புதிய ஹோண்டா அமேஸின் முன்பதிவு தொடங்கிவிட்டது
Posted Date : 12:49 (06/04/2018)
Last Updated : 12:49 (06/04/2018)

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட 2-ம் தலைமுறை ஹோண்டா அமேஸ் காரின் முன்பதிவுகள் தொடங்கிவிட்டது. அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த கார் சிட்டியின் வடிவமைப்பை இன்ஸ்பிரேஷனாக கொண்டு வடிவமைக்கப்பட்டது. பழைய காரை விட அதிக வசதிகளும், கம்பீரமான டிசைனும் கொண்ட புதிய அமேஸ் காரின் முன்பதிவுகள் இன்று முதல் அனைத்து ஹோண்டா டீலர்களிடமும் ஏற்கப்படுகிறது. முன்பதிவு கட்டணம் ரூ.21,000 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 
 
ஹோண்டா அமேஸ்

 
மிட் சைஸ் கார் பிரியர்களைக் கவரும் வண்ணம் புதிதாக டிசைன் செய்யப்பட்டுள்ளது அமேஸ். ஷார்ப்பான டிசைன், புதிய வசதிகள், CVT கியர்பாக்ஸ் என்று ஹோண்டா சிட்டியின் இன்ஸ்பிரேஷ்ன் தெரிகிறது. சிட்டியின் பானெட் தாழ்வாக இருக்கும்; அமேஸில் கொஞ்சம் மேலேறி இருக்கிறது; அவ்வளவுதான். மற்றபடி ஹெட்லைட், கிரில் என்று சிட்டியின் கூடப் பிறந்த பிரதர் இந்த அமேஸ். ஸ்டீயரிங் வீலையும் சிட்டியில் இருந்து எடுத்திருக்கிறார்கள். முன்பெல்லாம் அமேஸின் அதிகபட்ச வசதியாக - எலெக்ட்ரிக் விங் மிரர் மட்டும்தான் இருக்கும். ஆனால், வெளிவரவிருக்கும் அமேஸில் வசதிகள் கூடுதலாக இருக்கிறது. மீட்டர் அனலாக்தான் இருந்தாலும், சென்டர் கன்ஸோலில் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. ஸ்டீயரிங் வீலிலேயே ஆடியோ கன்ட்ரோல்ஸ் உண்டு. புதிய ப்ளாட்ஃபார்ம் என்பதால் இடவசதி அதிகரிக்கப்பட்டுள்ளது. 
 
 
ஹோண்டா அமேஸ்

 
பெட்ரோல், டீசல் என இரண்டிலுமே வருகிறது அமேஸ். 1.2 லிட்டர் பெட்ரோலில் அதே 87bhp பவரும், 10.9 kgm டார்க்கும்தான் இருக்கும். அதே 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்தான். ஆனால், CVT கியர்பாக்ஸ் ஆப்ஷனும் வருகிறது. 1.5 லிட்டர் டீசலைப் பொறுத்தவரை, 98 bhp பவர், 20kgm டார்க் என அதே செட்டப்தான். முதல் முறையாக டீசல் இன்ஜினில் CVT கியர்பாக்ஸும் வருகிறது. டாப் வேரியன்டில் பேடல் ஷிஃப்டர்கள், இன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் இருக்கும். புதிய அமேஸ் தற்போது இருக்கும் காரை விட விலை கொஞ்சம் கூடுதல்தான். தோராயமாக இதன் சென்னை ஆன்-ரோடு விலை 7 முதல் 10 லட்சம் வரை இருக்கும். 

- ரஞ்சித் ரூஸோ.
 
TAGS :   ஹோண்டா அமேஸ்