ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரை இன்று அமேஸானில் முன்பதிவு செய்யலாம்
Posted Date : 04:34 (13/04/2018)
Last Updated : 04:36 (13/04/2018)

 

ஃபோர்டின் புதிய க்ராஸ்ஓவர் காரான ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த காரின் முன்பதிவுகள் முதல்முறையாக அமேஸானில் தொடங்கவுள்ளது. இன்று மதியம் 2 மணி முதல் காரை அமேஸான் இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம். முதல் 100 கார்கள் மட்டுமே ஆன்லைனில் விற்பனை செய்யப்படவுள்ளது. காரின் முன்பதிவு கட்டணம் 10,000 ரூபாய் மட்டுமே. ஃபோர்ட் ஃப்ரீஸ்டைல் காரை www.amazon.in/freestyle என்ற இணைய முகவரியில் முன்பதிவு செய்யலாம். காரின் விருப்பமான வேரியன்ட், நிறம் மற்றும் இன்ஜின் ஆப்ஷன்களையும் அமேஸான் இணையதளத்திலேயே தேர்வு செய்துகொள்ளலாம். அமேஸான மொபைல் ஆப் மூலமும் காரை முன்பதிவுசெய்யலாம். காரின் விலையை ஃபோர்டு நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. தோராயமாக 6.5 முதல் 9.5 லட்சம் வரை இருக்க வாய்ப்புள்ளது.
 
ஃபோர்டு ஃப்ரீஸ்டைல்
 
சாதாரண காம்பேக்ட் கார்களைவிட கரடுமுரடான க்ராஸ்ஓவர் கார்கள் என்றால் வாடிக்கையாளர்களுக்குத் தனி ஈர்ப்புதான். அந்த வகையில் காம்பேக்ட் க்ராஸ்ஓவராக வருகிறது ஃப்ரீ ஸ்டைல். ஸ்மோக்டு எஃபெக்ட் ஹெட்லைட்ஸ், மெஷ் கிரில், புதிய ‘V’ வடிவ பானெட், ஸ்கிட் பிளேட், ஸ்போர்ட்டி அலாய் வீல்ஸ், கறுப்பு பார்டர் கொண்ட ஹெட்லைட்ஸ் என்று ஃபிகோவில் உள்ள சில அம்சங்கள் பிரதிபலிக்கிறது. இதில், ஃபிகோவைவிட கிரவுண்ட் கிளியரன்ஸ் 15 மிமீ அதிகம். பாடி கிளாடிங், ஃபிகோவைவிட அகலமான செக்ஷன் கொண்ட (185/60 R15) டயர்கள், ரூஃப் ரெயில், ஸ்கஃப் பிளேட்டுகள் என க்ராஸ்ஓவர் ஸ்டைலுக்கான விஷயங்கள் வந்துள்ளது. இதில், 8 ஸ்போக் 15 இன்ச் அலாய் வீல்கள் வருகின்றன. 
 
ஃபோர்டு ஃப்ரீஸ்டைல்
 
காரின் சிறப்பு அதன் இன்ஜின்தான். சமீபத்தில் வெளியான 1.2 லிட்டர், 3 சிலிண்டர் டிராகன் சீரிஸ் இன்ஜினை இதில் பொருத்தியிருக்கிறது ஃபோர்டு. 96 bhp பவரும், 12.0 kgm டார்க்கும், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும், 6,800 rpm வரை ரெட்லைன் ரெவ் ரேஞ்சும் உள்ளது. சின்ன கார்களிலேயே பவர்ஃபுல் இன்ஜின், ஃப்ரீ ஸ்டைலில்தான் இருக்கிறது. பெட்ரோலில் ஆட்டோமேட்டிக் ஆப்ஷனும் வரலாம். டீசலுக்கு - ஃபிகோ மற்றும் ஆஸ்பயரில் இருக்கும் 100 bhp பவரும், 21.5 kgm டார்க்கும் கொண்ட அதே 1.5 லி TDCI இன்ஜின்தான். கூட்டணியாக 5 ஸ்பீடு Getrag கியர்பாக்ஸ் வருகிறது. பாதுகாப்பில் காம்ப்ரமைஸ் செய்யவில்லை ஃபோர்டு. ஃப்ரீ ஸ்டைலில் 6 காற்றுப் பைகள், பாடி ரோலை கட்டுப்படுத்த முன் பக்க ஆன்ட்டி ரோல் பார், டிராக்‌ஷன் கன்ட்ரோல், ESC (Electronic Stability Control), புதிதாக ARP (Active Rollover Prevention) போன்ற பாதுகாப்பு வசதிகள் உள்ளது. 
 
ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் 
 
சென்டர் கன்ஸோலில் இருக்கும் 6.5 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின் மென்ட் சிஸ்டம் ஃபோர்டு SYNC3 ஆப்ஷன் கொண்டிருக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியும் உண்டு. ரிவர்ஸ் கேமரா, கீலெஸ் என்ட்ரி-கோ, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், ஆட்டோ ஹெட்லைட்ஸ் என வசதிகள் லிஸ்ட் பெரிதாக உள்ளது. ஆனால், நேவிகேஷன் இல்லை. பூட் ஸ்பேஸ் 257 லிட்டர்தான்.
 
- ரஞ்சித் ரூஸோ.
TAGS :   ஃபோர்டு, ஃப்ரீஸ்டைல், க்ராஸ்ஓவர், அமேஸான் இந்தியா