இன்னும் பெரிதாக களமிறங்குகிறது மாருதி சுஸுகி எர்டிகா...
Posted Date : 14:35 (20/04/2018)
Last Updated : 14:36 (20/04/2018)

இந்தியாவில் இன்னும் வளர்ச்சியடையாமல் இருக்கிறது  MPV செக்மன்ட். டொயோட்டா இனோவாவை தவிர இந்த செக்மன்டில் கனிசமாக விற்பனையாகும் ஒரே கார் எர்டிகா. அதுவும் மாருதி என்பதாலேயே இந்த கார் விற்பனையாகிறது. 

புது எர்டிகா


மாருதி சுஸுகி எர்டிகாவின் புதிய மாடல் இந்தியாவில் களமிறங்கவுள்ளது. இந்தோநேஷியாவில் நடைபெறும் ஜகர்தா இன்டர்நேஷினல் ஆட்டோ எக்ஸ்போவில் எர்டிகாவின் புதிய மாடல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்விஃப்ட், பெலினோ போல எர்டிகாவின் இப்போது மாருதியின் ஹார்ட்டெக் பிளாட்ஃபார்மில் உருவாகப்போகிறது. புதிய பிளாட்ஃபார்ம் என்பதால் காரின் அளவுகளும் பெருத்துவிட்டது. 4,395  mm நீளம், 1,753  mm அகலம் மற்றும் 1,690  mm உயரம். ஆனால், வில் பேஸ் அதே 2,740 மி.மீ. காரின் வெளித்தோற்றத்தைப் பொருத்தவரை பளபளக்கும் கிரோம் ஃபினிஷிங்கில் பெரிய கிரில், ஸ்லிம்மான ப்ரொஜக்டர் ஹெட்லைட்டுகள்,  LED DRL, புது வடிவத்தில்  LED டெயில் லைட், 15 இன்ச் அலாய் வீல்கள் என்று முன்பை விட அதிக மதிப்புள்ளதாகத் தெரிகிறது. டி-பில்லர் டிசைனும் புதுசாக மாறிவிட்டது.


புது எர்டிகா 
(படம் - Motor Trend India)


காரின் உள்ளே ஃபிளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல், 7இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டூயல் டோன் இன்டீரியர், ரியர் கேமரா, செங்குத்தாக இருக்கும் ஏசி வென்ட்டுகள் என இப்போது வரும் மாருதிகளில் இருக்கும் வசதிகள் அப்படியே இருக்கிறது. முந்தைய எர்டிகாவில் 3-வது வரிசையில் உட்காரவே முடியாது. இப்போது அங்கு ஸ்பேஸ் கொஞ்சம் அதிகமாகிவிட்டது. மூன்றாம் வரிவை பிராக்டிகலாகவும், இரண்டாம் வரிசை வசதியாகவும் உள்ளது. இன்ஜினை பொருத்தவரை ஸ்விஃப்ட்டில் இருக்கும் அதே இன்ஜின் ஆப்ஷன்கள்தான் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த செக்மன்டில் இனோவா க்ரிஸடா மட்டுமே அதிக வசதிகளைத் தந்து நல்ல விற்பனையில் உள்ளது. விலை அதிகம் என்பதால் பலருக்கு  MPV-கள் எட்டா கனியாகிவருகிறது இந்த நிலையில் புதிய எர்டிகா செக்மன்டை புறட்டிப்போடும் என்று எதிர்பார்க்கிறோம். 

- ரஞ்சித் ரூஸோ.
TAGS :   புது எர்டிகா, மாருதி சுஸுகி எர்டிகா, MPV, டொயோட்டா இனோவா