ஃபார்முலா ஒன் பந்தயத்தில் மெக்கானிக்கின் காலை உடைத்த டிரைவர்...ஃபெராரி நிறுவனத்துக்கு அபராதம்.
Posted Date : 02:48 (10/04/2018)
Last Updated : 01:09 (14/04/2018)


கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு பஹரைன் நாட்டில் நடைபெற்ற ஃபார்முலா ஒன் கார் பந்தையத்தின்போது ஃபெராரி பிட்ஸ்டாப்பில் நடந்த விபத்தால் அந்நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 
 

ஃபார்முலா ஒன் பந்தயத்தில் டயர்களை மாற்றுவதற்காக டிரைவர்கள் காரை பிட் ஸ்டாப்பில் நிறுவத்துவது சகஜம்.  இந்த 57 லேப் போட்டியில் 35வது லேப்பில் ஃபெராரி நிறுவனத்தின் டிரைவர் கிமி ராய்கோனன் டயர்களை மாற்றுவதற்காக பிட் ஸ்டாப்புக்கு வந்தார். அப்போது, பின்பக்க இடதுடயர் சரியாக இல்லாததால், மூன்று டயர்கள் மட்டுமே மாற்றப்பட்ட நிலையில் பிட் ஸ்டாப்பில் இருந்த வெளியேறப் பச்சை விளக்கு காட்டப்பட்டது. பின் பக்கம் டயரை கழட்டிக்கொண்டிருந்த மெக்கானிக்கை கவனிக்காமல் ராய்கோனன் வேகமாக பிட் ஸ்டாப்பில் இருந்து புறப்பட்டுவிட்டார். 

ஃபெராரி ஃபார்முலா ஒன் 
 

காரின் பக்கவாட்டு பகுதியில் புதிய டயரை போடுவதற்காக நின்றுகொண்டிருந்த மெக்கானிக் ஃபிரான்செஸ்க்கோ சிகாரினியின் கால்களில் காரின் பின்டயர் வேகமாக மோதியதில் இடது கால் உடைந்து கீழே விழுந்து துடிக்க ஆரம்பித்துவிட்டார். ஃபிரான்செஸ்கோ உடனே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தற்போது கால்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையில் உள்ளார். 
 
ஃபெராரி ஃபார்முலா ஒன்

இந்தப் பொறுப்பற்ற சம்பவத்துக்காக ஃபார்முலா ஒன் ரேஸின் கண்காணிப்பு அமைப்பான FIA, ஃபெராரி நிறுவனத்துக்கு 50,000 யூரோ அபராதம் விதித்துள்ளனர். இந்திய மதிப்பின்படி 40 லட்சம் ரூபாய். பச்சை விளக்கு காண்பிக்கப்பட்டதாலேயே கிமி ராய்கோனன் பிட்ஸ்டாப்பில் இருந்து புறப்பட்டுள்ளார். நான்கு டயர்களையும் மாற்றிய ஆட்டோமேடிக்காக பச்சை விளக்கு எரியும். ஆட்டோமோடிக் சிஸ்டம் என்பதால் எப்படித் தவறு நடைபெற்றது என்று விசாரணை நடத்திவருகிறார்கள். ஃபார்முலா ஒன் பந்தய விதிமுறைப்படி இரண்டு விதமான டயர்களோடு காரை ஓட்டக்கூடாது. மெக்கானிக் அடிபட்டதால் டயர்களை மாற்றவும் முடியாமல் பஹரைன் ரேஸில் இருந்து வெளியேறிவிட்டார் ராய்கோனன்.
 
- ரஞ்சித் ரூஸோ.
 
TAGS :   ஃபெராரி, ஃபார்முலா ஒன், கிமி ராய்கோனன்