வாகனங்களுக்கு எல்லா ஊர்களுமே இனி சொந்த ஊர்தான்... மத்திய அரசின் அதிரடி திட்டம்
Posted Date : 17:33 (21/04/2018)
Last Updated : 18:11 (21/04/2018)


வரியை குறைக்க பாண்டிச்சேரியில் கார் வாங்கும் ஆசை இருந்தால் அது இனி நடக்காது. ஏனென்றால் மத்திய அரசு தனது ஒரே நாடு ஒரே வரி திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்களிலும் சாலை வரியை ஒரே அளவாக மாற்றப்போகிறது. இதனால், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வாகனங்களின் விலை ஒன்றாகவே இருக்கும்.


ஒரே நாடு ஒரே வரி


சிறிய வாகனங்களுக்கு விலை வித்தியாசம் சில ஆயிரங்கள் மட்டுமே. ஆனால், மெர்சிடீஸ், பிஎம்டபிள்யூ, ஜாகுவார் போன்ற சொகுசு கார்கள், சூப்பர் பைக்குகள், பஸ், லாரிகளுக்கு லட்சரூபாய் வரை விலை வித்தியாசம் வருவதால் பலர் இந்த வாகனங்களை பாண்டிச்சேரி போன்ற யூனியன் பிரதேசத்தில் வாங்கி மற்ற மாநிலங்களில் ஓட்டுகின்றனர். தமிழ்நாடு, கர்நாடகா இதில் டாப். இனி இதுபோல வரியை மிச்சப்படுத்த முடியாது. ஆனால்,  சொந்த மாநிலங்களில் பதிவு செய்துவிட்டு உண்மையான சில காரணங்களுக்காக வாகனத்தை மற்ற மாநிலத்தில் பயன்படுத்துபவர்களுக்கு அனுமதிக்கான சிரமங்கள் குறைந்துவிடும்.

ஒரே நாடு ஒரே வரி

நாடு முழுவதும் ஒரே வரி வருவதால் தென் மாநிலங்களில் வாகனங்களின் விலை குறையும். ஏற்கனவே வரி குறைவாக இருக்கும் டெல்லி, மும்பை போன்ற மாநிலங்களில் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கூடுதலாக, கமர்ஷியல் மற்றும் பிரைவேட் வாகனங்களுக்கான நேஷனல் பர்மிட் முறையும் மாறப்போகிறது. பிரைவேட் கார்களை அனைத்து மாநிலத்திலும் பயன்படுத்த அனுமதி உள்ளது இதே போல கமர்ஷியல் வாகனங்களையும் மாற்றி அனைத்தையுமே நேஷனல் பர்மிட்டாக மாற்றும் திட்டத்தையும் வைத்துள்ளார்கள்.


ஒரே நாடு ஒரே வரி

இந்தியா முழுவதும் தனியார் வாகனங்களின் வளர்ச்சி 20 சதவிகிதமாக இருக்கிறது. ஆனால், பொது போக்குவரத்து வாகனங்களின் வளர்ச்சி 2 சதவிகிதம் மட்டுமே உள்ளது. புதிய நேஷனல் பர்மிட் முறை வந்துவிட்டால் பொது போக்குவரத்து வாகனங்களின் வளர்ச்சி அதிகரிப்பதுடன் மக்கள் எந்த நெருக்கடியும் இல்லாமல் பொது வாகனங்களைப் பயன்படுத்துவார்கள் என்பதே இதற்கான முக்கிய காரணம். புதிய திட்டங்கள் அமலுக்கு வரும்போது மின்சார வாகனங்களுக்கு வரிச் சலுகையோ அல்லது வரி விலக்கோ தரப்படும். இந்தத் திட்டம் மாநில அரசுகளுக்குச் சாலை வரி மூலம் வரும் லாபத்தைக் குறைத்துவிடும். சாலை வரியை ரூ.10 லட்சம் வரை விலை உள்ள வாகனங்களுக்கு 8 சதவிகிதமும், ரூ.10 முதல் ரூ.20 லட்சம் வரை உள்ளவைக்கு 10 சதவிகிதமும், அதற்கு மேல் விலை உள்ள வாகனங்களுக்கு 12 சதவிகிதமும் வசூலிக்க திட்டமிட்டுள்ளனர். தற்போது தமிழ்நாட்டில் 10 லட்ச ரூபாய்க்கு குறைவான வாகனங்களுக்கு 10 சதவிகிதமும், அதற்கு மேல் உள்ளவைக்கு 15 சதவிகிதமும் சாலை வரியாக வாங்கப்படுகிறது. புதிய திட்டம் நடைமுறைக்கு வந்தால் தமிழ்நாட்டில் வருவாய் இழப்பு ஏற்படும்.
 
வாகனங்களுக்கு ஒரே நாடு, ஒரே வரி, ஒரே பர்மிட் எல்லாம் சரி... ஆனால், பெட்ரோல், டீசலுக்கு ஏன் இதைச் செயல்படுத்த முடியவில்லை?


- ரஞ்சித் ரூஸோ.

 

TAGS :   ஒரே சாலை, ஒரே வரி, ஒரே நாடு, ஜிஎஸ்டி, மத்திய அரசு, புது வரித்திட்டம்.