12.32 லட்சத்துக்கு வெளியானது, மஹிந்திரா XUV 500 ஃபேஸ்லிஃப்ட்!
Posted Date : 13:05 (18/04/2018)
Last Updated : 13:30 (18/04/2018)

 


மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் தனது விலையுயர்ந்த காரான XUV500 காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை வெளியிட்டுள்ளது. பொதுவாகவே ஃபேஸ்லிஃப்ட் கார்கள் என்றால் பழைய மாடலில் சிறிய தோற்ற மாற்றங்களைக் கொண்டுவந்து கொஞ்சம் புத்துணர்ச்சியை சேர்ப்பார்கள். ஆனால், மஹிந்திராவோ, தனது XUV500 காரை முழுவதும் தற்போதைய டிரென்டுக்கு மாற்றி ஃபேஸ்லிஃப்ட்டாக வெளியிட்டுள்ளது. 
 
 
மஹிந்திரா XUV 500 ஃபேஸ்லிஃப்ட்

 
பழைய காரை விட மாறுபட்ட கேபின், வடிவமைப்பு, வசதிகள், நிறம் என்று பல விஷயங்களில் புதிதாக உள்ளது. டாப் வேரியன்டில் பர்ஃபார்மன்ஸும் கூடியிருக்கிறது. இந்த முறை டீசல் இன்ஜினுடன் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷனும் வருகிறது. தோற்றத்தைப் பொருத்தவரை பம்பர், ஹெட்லைட், க்ரில் என காரின் முன் பக்கம் அதிகப்படியான மாற்றங்களைக் கண்டுள்ளது. பின் பக்கம் வின்ட் ஸ்கிரீனுக்கு கீழே உள்ள பாடி பேனல்கள் மாறியுள்ளது. புதிதாக முக்கோன வடிவ டெயில் லைட்டுகள் வந்துள்ளன. முன்பக்கம் கிரில்லிலும், பின் பக்கம் நம்பர் பிளேட்டுக்கு மேலேயும் க்ரோம் வேலைப்பாடுகள் உள்ளன. ஹெட்லைட் தோற்றம் இப்போது மாறிவிட்டது. ப்ரொஜக்டர் லைட்டுகளும், LED DRL லைட்டுகளும் வந்துவிட்டது. டாப் வேரியன்டில் மட்டும் பக்கவாட்டில் பாடி கிளாடிங்குகள் இருக்கிறது.
 
மஹிந்திரா XUV 500 ஃபேஸ்லிஃப்ட்

காரின் உள்ளே டேன் லெதர் நிற சீட்டுகள் இருக்கின்றன. டேஸ்போர்டு முழுவதும் கறுப்பு நிறம். விலை உயர்ந்த வேரியன்டில் மட்டும், லெதர் போன்ற சாஃப்ட்டான ஃபினிஷிங்கில் டேஷ்போர்ட் உள்ளது. சென்டர் கன்சோல் பியானோ ப்ளாக் நிறத்தில் இருக்கிறது. அலுமினியம் பெடல்கள் உள்ளன. இன்ஃபோடெயின்மெட் சிஸ்டத்தில் இப்போது ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் போன்களை கனெக்ட் செய்துகொள்ளலாம். காரில் பாதுகாப்பு அம்சங்களாக 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ், EBD, ESP, மலை ஏறுவதற்கு உதவியாக இருக்கும் hill hold மற்றும் hill descent போன்றவை வருகின்றன.
  

 
 
இன்ஜினை பொருத்தவரை பழைய XUV-யில் உள்ள அதே 140bhp பவர் தரும் 2.2 பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்தான் என்றாலும், டாப் வேரியன்டில் புதிய ECU மற்றும் டர்போசார்ஜர் இருப்பதால் 155bhp பவர் மற்றும் 360Nm டார்க் தருகிறது. 4 வீல் டிரைவ் சிஸ்டம், ஆட்டோமெடிக் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ்கள் ஆப்ஷன்களாக வந்துள்ளன. டீசல் இன்ஜினில் 5 வேரியன்டாக வந்துள்ள XUV 500 ஃபேஸ்லிஃப்ட்டின் விலை ரூ.12.32 லட்சத்தில் ஆரம்பித்து 17.88 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் இன்ஜினோடு ஒரே வேரியன்ட் மட்டுமே வருகிறது. ஆட்டோமெடிக் கியர்பாக்ஸுடன் வரும் இந்த வேரியன்டின் விலை ரூ.15.43 லட்சம். 4 வீல் டிரைவ் வேரியன்ட் ரூ.17.78 மற்றும் ரூ.18.98 லட்சம். அனைத்துமே மும்பை எக்ஸ்ஷோரூம் விலைகள். 
 
- ரஞ்சித் ரூஸோ.
TAGS :   மஹிந்திரா, XUV500, ஃபேஸ்லிஃப்ட், புது கார், 2018.