இரண்டு புதிய எஸ்யூவிகளை தயாரிக்கவுள்ளது ஹோண்டா...
Posted Date : 14:52 (02/05/2018)
Last Updated : 20:15 (03/05/2018)
 
இந்தியாவில் பெரும் வளர்ச்சியை அடைந்துவருகிறது எஸ்யூவி விற்பனை. மாருதியும், மஹிந்திராவும் முதல் இடத்துக்கு போட்டிபோட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் ஹூண்டாய் கிரெட்டாவின் விற்பனை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில்,  sub 4 meter எஸ்யூவியான  WRV ஹோண்டாவுக்கு கணிசமான விற்பனையைக் கொடுப்பதால் இதை விட விலை குறைவான வசதிகள் அதிகமான புதிய எஸ்யூவியை களமிறக்கத் திட்டமிட்டுள்ளது. நான்கு மீட்டருக்கு குறைவான நீளத்தில் WRV-க்கு பதிலாக ஒரு எஸ்யூவியும், க்ரெட்டாவுக்கு போட்டியாக இன்னொரு எஸ்யூவியையும் 2020-ம் ஆண்டு வெளியிடவுள்ளதாகத் தகவல் வந்துள்ளது.
 
 
ஹோண்டா எஸ்யூவி
 
 
இந்த இரண்டு புதிய எஸ்யூவிகளும், வெளியாகவுள்ள அமேஸ் காரின் பிளாட்ஃபார்மில் வரப்போகிறது. பழைய அமேஸ் பிளாட்ஃபார்ம் சிறிய கார்களுக்கு என்று உருவாக்கப்பட்டது. ஆனால், இப்போது வரவிருக்கும் அமேஸின் பிளாட்ஃபார்ம் 4 மீட்டருக்குள் அடங்கும் எஸ்யூவியை கட்டமைக்க ஏதுவாகவும், பெரிய வீல்களை பொருத்த வசதியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளதாம். முதலில் வரவிருக்கும்  sub 4 மீட்டர் எஸ்யூவி மாருதியின் விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான் மற்றும் ஃபோர்டு எக்கோஸ்போர்ட் மாடல்களுடன் போட்டிபோடும். இன்னும் 2 ஆண்டுகளில் விற்பனைக்கு வரவுள்ள இந்த எஸ்யூவியின் விலை அமேஸ் காருக்கு நிகரானதாகவே இருக்கும்.
ஹோண்டா எஸ்யூவி
 
ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு போட்டியாக வரப்போகும் மாடல் 4.3 மீட்டர் நீளம் வரை இருக்கும்.  BR-V போன்ற க்ராஸ்ஓவராகவே இல்லாமல் டிசைன், பெர்ஃபார்மன்ஸ் இரண்டிலுமே உண்மையான எஸ்யூவியாக இருக்கும். 5 சீட்டா அல்லது 7 சீட் காரா என்பது இன்னும் உறுதியாகவில்லை. க்ரெட்டாவில் அடுத்த ஆண்டு 7 சீட்டர் வேரியன்ட் வருவதால் இந்த காரில் 7 சீட் ஆப்ஷன் வருவதற்கு வாய்ப்புள்ளது. இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் பொருத்தவரை தற்போது ஹோண்டா கார்களில் வரும் இன்ஜின்-கியர்பாக்ஸ் கூட்டணிதான் இருக்கும். சிறிய எஸ்யூவியில் அமேஸின் இன்ஜினும், பெரிய எஸ்யூவியில் சிட்டியின் இன்ஜினும் வரலாம். ஆனால், பிஎஸ் 6 விதிமுறை கட்டாயமாக்கப்பட்டதால் அதற்கேற்ப இன்ஜின்கள் மாற்றியமைக்கப்படும்.ஜப்பான் நிறுவனமான ஹோண்டா 2020-ம் ஆண்டில் 6 புதிய கார்களை விற்பனைக்குக் கொண்டுவரவிருப்பதாக முன்பே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 
 
 
- ரஞ்சித் ரூஸோ.
TAGS :   ஹோண்டா கார்ஸ், ஹோண்டா எஸ்யூவி, WRV, CRV, Honda Cars