இனி இந்தியாவில் பஜாஜ் பல்ஸர் 135LS பைக்கை வாங்க முடியாது!
Posted Date : 15:44 (07/04/2018)
Last Updated : 16:04 (07/04/2018)


 

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சூப்பர்ஸ்டார் மாடலான பல்ஸர் சீரிஸின் ஆரம்ப மாடலான பல்ஸர் 135LS பைக்கின் விற்பனை, இந்தியாவில் நிறுத்தப்பட்டுவிட்டது. கூடவே அவென்ஜர் ஸ்ட்ரீட் 150 பைக்கும் மூடுவிழா கண்டிருக்கிறது. அதன் வெளிப்பாடாக, தனது இணையதளத்தில் இருந்து அந்த 2 பைக்குகளை இந்நிறுவனம் நீக்கிவிட்டது. ஆனால் சக்கன் தொழிற்சாலையில் பல்ஸர் 135LS பைக்கின் உற்பத்தி தொடரும் எனத் தெரிகிறது. 
 
 
 
 
என்றாலும் அவை ஏற்றுமதிக்காக மட்டுமே இருக்கும் எனத் தகவல்கள் வந்துள்ளன. அவென்ஜர் ஸ்ட்ரீட் 150 பைக்குக்கு மாற்றாக அவென்ஜர் ஸ்ட்ரீட் 180 பைக்கைக் களமிறக்கியுள்ள பஜாஜ், பல்ஸர் 135LS பைக்கை மறுஅறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. என்றாலும், விரைவில் ஸ்ப்ளிட் சீட் மற்றும் பின்பக்க டிஸ்க் பிரேக் உடன் விற்பனைக்கு வரப்போகும் பல்ஸர் 150 Twin Disc மாடல், அந்த பைக்கின் இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

 
 
கடைசி பேஸ்லிஃப்ட்டில் என்ன மாற்றங்கள் இருந்தன?
 
கடந்த 2009-ம் ஆண்டின் இறுதியில், 'இந்தியாவின் முதல்  4 வால்வ் DTS-i இன்ஜின் கொண்ட பைக் ' என்ற பெருமையுடன் களம்கண்ட பல்ஸர் 135LS, ஷார்ப்பான டிசைன் - குறைவான எடை - பவர்ஃபுல் 4 வால்வ் இன்ஜின்  - அதிரடியான விலை - சிறப்பான மைலேஜ் எனப் பல ப்ளஸ்பாயின்ட்களைக் கொண்டிருந்தது. இதனால் விற்பனைக்கு வந்த 6 மாதத்திலேயே 1 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்றது. மேலும் 125சிசி பைக் விலையில் 150சிசி பைக்கின் பர்ஃபாமென்ஸை வழங்கிய இந்த 122 கிலோ எடையுள்ள பைக், 0 - 60 கிமீ வேகத்தை வெறும் 5.1 விநாடிகளில் எட்டிப்பிடித்ததுடன், அதிகபட்சமாக 115கிமீ வேகம் வரை சென்றது.
 
 
 
 
கடந்த 2016-ம் ஆண்டின் இறுதியில், 'பேபி பல்ஸர் ' என அழைக்கபட்ட  135LS பைக்கின் பேஸ்லிஃப்ட்டட் BS-4 மாடலைக் களமிறக்கியது பஜாஜ். இதன் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு, முந்தைய பைக்குடன் ஒப்பிடும்போது, டிஸைனில் இருந்த ஸ்போர்ட்டியான அம்சங்கள் அப்படியே காணாமல் போயிருந்தன. சிங்கிள் பீஸ் சீட் & கிராப் ரெயில், Heel Toe முறையிலான கியர் லீவர், உயரமான வைஸர், மேனுவல் சோக் ஆகியவற்றை, இதற்கான உதாரணங்களாகச் சொல்லலாம். 
 
 
 
 
மற்றபடி மேட் ஃபினிஷ் உடன் கூடிய எக்ஸாஸ்ட் & ஹேண்டில்பார், புதிய பாடி கிராஃபிக்ஸ் & கலர் ஆப்ஷன்கள், அலாய் வீல்களில் Pin Strip, அலாய் பாகங்களில் Gun Metal கலர் ஃபினிஷ், மேம்படுத்தப்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், தங்க நிற டிஸ்க் பிரேக் காலிப்பர், கிரோம் லோகோ எனச்சில பிரிமியம் அம்சங்களும் இடம்பெற்றிருந்தன. என்றாலும், 68கிமீ அராய் மைலேஜ் கொண்ட ஒரு ஸ்போர்ட்ஸ் கம்யூட்டர் பைக்கைப் பிராக்டிக்கலான பைக்காக மாற்றியமைத்த பஜாஜின் முடிவுக்கு, பல்ஸர் ஆர்வலர்கள் போதிய வரவேற்பு அளிக்கவில்லை. 
 

 
 
பல்ஸரின் வருங்காலம் எப்படி இருக்கும்?
 
ஏப்ரல் 2020 முதலாக அமலுக்கு வரவிருக்கும் BS-6 விதிகளை மனதில்வைத்து, வாகன உற்பத்தியாளர்கள் அனைவரும் தமது புதிய தயாரிப்புகளை வடிவமைத்து வருகின்றனர். எனவே அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரவிருக்கும் புதிய பல்ஸர் சீரிஸ் பைக்கில் கார்புரேட்டருக்குப் பதிலாக, ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம். இந்நிலையில் ஏப்ரல் 1, 2018 முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் புதிய விதியின்படி, 125சிசி-க்கும் குறைவான டூ-வீலர்களில் CBS மற்றும் 125சிசி-க்கும் மேற்பட்ட டூ-வீலர்களில் ABS இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 
 
 
 
 
இதனால் பல்ஸர் 135LS பைக்கில் கூடுதலாக ABS பொருத்தப்படும்போது, அதன் விலை கணிசமாக அதிகரிக்கும் சூழல் ஏற்படும். இதனால் அந்த பைக்கின் விற்பனை மேன்மேலும் சரியும்.  எனவே அதிகளவில் விற்பனையாகாத மாடல்களின் உற்பத்தியை, அந்தந்த நிறுவனங்கள் நிறுத்தும் படலம் ஆரம்பமாகி உள்ளது.  அதன் எதிரொலிதான் இந்த கட்டுரைக்கான காரணம். தவிர பல்ஸர் என்றால் கட்டுமஸ்தான ஸ்போர்ட்ஸ் பைக் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கும் இளைஞர் பட்டாளத்தை, இந்த Light Sport பைக் கவரவில்லை என்பதே நிதர்சனம். 
 
 
 
 
 - ராகுல் சிவகுரு.
 
 
TAGS :   BAJAJ, PULSAR 135LS, INDIA AVENGER STREET 150, SPORTS COMMUTER, 4 VALVE ENGINE, 5 SPEED GEARBOX, PULSAR 150.