7.45 லட்சத்துக்கு வெளியானது சுஸூகி GSX-750
Posted Date : 18:35 (25/04/2018)
Last Updated : 18:38 (25/04/2018)
 
சுஸூகியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பெர்ஃபார்மன்ஸ் பைக்கான GSX-750 விற்பனைக்கு வந்துவிட்டது. டெல்லி அட்டோ எக்ஸ்போவில் முதல் முறை காட்சிப்படுத்தப்பட்டு மக்களை ஈர்த்த இந்த பைக் 7.45 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் வெளியாகியுள்ளது. ஹையபுஸாவுக்கு பிறகு இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் இரண்டாவது சுஸூகி பைக் இது. அனைத்து சுஸூகி சூப்பர் பைக் ஷோரூம்களிலும் முன்பதிவுகள் தொடங்கிவிட்டது. ஒரு மாத காலத்தில் பைக் டெலிவரி செய்யப்படும் என்று கூறியுள்ளார்கள். 

சுஸூகி GSX-750
 
GSX-1000 பைக்கின் மினி வெர்ஷன் போல இருக்கும்  GSX-750  அக்ரஸிவான ஸ்டிரீட் பைக் டிசைனில் இருக்கிறது. ஸ்போர்ட்ஸ் பைக் போல டிஜிட்டல் LCD இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ஆஃப் செய்யக்கூடிய மூன்று லெவல் டிராக்‌ஷன் கன்ட்ரோல் சிஸ்டம்,  ride-by-wire எனப் பல தொழில்நுட்பங்கள் உள்ளன. இந்த பைக்கில், 749சிசி, இன்லைன் 4 சிலிண்டர்,  DOHC இன்ஜின் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி வருகிறது. இது 114 bhp பவர் மற்றும் 8.1 kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. Kayaba நிறுவனத்தின் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய 41 mm USD ஃபோர்க்குகள் முன்பக்கமும், பின் பக்கம் மோனோஷாக் சஸ்பென்ஷனும் வருகிறது. 17 இன்ச் அலாயல் வீல்களுடன் ப்ரிட்ஜ்ஸ்டோன் பேட்டிலாக்ஸ் ஹைப்பர்ஸ்போர்ட் டயர்களும் உண்டு. 

சுஸூகி GSX-750
 
பிரேக்கை வேலைகளை, 310மிமீ டூயல் முன் பக்க டிஸ்க், பின்பக்க 240மிமீ டிஸ்க் பிரேக், ஏபிஎஸ் செய்கிறது. இந்த பைக்கின் 4 பிஸ்டன் கேளிப்பர்கள் நிஸின் நிறுவனத்தின் தயாரிப்பு. 16 லிட்டர் பெட்ரோல் டேங்க்தான் என்றாலும் பைக்கின் எடை 215 கிலோ.  கவாஸகி  Z900, டிரையம்ப் ஸ்டிரீட் ட்ரிப்பிள்  S, மற்றும் யமஹா  MT 09 பைக்குகளோடு போட்டிபோட வந்திருக்கும்  GSX-750 போட்டியாளர்களை விலை குறைவானதாகவும், அதிக பவர் கொண்டதாகவும் உள்ளது.
 
 
- ரஞ்சித் ரூஸோ.
TAGS :   சுஸூகி, GSX-750, ஜிக்ஸர், சுஸூகி பைக்ஸ், சூப்பர்பைக்