ப்ளூ வேல் போன்ற ஆபத்தான சவால்.. உயிரிழந்த கேரள மாணவர்.
Posted Date : 19:26 (20/04/2018)
Last Updated : 11:09 (21/04/2018)
 
கேரளாவில் உள்ள நேரு இன்ஜினியரிங் கல்லூரியில் ஆட்டோமொபைல் கடைசி ஆண்டு படித்துவந்த மாணவர் மிதுன் கோஷ் ஐயர்ன் பட் எனும் போட்டியில் பங்கெடுத்தபோது விபத்து காரணமாக உயிரிழந்துள்ளார்.
 
ஐயர்ன் பட்
 
ஐயர்ன் பட் எனும் அமெரிக்க நிறுவனம் மோட்டார்சைக்கில் ரைடர்களுக்காக சில போட்டிகளை நடத்துகிறது. உலகின் கடினமான மோட்டார் சைக்கில் சவால்களில் ஐயர்ன் பட் சவால்களும் ஒன்று. இதில் மிதுன் கோஷ் கலந்துகொண்டது saddlesore1000 எனப்படும் சவால். பைக்கில் 1600 கி.மீ தூரத்தை 24 மணிநேரத்தில் கடக்கவேண்டும். இந்தப் போட்டி ஒரு ரைடரின் சகிப்புதன்மையையும், கவனத்தையும், வேகத்தையும் பரிசோதிப்பது. 24 மணிநேரம் தூங்காமல் பைக் ஓட்டுவது என்பது சுலபமல்ல. இந்த சவாலை முடிப்பவர்களுக்கு ஐயர்ன் பட் நிறுவனம் சார்பாக சான்றிதழ் வழங்கப்படும். மேலும், ஐயர்ன் பட் இணையதளத்தில் இந்த சவாலை முடித்தவர்கள் என்ற பட்டியலில் பெயர் இடம்பெறும். அமெரிக்காவில் மோட்டார்சைக்கில் ரைடர்கள் இந்த சவாலை முடிப்பது பெருமையாக கருதுகிறார்கள்.
 
 

 
மிதுன் கோஷ் இந்த சவாலை பற்றி கல்லூரி சீனியர் மாணவரிடம் தெரிந்துகொண்டுள்ளார். வீட்டில் கடைசி ஆண்டு பிராஜக்டுக்கான பொருட்களை வாங்கவேண்டும் என்று கூறி வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். பொதுவாக இந்தியாவில் இந்தச் சவாலை முடிக்க சரியான இடமாக கருதப்படுவது பெங்களூர் - மும்பை நெடுஞ்சாலை. இந்த வழியில்தான் மிதுனும் பயணித்துள்ளார். சித்ரதுர்கா எனும் இடத்தின் அருகே முன்னாடி சென்றுகொண்டிருந்த லாரி பிரேக் போட்டு சட்டென நிற்க மிதுன் அதிவேகத்தில் லாரியில் மோதி உயிரிழந்தார். இந்த சம்பவம் காலை 4 மணியளவில் நடந்தது. லாரியில் பிரேக் லைட்டுகள் வேலைசெய்யவில்லை. போலீஸ் வருவதற்குள் லாரி டிரைவர் தப்பித்து ஓடிவிட்டார். 
 
 

 
 
மிதுன் ஓட்டியது ஹோண்டா சிபிஆர் 250 ரெப்ஸால் எடிஷன் பைக். சவால் ஆரம்பித்தது முதல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ் அப்டேட்டுகள் எல்லாம் செய்துள்ளார். கிளவுஸ், ரைடிங் ஜாக்கெட், ஹெல்மெட் என்று அனைத்து ரைடிங் கியர்களும் அணிந்து இந்த சவாலை எடுத்துள்ளார் மாணவர் மிதுன். மேலும் இவருக்கு 1000 கி.மீ டிரிப் பயணித்த அனுபவமும் இருக்கிறது. ஆனால், என்டியூரன்ஸ் ரேஸ் அவ்வளவு சுலபமானது அல்ல. அனுபவம் மிக்க ரைடர்களே இதற்கு சரிபட்டு வரமோட்டோம் என்று பின்வாங்ககூடிய அளவு ஆபத்தானது. இந்திய சாலைகளில் தாறுமாறாக போகும் லாரி, கார்கள் மட்டுமல்ல நிறைய ஆபத்துகள் உள்ளன.


- ரஞ்சித் ரூஸோ.
 
TAGS :   ஐயர்ன் பட், ப்ளூ வேல், கேரளா மாணவர்