ரூ.48 லட்சத்துக்கு வெளியாகியிருக்கும் பைக்...
Posted Date : 18:08 (02/05/2018)
Last Updated : 18:09 (02/05/2018)
 
அமெரிக்காவின் இந்தியன் மோட்டார்சைக்கில் நிறுவனத்தின் இந்தியன் ரோடுமாஸ்டர் எலீட் பைக் ரூ.48 லட்சம் எனும் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. தற்போது விற்பனையில் இருக்கும் ரோடுமாஸ்டர் பைக்கை விட ரூ.10 லட்சம் கூடுதல் விலையில் வந்திருக்கும் எலீட் பைக்கில் அப்படி என்ன உள்ளது எனப் பார்ப்போம்.
 
இந்தியன் ரோடுமாஸ்டர்
 
ப்ளூ மற்றும் பிளாக் என இரண்டு நிறங்களில் வருகிறது இந்த பைக். இந்த பைக்குக்கு நிறத்தை அளிக்க 30 மணிநேரம் தேவை என்கிறார்கள் இந்தியன் மோட்டார்சைக்கில் நிறுவனத்தினர். இயந்திரங்கள் இல்லாமல் மனித கைகளால் உருவாக்கப்பட்டுள்ளது இந்த பைக். பெட்ரோல் டேங்கில் இருக்கும் லோகோவை 23 காரட் தங்கத்தால் இழைத்துள்ளார்கள். சாதாராண ரோடுமாஸ்டர் பைக்கில் வரும் 1,811  cc, ‘Thunder Stroke 111’ V-twin இன்ஜின்தான் இந்த பைக்கிலும் வருகிறது. வெறும் 3000   rpm-ல், 161.6  Nm டார்க் உருவாக்கக்கூடியது இந்த இன்ஜின். டெலஸ்கோப்பிக் ஃபோர்க்குகள், மோனோஷாக் என சஸ்பென்ஷன் சாதாரணமாகத் தெரிந்தாலும் இது பைக்கின் 433 கிலோ எடையைத் தாங்கி அதிர்வுகள் இல்லாமல் நம்மை அழைத்துச்செல்கிறது. முன்பக்கம் இரண்டு 300 மி.மீ டிஸ்க் பிரேக்குகளும், பின் பக்கம் ஒரு 300 மி.மீ டிஸ்க் பிரேக்கும் பைக்கில் உள்ளது. 
 
இந்தியன் ரோடுமாஸ்டர்
 
ரோடுமாஸ்டர் பைக்கில் இருப்பது எல்லாமே LED லைட்டுகள்தான். பைக்கை சுற்றி பளபளப்பான க்ரோம் பூச்சு அங்கங்கு உள்ளன.   USB மற்றும்   Bluetooth வசதியுடன் 300  W ஆடியோ சிஸ்டம் உள்ளது. ரோடுமாஸ்டர் பைக்கில் அட்ஜஸ் செய்யக்கூடிய வின்ட் ஸ்கிரீன், ஃப்ளோர் போர்டு, எலக்ட்ரானிக் ஹீட்டட் சீட், க்ரூஸ் கன்ட்ரோல், தண்ணீர் புகாத பக்கவாட்டு பைகள் மற்றும் 140 லிட்டர் அளவுகொண்ட தண்ணீர் புகாத பின் பக்க டிரங்க்கும் உள்ளது. ரோடு மாஸ்டர் எலீட் பைக் ரூ.49.99 லட்சத்துக்கு விற்பனையாகும் ஹார்லி டேவிட்ஸன்   CVO உடன் போட்டிபோடுகிறது.
 
 
- ரஞ்சித் ரூஸோ.
TAGS :   இந்தியன் ரோடுமாஸ்டர், இந்தியன் மோட்டார்சைக்கில்ஸ், ரோடுமாஸ்டர்