கோவையில் கிளம்பிய புழுதி புயல்...'டர்ட் ட்ராக் – 2018'!
Posted Date : 16:54 (02/05/2018)
Last Updated : 20:10 (03/05/2018)


போட்டி நடத்துவது என்றால் மாரத்தான், கிரிக்கெட் போட்டிதான் வழக்கம். இப்போது, அந்த டிரெண்ட் மாறி டர்ட் பைக் ரேஸ் எனப்படும் ஆஃப் ரோடு பைக் ரேஸ் பரவலாகிவருகிறது. சமீபத்தில், கோவை மாநகரில் கொளுத்தும் கோடை வெயிலில்  “டர்ட் ட்ராக் – 2018“ போட்டி நடைபெற்றது.

 

 டர்ட் டிராக் ரேஸ்


பிகினர், இன்டர் மீடியட், எக்ஸ்பர்ட், 2 ஸ்ட்ரோக் ஓபன், 4 ஸ்ட்ரோக் ஓபன் மற்றும் இந்தியன் ஓபன் என ஆறு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில், டர்ட் ட்ராக்கில் ஒட்டி முன் அனுபவம் இல்லாதவர்கள் பிகினர் பிரிவிலும், ஓரளவு அனுபவம் வாய்ந்தவர்கள் இன்டர் மீடியட்டிலும், பல்வேறு போட்டிகளில் பங்குபெற்று கோப்பை வாங்கியவர்கள் எக்ஸ்பர்ட் பிரிவிலும் பங்கேற்றனர். ஓபன் போட்டிகளை பொருத்தவரை அதன் சிறப்பே, ரைடர் மற்றும் பைக்கிற்கு வரைமுறைகள் ஏதும் கிடையாது. அதனால் பார்க்க செம த்ரில்லாக இருக்கும். 
 
கோவை டர்ட் டிராக் ரேஸ்


2 ஸ்ட்ரோக் ஒப்பனில் 2 ஸ்ட்ரோக் பைக் வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும், பங்குபெறலாம். 2 ஸ்ட்ரோக் பைக்கா, அப்போ RX 100 தானே அதிகமா இருக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. யமஹா ஃபேன்ஸை கலாய்த்து மீம் போடும் அளவிற்கு சுஸூகி சாமுராய்கள் நிரம்பி வழிந்தன. யமஹாவில் சற்று கூடுதல் பிக் அப் இருக்கலாம், ஆனால் ஹண்ட்லிங்கில் சுஸூகிதான் கில்லி என்றார் வந்திருந்த ரேஸர் ஒருவர். டர்ட் டராக்கில் பிக் அப்பை விட ஹண்ட்லிங் தான் முக்கியம். சற்று பிசகினாலும், சேற்றில் அடிவாங்க வேண்டியதுதான்.
 
 
கோவை டர்ட் டிராக் 2018
 
 
4 ஸ்ட்ரோக் ஓப்பன் கிளாஸிலும் ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. ஹீரோ இம்பல்ஸ் நினைவிருக்கிறதா..? ஹோண்டா பிரிந்த பிறகு, ஹீரோ வெளியிட்ட முதல் பைக். ஒட்டு மொத்த மோட்டோ கிராஸ் ரசிகர்களையும் இதன் குறைந்த பவர் ஏமாற்ற, ஜீரோ விற்பனையால் ஒரு கட்டத்தில் ஹீரோ இதன் தயாரிப்பை நிறுத்தியது. இங்கு வந்த பார்த்த போது எனக்கு தோன்றிய ஒரே கேள்வி, “இவ்ளோ இம்பல்ஸ் விற்பனையாகி இருக்கிறதா..?!” அந்த அளவுக்கு 4 ஸ்ட்ரோக் பிரிவில் 75 விழுக்காடு இம்பல்சை அடிப்படையாக கொண்ட பைக்குகள் தான் பங்குபெற்றன.  இம்பல்ஸ் மட்டுமல்ல கூடவே, அதன் காலகட்டத்தில் தொழில்நுட்பத்தில் முந்தியிருந்த சுஸுகி பியரோ பைக்கை காண முடிந்தது. இது எப்படி சார் இம்பல்ஸ் கூட போட்டி போடும் என ஒரு ரேஸரை பிடித்து கேட்க, ரஜினி ஸ்டைலில் கொஞ்சம் கீழ பாரு கண்ணா என்றார். எல்லாம் அப்பாச்சி 180cc இன்ஜின்கள்! 
 
 
கோவை டர்ட் டிராக் 2018


இந்த ஆச்சர்யம் அடங்குவதற்குள், அடுத்த ஒன்றும் வந்துசேர்ந்து. 'விதிமுறைகள் எதுவும் கிடையாது', பதிவு செய்த யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம் என தொடங்கியது இந்தியன் ஓபன் கிளாஸ். என்ஜின் சத்தம் காதை கிழிக்க, புழுதி கண்ணை மறக்க உடல் சிலிர்க்கும்படி ரேஸ் நடைபெற்றது. இதில் கோவையை சேர்ந்த தேசிய மோட்டோ கிராஸ் சாம்பியன் ஜெகதீஷ் முதல் இடமும், கேரளாவை சேர்ந்த மோட்டோ கிராஸ் சாம்பியன் அமல் வர்கீஸ் இரண்டாவது இடமும் பிடித்தனர். அமல் வர்கீஸ் ரைடர் மட்டுமல்ல அவர் பைக்கின் ட்யூனரும் கூட! 
 
 
மோட்டோ கிராஸ் டர்ட் ரேஸ்
 

தமிழகம், கேரளா தென்மாநிலங்கள் மட்டுமல்ல, அசாமிலிருந்தும் வந்திருந்தனர் மோட்டோ கிராஸ் ரைடர்களும் அவர்களின் ட்யூனர்களுக்கும். 6 பிரிவுகளில் மொத்தம் 40  கோப்பைகளுடன் அனைவரின் திறமைகளுக்கும் உரிய அங்கீகாரம் கொடுத்தபடி முடிவடைந்தது “டர்ட் டிராக் – 2018”.
 
 
கட்டுரை, படங்கள் : விநாயக் ராம் (மாணவப் பத்திரிக்கையாளர்).
 
 

 

TAGS :   டர்ட் டிராக், மோட்டோ க்ராஸ், கோவை ரேஸ், கோயம்பத்தூர்