RTO அலுவலகத்தில் காரை பதிவு செய்ய தேவையில்லை. மத்திய அரசின் புது திட்டம்
Posted Date : 15:24 (02/04/2018)
Last Updated : 15:24 (02/04/2018)

நாம் ஒரு கார் வாங்கவேண்டும் என்றால் கார் உடன் தனியாக காசு கொடுத்து நம்பர் பிளேட் வாங்கவேண்டும். பின்பு கார் விற்பனையாளருக்குக் காசு கொடுத்து காரை ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பதிவு செய்யவேண்டும். கார் வாங்கும்போது அதற்கு வரி, பதிவு என்று சொல்லி 50,000 ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை வாங்குகிறார்கள் விற்பனையாளர்கள். இதற்கு முடிவு கட்டும்விதமாக மத்திய அரசு முயற்சி ஒன்றை எடுத்துள்ளது. 
 

இந்தியாவின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி PTI நிறுவனத்துக்குக் கொடுத்த தகவலின் படி, விரைவில் தயாரிப்பாளர்களே கார்களில் நம்பர் பிளேட்டை பொருத்தி பிறகு மெஷின் மூலம் நம்பரைப் பதிவுசெய்துவிடுவார்களாம். இதற்கான முயற்சி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 
 

காரை பதிவு செய்ய ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விலை இருக்கிறது. வாகனத்தைப் பதிவு செய்யும் வேலையை மாநில அரசே தங்களது வட்டாட்சியர் அலுவலகம் மூலம் செய்துவருகிறது. இதனால் காரின் விலை மாநிலத்துக்கு மாநிலம் மாறுகிறது. வாகனங்களைத் தயாரிப்பாளர்களே பதிவு செய்வதால் அதன் விலை மாற்றம் பெரிதும் மாறாது. நம்பர் பிளேட்டுக்கு என்று தனியாக விற்பனையாளர்களும் விலை கொடுக்க தேவையில்லை. தற்போது, நிதின் கட்கரி கூறியுள்ளது கார்களுக்கு மட்டுமே, டூ வீலர் மற்றும் கமர்ஷியல் வாகனங்களுக்கு என்ன நிலை என்பது தெரியவில்லை. சமீப காலமாக சாலை விபத்துக்களைக் குறைப்பதற்கும், காற்று மாசைக் கட்டுப்படுத்தவும் பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துவருகிறது. அதன்படி, நேற்று முதல் இரண்டு சக்கர வாகனங்களில் ஏபிஎஸ் கட்டாயமாக்கப்பட்டுவிட்டது. காற்று பைகள், ஏபிஎஸ், ஸ்பீடு அலர்ட், சீட் பெல்ட் அலர்ட் போன்ற வசதிகள் அனைத்து கார்களிலும் ஜூலை 2019 முதல் கட்டாயமாகிறது. ஏப்ரல் 2020 முதல் பிஎஸ் 6 இன்ஜின் தரக்கட்டுப்பாடு கட்டாயமாகிறது. வாகனங்களுக்கான க்ராஷ் டெஸ்ட் ரேட்டிங் கட்டாயமாக்கப்பட்டால் இந்தியாவின் கார்கள் உலகதரக்கார்களாக மாறிவிடும் என்பது உறுதி.
 
- ரஞ்சித் ரூஸோ.
 
TAGS :   கார் பதிவு