்கும் நல்லதுதான். மக்களுக்கு டொயோட்டாவின் தரம் மற்றும் சிறப்பம்சங்களில் மாருதி மாடல் கார்கள் கிடைத்துவிடும். மாருதிக்கு தேவையான ப்ரீமியம் செடாம் சந்தை கிடைத்துவிடும். இதில் அதிக பலன் டொயோட்டாவுக்குதான். மாருதியின் டீலர் நெட்வர்க் கிடைக்க வாய்ப்புள்ளது. கடந்த நவம்பர் மாதம்தான் மின்சார கார்களுக்கான தொழில்நுட்பத்தை இரு நிறுவனங்களும் பகிர்ந்துகொள்ளப்போவதாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இப்போது கார் மாடல்கள் பகிர்வு. இந்தியா எனும் சந்தைக்கா தொழில்முறை எதிரிகளாக இருக்கும் இரண்டு ஜப்பான் நிறுவனங்களும் சேர்ந்துவிட்டது. சவாலைச் சமாளிக்குமா இந்திய நிறுவனங்கள்?
 
 
 
- ரஞ்சித் ரூஸோ.
 
TAGS :   சுஸுகி-டொயோட்டா, மாருதி ஒப்பந்தம், இந்தியா