2500 டிகிரி வெப்பத்தில் இயங்கும் இன்ஜின், எப்படி தன்னைக் கூலாக வைத்திருக்கிறது?
Posted Date : 20:29 (03/05/2018)
Last Updated : 20:37 (03/05/2018)


 

வெயில் மற்றும் அதனால் உண்டாகும் வெப்பம்.... நம்மை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒன்று மட்டும், வெப்பத்தை உருவாக்கி மகிழ்ச்சியுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. அது இன்ஜின்தான் மக்களே! ஆம், பெட்ரோல்/டீசலை எரியூட்டுவதால் உண்டாகும் வெப்பத்தினால்தான், வாகனம் முன்னோக்கி செல்வதற்கான உந்துசக்தி கிடைக்கிறது. ஆனால் முன்னே சொன்ன நிகழ்வால் உற்பத்தியாகும் வெப்பத்தில் 30 சதவிகிதம் மட்டுமே இன்ஜின் பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்கிறது. மீதம் அனைத்தும் வீணாகப் போகின்றது என்றாலும், அது இன்ஜினிலிருந்து வெளியே செல்லும் வழியெங்கும் இருக்கும் அனைத்தையும் வெப்பமயமாக்கி விடும் தன்மையைக் கொண்டுள்ளது. இது சரியாகக் கவனிக்கப் படாவிட்டால், அது இன்ஜின் பாகங்களை உருக்கி, உச்சபட்சமாக Engine Seize ஆவதில் முடிவடையும்.  
 
 
 
 
ஏனெனில் Power Stroke சுழற்சியின்போது, இன்ஜின் அதிகபட்சமாக 2500 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையில் இயங்கும்  என்பதால், இன்ஜின் பாகங்களைக் குளிர்வித்தல் என்பது, இன்ஜினின் நிடீத்த ஆயுளுக்கு மிகவும் அவசியம். ஆனால் மனிதர்களைப் போலவே, இன்ஜினும் குறிப்பிடத்தக்க வெப்பநிலையில் சிறப்பான பர்ஃபாமென்ஸைத் தரவல்லது. இன்ஜின் குறைவான வெப்பநிலையில் இருந்தால், பெட்ரோல்/டீசல் எரியூட்டப்படுவது சீராக இருக்காது. மேலும் இந்நேரத்தில் இன்ஜின் ஆயிலும் தடிமனாக இருக்கும் என்பதால், அது Power Loss-க்கு வழிவகுக்கும். ஒருவேளை இன்ஜின்  அதிகபட்ச வெப்பநிலையில் இருந்தால், பெட்ரோல்/டீசல் தானாகவே எரியூட்டப்படும் என்பதுடன், இன்ஜின் ஆயிலும் தனது மசகுத்தன்மையை இழந்திருக்கும். எனவே இன்ஜின் பாகங்கள் செயல் இழப்பதற்கான சாத்தியங்கள் இங்கே அதிகம்.
 
 
Natural ஏர்-கூல்டு இன்ஜின்:
 
 
 
 
ஆக ஒரு இன்ஜினின் கூலிங் அமைப்பின் பணி என்பது, இன்ஜினை அதன் சரியான வெப்பநிலையில் தொடர்ந்து இயங்க வைப்பதே. ஏர் கூல்டு மற்றும் லிக்விட் கூல்டு ஆகியவை, இன்ஜின் கூலிங் முறையின் வகைகள் ஆகும். ஏர் கூலிங் ஒரு மிகவும் எளிமையான வழிமுறை. இதில் எதிர்திசையில் வரும் காற்று, இன்ஜினைத் தாண்டி செல்லும். அப்போது இன்ஜின் வெளியிடும் வெப்பத்தைத் தன்னகத்தே இழுத்துச் செல்வதால், இன்ஜினின் வெப்பநிலை தொடர்ந்து சமவிகிதத்தில் இருக்கும். இந்த வகை இன்ஜின்களின் பாகங்களில், இதற்காக Fins இருக்கும். அவை இன்ஜின் பாகங்களில் காற்று படர்வதை உறுதி செய்யும். இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் ஸ்ப்ளெண்டர், ஷைன் ஆகிய டூ-வீலர்கள், இந்த Natural ஏர் கூலிங் பாணியைத்தான் பின்பற்றுகின்றன. 
 
 
Forced ஏர்-கூல்டு இன்ஜின்:
 
 
 
 
இதுவே ஆக்டிவா போன்ற ஸ்கூட்டர்களில் இன்ஜின் பகுதி, பாடி பேனல்களால் சூழப்பட்டிருக்கும். இதற்கான தீர்வாக, இன் ஜினுக்குக் குளிர்ந்த காற்றை வழங்கும் பொருட்டு, சிறிய ஃபேன் பொருத்தப்பட்டிருப்பதைப் பார்க்க முடியும். இதன் பெயர்தான் Forced ஏர் கூலிங். இதுவே லிக்விட் கூலிங் முறை என்றால், பம்ப்பின் உதவியுடன் இன்ஜினின் மேல்பகுதியைச் சுற்றி திரவம் ஒன்று படரும். அது தண்ணிராகவோ, அடிட்டீவ்களுடன் கூடிய கூலன்ட்டாகவும் இருக்கலாம். பழைமையான லிக்விட் கூல்டு இன்ஜின்களில் தண்ணீர்தான் பயன்படுத்தப்பட்டன. சமீபத்திய பவர்ஃபுல் லிக்விட் கூல்டு இன்ஜின்களில், கூலன்ட்தான் பிரதான இடத்தைப் பிடித்திருக்கின்றன. அவை இன்ஜின் பாகங்கள் துருப்படுவதைத் தவிர்ப்பதுடன், குளிர் காலங்களில் சீரான இன்ஜின் இயக்கத்துக்கும் துணை நிற்பதே இதற்கான காரணம். 
 
 
லிக்விட்-கூல்டு இன்ஜின்:
 
 
 
 
பம்ப்பின் பணி என்பது, கூலன்ட்டை இன்ஜின் பாகங்களுக்குத் தொடர்ச்சியாக அனுப்புவதுடன், கூலன்ட்டின் வெப்பநிலையை 80 டிகிரி செல்சியஸ் முதல் 90 டிகிரி செல்சியஸ் வரை தக்க வைப்பதே ஆகும். எப்படி ஏர்கூல்டு இன்ஜின்களில் Fins இருந்ததோ, லிக்விட் கூல்டு இன்ஜின்களில் Jackets இருக்கின்றன. இதனுடன் டியூப்களுடன் கூடிய பெரிய Fin அமைப்பு இடம்பெற்றிருக்கும். இது முன்னோக்கிச் செல்லும்போது எதிர்வரும் காற்றை உள்வாங்கிக் கொண்டு, கூலன்ட்டின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும். அதில் கூடுதலாக இருக்கும் ஃபேன், ThermoStat உதவியுடன் இன்ஜினின் வெப்பநிலையை அறிந்து, தானாகச் செயல்பட்டு கூலன்ட்டைக் குளிர்விக்கும். இதுதான் ரேடியேட்டரின் பணி. கேடிஎம் டியூக் மற்றும் பஜாஜ் பல்ஸர் NS200 ஆகிய பைக்குகளில் இந்த பாணி கூலிங் அமைப்பைப் பார்க்கலாம்.
 
 
ஆயில் கூல்டு இன்ஜின்:
 
 
 
 
:லிக்விட் கூலிங் அமைப்பின் விலை அதிகம் என்பதால், இதற்கான மாற்றாக வந்தவைதான் ஆயில் கூலர்கள். இவை இன்ஜினுக்குள் இருக்கும் ஆயிலை, வெளிப்புறத்தில் இருக்கும் காற்றின் உதவியுடன் குளிர்வித்து, இன்ஜின் ஆயிலின் மசகுத்தன்மையை குறையாமல் பார்த்துக் கொள்ளும். இது ஏர் கூலிங் செட்-அப்புடன் இணைந்தே செயல்படும் என்பது ப்ளஸ். பஜாஜ் பல்ஸர் 220 மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 பைக்கை உதாரணங்களாகச் சொல்லலாம்.
 
 
 - ராகுல் சிவகுரு.
 
 

 

TAGS :   AIR COOLED, OIL COOLED, FORCED AIR COOLED, NATURAL COLLING, ENGINE COOLING SYSTEMS, LIQUID COOLING, 2500 DEGREES, COMBUSTION, POWER STROKE, COMPRESSION STROKE, ENGINE OIL, COOLANT.