விற்பனைக்கு வந்துள்ளது மெர்சிடீஸ் GLS காரின் கிராண்ட் எடிஷன்
Posted Date : 13:22 (05/04/2018)
Last Updated : 13:24 (05/04/2018)

மெர்சிடீஸ் தனது GLS கார்களில் அதிக வசதிகள் கொண்ட கிராண்ட் எடிஷன் எனும் புதிய லிமிடட் எடிஷன் வேரியன்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. GLS 350d டீசல் மற்றும் GLS 400 பெட்ரோல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களில் வரும் இந்த மாடல், தற்போதைய மாடலை விட 4 லட்சம் வரை கூடுதல் விலை. மெர்சிடீஸ் தனது புதிய கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய முன்வந்துள்ளது. இந்தியாவில் இந்த கிராண்ட் எடிஷன் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.86.90 லட்சம். 

மெர்சிடீஸ் GLS

GLS கிராண்ட் எடிஷன் காரில் ஹெட்லைட் ஹவுஸிங்கில் க்ரோம் நிறமாக இருந்த LED லைட்டை சுற்றிய வலையங்கள் இப்போது கருப்பு நிறமாக மாறியுள்ளது. 90 கி.மீ அதிகமான வேகத்தில் கார் போகும் போது ஆட்டோமெடிக்காக அதிக வெளிச்சத்தைத் தரும்படி பனி விளக்குகள் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அலாய் வீல்களும் கருப்பு நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. போனட்டின் மேல் இருக்கும் ஃபின்ஸ் தனித்துக் காட்சியளிக்கும் வகையில் க்ரோம் வண்ணம் பூசப்பட்டுள்ளது. காரில் கிராண்ட் எடிஷன் என்று ஒரு சில இடங்களில் மெடல் குத்தியது போன்று பேட்ஜ் பொருத்தப்பட்டுள்ளது. இதுவரை GLS கார்களில் இல்லாத புதிய நிறங்களுடன் சேர்த்து Citrine brown metallic, Designo diamond white bright, Cavansite blue metallic, Obsidian black metallic, Iridium silver metallic மற்றும் Tenorite grey metallic என மொத்தம் 6 நிறங்களில் இந்த எடிஷன் கிடைக்கும். 

மெர்சீடிஸ் நிறுவனத் தலைவர் ரோலண்ட் ஃபோல்கர்

காரின் உள்பகுதி பென்ஸ் S-class காருக்கு நிகரான வசதிகளோடு வந்துள்ளதாகக் கூறுகிறது மெர்சிடீஸ். நப்பா லெதர் போர்த்தப்பட்ட ஹீட்டட் 3 ஸ்போக் ஸ்டியரிங் வீல், போடல் ஷிஃப்டர்கள், 12 விதமாக வேலைசெய்யும் கார்-கீ, நப்பா லெதர் ஏப் பேக் கவர்கள், புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் என சில புதிய விஷயங்கள் உள்ளன. ஆப்ஷனாக மட்டுமே வந்துகொண்டிருந்து ரியர் சீட் என்டர்டெயின்மென்ட் சிஸ்டம் இந்த காரில் கட்டாயமாக்கப்பட்டுவிட்டது. ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்டிராய்ட் ஆட்டோ வசதிகள் கொண்ட 7 இன்ச் HD டச் ஸ்கிரீன்கள் சீட்டின் பின்பக்கம் உள்ளது. காரின் இன்ஜின் மற்றும் ஓட்டுதல் தரத்தில் எந்த மாற்றமும் இல்லை. GLS 350d டீசல் மாடல் 258bhp பவரும் 620Nm டார்க்கும் தருகிறது. GLS 400 பெட்ரோல் கார் 333bhp பவரும் 480Nm டார்க்கும் தருகிறது. இரண்டுமே 3.0 லிட்டர் V6 இன்ஜின்கள்தான். மெர்சிடீஸின் 9 ஸ்பீடு ஆட்டோமெடிக் டிரான்ஸ்மிஷனும், 4 மேட்டிக் எனும் 4*4 தொழில்நுட்பமும் கூட்டாக வருகிறது. தேவைக்கு ஏற்ப ஆட்டோமெடிக்காக சஸ்பென்ஷனை மாற்றிக்கொள்ளும் மெர்சிடீஸின் Airmatic தொழில்நுட்பமும் இந்த காரில் உள்ளது. 

இந்தக் கார்களுக்கு மெர்சிடீஸ் 2 வருட சர்வீஸ் பேக்கேஜையும் தருகிறது. அதன் விலை பெட்ரோல் காருக்கு ரூ.75,000 மற்றும் டீசல் காருக்கு 1.04 லட்சம் ஆகும்.

- ரஞ்சித் ரூஸோ.
 
TAGS :   மெர்சிடீஸ்