முதல் வெற்றி, பரபர பந்தயம், ராஸியின் கடுப்பான மொமன்ட்ஸ்... அர்ஜன்டினா ரேஸில் என்ன நடந்தது!
Posted Date : 15:58 (10/04/2018)
Last Updated : 23:34 (10/04/2018)

அப்பப்போ மழை அப்பப்போ வெயில் வந்து அர்ஜன்டினா டிராக்கை கணிக்கமுடியாததால், பல ரேஸர்கள் கடைசி நிமிடத்தில் டயர்களை மாற்றக் கிளம்பிவிட்டனர். இதனால் ரேஸ் தாமதமானது. கொடியசைக்கப் போகும் நேரத்தில் திரும்பவும் பிரச்சனை. 6-வது இடத்தில் இருந்து ஆரம்பிக்கவேண்டிய மார்கஸ் பைக் நின்றுவிட்டதால் திடீரென பைக்கை டிராக்கிலேயே தள்ளிக்கொண்டு ஓடி ஸ்டார்ட் செய்து மீண்டும் 6-வது இடத்துக்கு வந்து நின்றார். பிரச்சனைகளோடு ஆரம்பித்ததாலேயே ரேஸில் ஒரு பரபர சூழல் தொத்திக்கொண்டது.

மோட்டோ ஜிபி


ரேஸ் ஆரம்பித்தது. பாராமாக் ரேஸிங் டீம் ரைடர் ஜாக் மில்லர் ரேஸை முதல் போல் பொசிஷனில் இருந்து தொடங்கினார். இரண்டு லேப்கள் வரை மில்லர் முதலாவதாகப் போய்க்கொண்டிருந்தார். ரேஸின் 2-ம் லேப்பில் 2-வது வந்துகொண்டிருந்த டேனி பெட்ரோஸாவை, ஜார்க்கோ ஓவர்டேக் செய்யும்போது, அதிக பிரஷரில் பிரேக்கை பயன்படுத்தியதால் பெட்ரோஸா பைக்கில் இருந்து பறந்து கீழே விழுந்துவிட்டார். ஜார்க்கோ போட்டிபோட்டு வாங்கிய இரண்டாம் இடம் மார்க்கஸாஸ் பறிக்கப்பட்டது. முதலில் போய்க்கொண்டிருந்த ஜாக் மில்லரையும் ஓவர்டேக் செய்துவிட்டு முன்னிலையில் இருந்த மார்கஸுக்கு 6-வது லேப்பில் அதிர்ச்சி. ரேஸ் ஆரம்பிக்கும்போது டிராக்கில் பைக்கை எதிர்த்திசையில் ஓட்டியதால் பெனல்ட்டி லேப் வந்துவிட்டது. பிட் ஸ்டாப்பில் நுழைந்து வெளியேறவேண்டும்.

மோட்டோ ஜிபி


மீண்டும் மில்லர் முன்னிலை. ஆனால், இப்போது முதல் இடத்துக்கு போட்டிபோட ஒருவற்பின் ஒருவராக ஜார்க்கோ, ரின்ஸ், கிராட்ச்கிளோவ் மூவரும் காத்திருந்தனர். பெனல்ட்டி முடித்து 20-வது பொசிஷனில் மீண்டும் களத்துக்கு வந்த மார்க்கஸ் மின்னலாக அனைவரையும் ஓவர்டேக் செய்துகொண்டிருந்தார். வரும் வழியில் 8-வது லேப் முடியும் நேரத்தில் 18-வது இடத்தில் இருந்த அலெக்ஸ் எஸ்பாகரோவின் பைக்கில் மோதி அவரை வளைவின் ஓரத்துக்குத் தள்ளிவிட்டு, 18 இடத்துக்கு வந்தார். அதே சமயத்தில் முன்வரிவைக்கான போட்டி அப்படியேதான் இருந்தது. ரேஸ் முழுவதும் முன்வரிசையும், பின்வரிசையும்தான். நடுவில் அனைவருமே கொஞ்சம் மந்தமாக ஓட்டிக் கொண்டிருந்தனர். 11-வது இடத்தில் ஆரம்பித்து 8-வது வரை அனைவரையும் ஓவர்டேக் அடித்து வந்ததும், 8-ம் இடத்துக்கு ஐயோனேயுடன் நடந்த போராட்டம் கொஞ்சம் விறுவிறுப்பு.

மோட்டோ ஜிபி


15-வது லேப்பில் கஷ்டப்பட்டு மில்லரை ஓவர்டேக் அடித்து முதல் இடத்துக்கு வந்தார் அலெக்ஸ் ரின்ஸ். இப்போது நடுவரிசையில் கொஞ்சம் பரபரப்பு. காரணம் டொவிசியோ மற்றும் டிடோ ரபாட்டை ஓவர்டேக் செய்து 6-வது இடத்துக்கு வந்துவிட்டார் ரோஸி. மார்க்கஸ் வேமாக நடுவரிசைக்கு வந்துகொண்டிருந்தார். நடுவரிசை போட்டியும் சூடுபிடிக்க ஆரம்பித்தது. ரபாட், டொவிஸியோ இரண்டு பேரையும் தாண்டிவிட்டு ராஸியை ஓவர்டேக் அடிக்கும்போது கடந்துபோக இடைவெளி இல்லாமல் இருவருமே வளைவில் ஓரமாக ஒதுங்கிவிட்டனர். மார்க்கஸின் ஹோண்டா ராஸியின் யமஹா மீது மோதி, ராஸி புல்வெளியில் தள்ளப்பட்டார். ரேஸ் முடிய மூன்றே லேப் இருந்த நிலையில், ஜார்க்கோ, கிரட்ச்கிளோவ் இருவரும் ரின்ஸை ஓவர்டேக் செய்ய, ' யாராவது சீக்கிரம் ரேஸ் முடிங்கடா ' என்று நகம்கடித்துக்கொண்டிருக்க. ஜார்கோவின் முன்னிலையில் அதே வரிசை கடைசி லேப் வரை நீடித்தது. கடைசி லேப்பின் கடைசி வளைவில் ஜார்க்கோவை முந்தி அதிரடியாக ரேஸை முடித்தார் கிரட்ச்கிளோவ்.


மோட்டோ ஜிபி


மோட்டோ 3, மோட்டோ 2 என்று படிப்படியாக இல்லாமல் சூப்பர் பைக் சாம்பியன்ஷிப்பில் இருந்து மோட் டோ ஜிபிக்கு தாவி 8 ஆண்டுகள் கழித்து அர்ஜன்டினா ரேஸை முதலாவதாக முடித்துள்ளார். கிரட்ச்கிளோவுக்கு இது மூன்றாவது போடியம். கடந்த ரேஸில் நான்காவதாக முடித்ததால், இப்போது சாம்பியன்ஷிப் பட்டியலில் அதிக பாயின்ட் எடுத்து முன்னிலையில் இருக்கிறார். சுஸூகி ரைடர் ரின்ஸ் மற்றும் யமஹா ரைடர் மேவரிக் விஞானிஸ் தவிர ஃபேக்டரி ரேஸர்கள் யாரும் இந்த ரேஸில் ஜொலிக்கவில்லை. மார்கஸ் நான்காவதாக ரேஸை முடித்தாலும் ராஸியை விழவைத்ததுக்காக பெனல்ட்டியாக 30 நொடிகள் ரேஸ் டைமில் பெனல்ட்டியாக சேர்ந்து பாயின்ட் ஏதுவுமின்றி 18வது இடத்துக்குத் தள்ளப்பட்டார். எழுதி வைத்த நாடகம் போலப் பல திருப்பங்களோடு முடிந்தது அர்ஜன்டினா சர்க்யுட்.

- ரஞ்சித் ரூஸோ.


TAGS :   மோட்டோ ஜிபி, ரேஸ் அப்டேட், அர்ஜன்டினா