வெளிவந்துள்ளது டாடா H5X காரின் ஸ்பை படங்கள்... #SpyShots
Posted Date : 19:20 (03/04/2018)
Last Updated : 19:26 (03/04/2018)

 

 
நெக்ஸான், ஹெக்சா, ஜெஸ்ட் போன்று பல நல்ல கார்களை கொடுத்து அனைவரையும் அசத்துகிறது டாடா. சமீபத்தில் ஜெனிவா மோட்டார்ஷோவில் வைக்கப்பட்ட இ-விஷன் மின்சார செடான் கான்சப்டும், டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் வைக்கப்பட்ட H5X கான்சப்ட் காரும் மக்களை அதிகம் கவர்ந்தவை. கூகுளில் அதிகம் தேடப்பட்ட கார் என்று பட்டத்தையும் பெற்றது டாடா H5X. இந்த காரின் ஸ்பை படங்கள்தான் தற்போது வெளியாகியுள்ளது. 
 
 
டாடா H5X
(டாடா H5X. 5 சீட்டர் மாடல்)
 
 
இந்தப் படங்களில் இருப்பது ப்ரொடக்‌ஷன் ரெடி கார் இல்லை. இந்த காரின் தயாரிப்புகள் அடுத்த ஆண்டே தொடங்கவுள்ள நிலையில் தற்போது வெளியே சுற்றிக் கொண்டிருப்பது கான்சப்டுக்கு அடுத்த நிலையான ப்ரோட்டோ டைப் கார்கள். டாடாவின் கார் தொழிற்சாலை இருக்கும் பூனேவின் சக்கன் என்ற இடத்தில்தான் இந்தப் படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. H5X கார் டாடாவின் புதிய ப்ளாட்ஃபார்மான Optimal Modular Efficient Global Advanced (OMEGA) ப்ளாட்ஃபார்மில் தயாராகவுள்ளது. இது லான்ட்ரோவரின் L550 ப்ளாட்ஃபார்மை வைத்து உருவாக்கப்பட்டது. பெரிய முன்பக்கம், நேர்த்தியான க்ரில், முன் பக்கம் ஸ்கிட் பிளேட், பெரிய ஏர் டேம், விலை உயர்ந்த கூப்பே கார்களில் இருப்பதுபோன்ற பின்பக்க டிசைன், நெஞ்ச நிமிர்த்திக் காட்டுவதுபோல உள்ள ஷோல்டர் டிசைன் என கான்சப்டில் வைக்கப்பட்ட டிசைன் அப்படியே ப்ரொடக்‌ஷன் காரிலும் உள்ளது. இன்டிகேட்டருடன் இணைந்து செம்ம ஸ்லிம்மாக கான்சப்ட் காரில் வந்திருந்த ரியர் வியூ மிரர்கள் ப்ரோட்டோடைப்பில் இல்லை. சாதாரண மிரர்தான் உள்ளது. ப்ரோட்டோடைப் என்பதால் காரில் ஹெட் மற்றும் டெயில் லைட்டுகள் இல்லை.
 
 
டாடா H7X
 
(டாடா H7X. 7 சீட்டர் மாடல்)
 
 
டாடா H5X காரின் அளவு 4,575mm நீளம், 1,960 mm அகலம் மற்றும் 1,686 mm உயரமாகவும், வீல்பேஸ் 2,740mm அளவும் உள்ளது. ஸ்பை படத்தில் H5X காரின் அருகில் இருக்கும் மாருதி எஸ்-க்ராஸை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, H5X பெரிதாகவே இருக்கிறது. ஆட்டோ எக்ஸ்போவில் இந்த காரின் 5சீட்டர் மாடல் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது H7X என்று இதே காரின் 7 சீட்டர் மாடல் ஊட்டி பக்கம் உலாவரும் ஸ்பை படங்களும் வந்துள்ளது. மேலும், ஜீப் காம்பஸ் காரில் வரும் ஃபியாட்டின் அதே 2.0 லிட்டர் Multijet II டீசல் இன்ஜின் வரும் என்று தகவல். இந்த காரை அடுத்த ஆண்டு டாடா வெளியிடப்போவதாகக் கூறியிருக்கிறது.
 
கட்டுரை - ரஞ்சித் ரூஸோ.
படங்கள்: rushlane.com
TAGS :   டாடா H5X, டாடா மோட்டார்ஸ், டாடா கார்ஸ்