உலகின் முதல் குழந்தைகளுக்கான ஏர்பேக் சிஸ்டம் வெளியாகியுள்ளது...
Posted Date : 13:23 (17/04/2018)
Last Updated : 13:23 (17/04/2018)

 

காரில் ISOFIX எனப்படும் கிளாம்ப்பில் பொருந்தும் குழந்தைகளுக்கான சீட்டுகளை தயாரிக்கும் நிறுவனமான Maxi-Cosi, கார்களில் பயன்படுத்தப்படும் குழந்தைகள் சீட்டில் முதல்முறையாக ஏர்பேக்கை தொழில்நுட்பத்தை பொருத்தி விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. 

 
குழந்தைகள் ஏர்பேக்
 
கார் விபத்துகளால் இறப்பு விகிதங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா உள்ளிட்ட பல உலகநாடுகள் காரில் பயணிப்பவர்களுக்கான பாதுகாப்பை அதிகப்படுத்தும் முயற்சிகளை எடுத்துவருகிறது. இந்தியாவில் கூட பல கார் நிறுவனங்கள் குழந்தைகள் சீட் பொருத்த ISOFIX கிளாம்புகளை கார்களோடு ஸ்டான்டர்டாகவே தருகின்றன. ஆனால், கார் கிராஷ் ஆகும்போது தலையை பாதுகாக்க பெரியவர்களுக்கு ஏர்பேக் உள்ளது போல குழந்தைகளுக்கு எதுவும் இல்லை. இதனால், மேக்ஸி-கோஸியின் இந்த புதிய தொழில்நுட்பம் காரில் குழந்தைகளின் பாதுகாப்புக்கு பெரும் அளவு பயன் தரும் என்று நம்பலாம். 
 
 

 
மேக்ஸி-கோஸியின் குழந்தைகள் சீட் ஏர்பேக் இந்நிறுவனத்தின் விலை உயர்ந்த சீட் மாடலான AxissFix Air சீட்டுகளுடன் வருகிறது. குழந்தைகள் சீட்டுக்கான ஏப்பேக்கை பைக்குகளுக்கு ஏர்பேக் தயாரிக்கும் நிறுவனமான Helite உடன் சேர்ந்து உருவாக்கியுள்ளது. 61 முதல் 105cm அளவு உள்ள குழந்தைகளுக்கு இந்த ஏர்பேக் சீட் பொருந்தும். 360 டிகிரி சுற்றும் சீட்டு, அதற்குக் கீழே சீட்டோடு இணையும் ISOFIX ஹூக்குகள், குழந்தைகளின் தோளுக்கு அருகில் விரியும் இரண்டு ஏர் பேக்குகள் என இந்த மொத்த யூனிட்டும் சீட்டில் பொருத்தப்படும் இரண்டு சென்சார்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். கார் கிராஷ் ஆகும்போது இந்த சென்சார்கள் செயல்பட்டு 0.05 நொடிகளில் ஏர்பேக் விரியும். இந்த ஏர்பேக்குகளை சோதனை செய்ததில் வழக்கமான சீட்டுகளை விட ஏர்பேக் சீட்டில் இருக்கும் குழந்தைகளின் தலை மற்றும் கழுத்து பகுதிக்கு 55 சதவிகிதம் குறைவான அழுத்தம் ஏற்படுகிறது என்று கூறுகிறார்கள். குழந்தைகளுக்கான இந்த ஏர்பேக் சீட் தற்போது ஐரோப்பாவில் மட்டுமே கிடைக்கிறது. இதன் விலை இந்திய மதிப்புப்படி ரூ.51,000. இந்த தொழில்நுட்பம் கார் பாதுகாப்பில் மிக முக்கியமானது. கார் நிறுவனங்கள் இதைச் சீக்கிரமே நடைமுறைக்குக் கொண்டுவரும் என்று எதிர்பார்ப்போம். தொழில்நுட்பம் நடைமுறைக்கு வரும்போது இதன் விலை பல மடங்கு குறைய வாய்ப்புள்ளது. 
 
- ரஞ்சித் ரூஸோ.
 
 
TAGS :   ISOFIX, ஏர்பேக், குழந்தைகளுக்கான கார் சீட், குழந்தை கார் சீட்