8000 ரூபாய் விலை உயர்ந்தது அப்பாச்சி RR310
Posted Date : 20:16 (03/04/2018)
Last Updated : 20:16 (03/04/2018)


டிவிஎஸ் தனது அப்பாச்சி RR310 பைக்கின் விலையை ரூ.8000 வரை உயர்த்தியுள்ளது இந்நிறுவனம். கடந்த டிசம்பர் மாதம் ரூ.2.05 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட அப்பாச்சி RR310 பைக்கின் விலையை எந்த அறிவிப்பும் இன்றி 8000 வரை உயர்த்தியுள்ளது. தற்போது இந்த பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.2.13 லட்சம். 
 
 
 
 
இந்தியாவில் RR310 இரண்டு விலைகளில் விற்பனைசெய்யப்படுகிறது. தமிழ்நாடு, டெல்லி, மஹராஷ்டிரா போன்ற மாநிலங்களில் ரூ.2.13 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலையிலும், கர்நாடகா, ஒரிசா, குஜராத், உத்தர பிரதேசம், சன்டிகர் போன்ற மாநிலங்களில் ரூ.2.23 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைசெய்யப்படுகிறது. டிவிஎஸ் பைக்குகளில் மிகவும் விலை உயர்ந்த மாடலாக இருக்கும் அப்பாச்சி RR310 பிஎம்டயிள்யூவுடன் இனைந்து உருவாக்கப்பட்டது. இதில் இருப்பது பிஎம்டயிள்யூ G310R பைக்கின் இன்ஜின்.  34bhp பவர் மற்றும் 27.3Nm டார்க் வெளிப்படுத்தும் இந்த பைக் 0-60 கி.மீ வேகத்தை 2.93 விநாடிகளில் தொட்டுவிடுகிறது. அதுமட்டுமல்ல, அதிகபட்சம் 160 கி.மீ வேகம் வரை போகக்கூடியது இந்த பைக்.
 
 
பல தொழில்நுட்பங்களுடன் நேர்த்தியான இன்ஜினியரிங்கில் உருவாக்கப்பட்ட RR310, டிவிஎஸ்ஸின் இமேஜை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறது. ஆனால், போட்டியாளர்களை ஒப்பிடுகையில் இதன் விலை மிகவும் அதிகம். சந்தையில் போட்டிபோடக்கூடிய விலையை டிவிஎஸ் வைத்திருந்தால் இந்நேரம் இந்த பைக்கின் விற்பனை உச்சம்தொட்டிருக்கும். தற்போது, பைக்கின் விலையை உயர்த்தியிருப்பதால் இதை விட பவர், தொழில்நுட்பம் என்று அனைத்திலுமே அதிகப்படியாக இருக்கும் டியூக்/RC390 பைக்குகளுடன் இருக்கும் விலை வித்தியாசம் குறைந்துவிட்டது. இதனால் அப்பாச்சி RR310 பைக்கின் விற்பனை பாதிக்கும். விலை உயர்ந்த பிறகு தற்போது RR310 பைக்கின் விலை தோராய ஆன்-ரோடு விலை 2.40 லட்ச ரூபாய்.

- ரஞ்சித் ரூஸோ.
 
TAGS :   டிவிஎஸ் அப்பாச்சி