ஃபோர்ட் மஹிந்திரா கூட்டணியில் வரப்போகும் கார்கள் என்னென்ன தெரியுமா?
Posted Date : 19:02 (31/03/2018)
Last Updated : 19:12 (31/03/2018)


சென்ற வாரம் ஃபோர்டு மற்றும் மஹிந்திரா ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டது. கார் மாடல்களையும், இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸை பகிர்ந்துகொள்வதுதான் இந்த ஒப்பந்தத்தின் சாரம். இந்த இணைப்பின் மூலம் எந்தெந்த கார்கள் வரப்போகிறது என்று ஒரு செய்தி வந்துள்ளது.

 


ஆட்டோகார் இந்தியாவின் சமீபத்திய தகவலின் படி இரண்டு நிறுவனங்களும் இணைந்து 5 புதிய எஸ்யூவி கார்களையும், ஃபோர்ட் ஆஸ்பயரின் எலக்ட்ரிக் காரையும் உருவாக்கவுள்ளது. இரண்டு நிறுவனங்களும் காம்பேக்ட் எஸ்யூவி சந்தையை குறிவைத்துள்ளது. வெளிவரவிருக்கும் 5 கார்களில் 3 காம்பேக்ட் எஸ்யூவிகள்தான். 

#  ஃபோர்டு நிறுவனம் மாருதியின் விட்டாரா ப்ரெஸ்ஸாவுக்கு போட்டியாக ஒரு காரை தயாரிக்கப்போகிறது. 

#  அதை தொடர்ந்து எக்கோ ஸ்போர்ட்டின் அடுத்த தலைமுறையை உருவாக்கவுள்ளது. இந்த கார் 2020-ல் வெளிவரும் என்று எதிர்பார்ப்புகள் உண்டு. 

#  ஸாங்யாங் டிவோலி மாடலை அடிப்படையாக வைத்து ஒரு காரை ஃபோர்டுக்காக மஹிந்திரா உருவாக்கவுள்ளது. 

#  ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு போட்டியாக மிட் சைஸ் எஸ்யூவி ஒன்றையும் இந்நிறுவனம் உருவாக்கவுள்ளது. 

 மஹிந்திராவின் அடுத்த தலைமுறை XUV500 மாடலை அடிப்படையாக வைத்து ஃபோர்டு நிறுவனம் காம்பேக்ட் எஸ்யூவியை உருவாக்கவுள்ளது. W601 எனும் ப்ளாட்ஃபார்மில் உருவாகப்போகும் இந்த எஸ்யூவி மஹிந்திரா, ஃபோர்டு மற்றும் ஸாங்யாங்கின் கூட்டு முயற்சியாக இருக்கப்போகிறது.

 

 

வெளிவர இருக்கும் இந்த 5 கார்களையும் மஹிந்திராவும், ஃபோர்டும் தங்கள் நிறுவனத்தின் லோகோவை பொருத்தி, தன்னுடைய தனித்தன்மைக்கு ஏற்றமாதிரி சிறு வெளிப்புற மாற்றங்களை செய்து விற்பனை செய்யவுள்ளனர். ஒப்பந்தத்தின் படி மீதம் இருக்கும் ஃபோர்டு ஆஸ்பயர் எலக்ட்ரிக் மாடல் மஹிந்திராவின் மின்சார கார் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாகப்போகிறது. டெஸ்லா, ஜாகுவார் போன்று வியக்கவைக்கும் மின்சார காராக இல்லையென்றாலும், இந்தியாவில் முதல் தலைமுறை மின்சார வாகனம் வாங்குபவர்களை நிச்சயம் திருப்திப்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம். இன்ஜின் மற்றம் கியர்பாக்ஸை பொருத்தவரை ஃபோர்டு நிறுவனம் தயாரிக்கும் மிட் சைஸ் எஸ்யூவியில் மஹிந்திராவின் புதிய 2 லிட்டர் பிஎஸ்-6 டீசல் இன்ஜின் இருக்கப்போகிறது. மஹிந்திராவின் காம்பேக்ட் மாடல் கார்களில் ஃபோர்டின் டிராகன் இன்ஜின் வரப்போகிறது. இந்த ஒப்பந்தம் ஃபோர்டுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பினை தரும் அதே நேரத்தில் மஹிந்திராவுக்கு மற்ற நாடுகளில் நல்ல விற்பணையைத் தரும். 


- ரஞ்சித் ரூஸோ.

 

 

 

 

TAGS :   ஃபோர்டு, மஹிந்திரா, ஒப்பந்தம்