சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுகளுக்கான வாரம் இது...
Posted Date : 16:41 (25/04/2018)
Last Updated : 17:17 (25/04/2018)

 

இந்தியாவில் சாலை விபத்துகள் அதிகமாக உள்ளது. இதை குறைப்பதற்கு கடுமையான சட்டங்கள் மட்டும் போதாது அனைத்து தரம்பினரிடமும் சாலை போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு இருக்க வேண்டும்.  இதற்கான முயற்சியாக மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை ஒவ்வொரு ஆண்டும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு வாரத்தைக் கடைப்பிடிக்க அறிவுறுத்துகிறது. அதன்படி தமிழகத்தில் இந்த வாரம் (ஏப்ரல் 23 முதல் 30 வரை)  சாலை பாதுகாப்பு வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. 

சாலை பாதுகாப்பு வாரம்
 
இந்த நாட்களில் பள்ளி, கல்வி நிறுவனங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள், போக்குவரத்து துறை, போலீஸார் சார்பில் பேரணி, கருத்தரங்குகள், பிரசுரங்கள் விநியோகம், பள்ளிகளில் கட்டுரை, பேச்சுப் போட்டிகள், விழிப்புணர்வு நாடகங்கள் போன்றவை நடத்தப்படும். இந்த ஆண்டு 2 மாத காலம் தாமதமாகத் தொடங்கிய 29-வது சாலைப் பாதுகாப்பு வாரத்தின் தொடக்க விழாவில் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அமைச்சர்கள் தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
 
சாலை பாதுகாப்பு வாரம்
 
இதில் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள், வாகன விற்பனையாளர்கள், டிரைவர்கள்,  NSS மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், தண்ணார்வளர்கள் உள்படப் பல தரப்பினர் கலந்து கொண்டனர். பேரணியை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்.
 
சாலை பாதுகாப்பு வாரத்தின் ஒரு பகுதியாக, நேற்று வாகன விற்பனையாளர்கள் மற்றும் டிரைவர்கள் தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவதன் முக்கியத்துவம் குறித்த பேரணியை அங்கங்கு நடத்தினர்.
 
 சாலை பாதுகாப்பு வாரம்
 
இன்று, அதிக வேகம், அதிக பாரம் ஏற்றுதல், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லுதல், குடிபோதையில் வாகனம் இயக்குதல் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பாக மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
 
நாளைப் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்து ஓட்டுநர்கள், அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் தனியார் நிறுவன ஓட்டுநர்கள் கலந்து கொள்ளும் இலவச மருத்துவ முகாம் அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நடத்தப்படுகிறது.
 
சாலை பாதுகாப்பு வாரம்
 
27-ந் தேதி சுங்கச்சாவடி மையங்களில் போக்குவரத்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்படுகிறது. வாகனத்தின் பின்புறங்களில் ஒளியைப் பிரதிபலிக்கும் சிவப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டுதல் உள்ளிட்ட போக்குவரத்து விழிப்புணர்வு அறிவுரை வழங்க உள்ளார்கள்.
 
28-ந் தேதி மாநிலம் முழுவதும் பஸ், ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஊர்காவல் படை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
 
29-ந் தேதி சாலை விதிமீறல்கள் குறித்த சிறப்பு வாகன சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
 
 
சாலை பாதுகாப்பு வாரம்
 
 
இந்த ஒரு வாரம் மட்டும் இல்லாமல், ஒவ்வொறு வாரமும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வுடம் இருப்பது அவசியம்.  நாளை எனும் கனவு இருக்கிறது என்ற நம்பிக்கைதான் நம்மை உற்சாகமாகவும், உயிர்ப்புடனும் வைத்திருக்கிறது. நாளைதான் நம் அனைவரையும் வழிநடத்தவும் செய்கிறது. நம் தேசத்தில் நம்மைப்போல், ‘நாளை’ குறித்த பெரும் நம்பிக்கையுடன் இருக்கும் நம் சகமனிதர்களின் நாளையை பாதுகாக்க வேண்டியது நம் கடமை, அரசின் கடமை...
 
 
- ரஞ்சித் ரூஸோ.
TAGS :   சாலை பாதுகாப்பு வாரம், சாலை போக்குவரத்து, பாதுகாப்பு