செடான் பாடியில் ஒரு ஸ்போர்ட்ஸ் கார்... வந்துவிட்டது மெர்சிடீஸ் AMG E 63 S 4Matic+
Posted Date : 16:13 (04/05/2018)
Last Updated : 16:39 (04/05/2018)
 
மெர்சிடீஸ் தனது அதிவேகமான E-class மாடல் காரை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.   E-63 காரை பல நாடுகளில் விற்பனை செய்துவந்தாலும், இந்தியாவுக்கு அதைவிட பவர்ஃபுல்லான    AMG E-63 S மாடலை கொண்டுவந்துள்ளது இந்நிறுவனம். புது   S class, மேபாக்   S 650, GLS கிராண்ட் எடிஷன் என்ற வரிசையில் இந்த ஆண்டு மெர்சிடீஸ் வெளியிடும் நான்காவது கார் இது. 
 
மெர்சிடீஸ்
 
 AMG E 63 S 4Matic+ என்ற இந்த கார் E-class வரிசையிலேயே விலையுயர்ந்த கார். 100 கி.மீ வேகத்தை வெறும் 3.4 நொடிகளில் தொடுகிறது. இது ஸ்போர்ட்ஸ் காரான   AMG GT R காரைவிட வேகமானது. 4.0 லிட்டர் ட்வின் டர்போ   V8 இன்ஜின் கொண்ட இந்த கார் 612  bhp பவரையும் 850  Nm டார்க்கையும் உருவாக்கக்கூடியது. இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும்   E-class போல லாங் வீல்பேஸ் கிடையாது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வருகிறது.
 
AMG E63
 
மெர்சிடீஸின் 4  Matic+, ஃபோர் வீல் டிரைவ் தொழில்நுட்பம் இதில் வருகிறது. 9 ஸ்பீடு, டூயல் க்ளட்ச் ஆட்டோமெடிக் கியர்பாக்ஸ் இந்த காரில் உள்ளது. 300 கி.மீ-க்கு மேல் வேகமாகப் போகமுடியும் என்றாலும் இந்த கார் 250 கி.மீ வேகத்துக்கு மேல் போகாதபடி வேகக்ட்டுப்பாட்டு கருவி பொருத்தியுள்ளனர். காரின் மைலேஜ் அதிகரிக்க குறைந்த வேகத்தில் போகும்போது பாதி இன்ஜின் மட்டுமே வேலைசெய்யும் விதமாக   cylinder deactivation technology இதில் உள்ளது.  4 வீல் டிரைவ் இருந்தாலும், இதில் ட்ரிஃப்ட் மோடு (  Drift Mode) எனும் ரைடிங் மோடு உள்ளது. ட்ரிஃப்ட் மோடை பயன்படுத்தினால் ரியர் வீல் டிரைவ் காராக மாறிவிடும்.   AMG கார் என்பதால் ஸ்போர்ட் கார்களுக்கே உரிய ஸ்போர்ட்ஸ் சஸ்பென்ஷன்,   electronic controlled differential lock, டயனமிக் இன்ஜின் மவுன்ட்டுகள், கார்பன் செராமிக் டிஸ்க் பிரேக்குகள் என பல தொழில்நுட்பங்கள் உள்ளன.
 
 
 
சொல்வதற்குத்தான் சவுண்டாக இருக்கும்   E-class கார்கள் என்பார்கள். ஆனால், இந்த கார் பார்ப்பதற்கும் அசத்தலாக இருக்கிறது. அதிலும், க்ரில், போனட், பம்பர் மூன்றுமே புதிது. பெரிய ஏர் இன்டேக், ஸ்போர்ட்டி எக்ஸாஸ்ட் செட்டப், பெருத்த வீல் ஆர்ச்சுகள் மற்றும் 20 இன்ச் கிரே அலாய் வீல்கள் காரை கம்பீரமாக காட்டுகின்றன. இந்தியாவில் ரூ.1.5 கோடி எக்ஸ்ஷோரூம் விலைக்கு வெளிவந்திருக்கும் இந்த கார் தற்போது 1.45 கோடிக்கு விற்பனையாகும் பிஎம்டபிள்யூ M5 காருடன் போட்டிப்போடுகிறது.
 
- ரஞ்சித் ரூஸோ. 
TAGS :   மெர்சிடீஸ் AMG, E-Class, E 63 S, மெர்சிடீஸ் ஏஎம்ஜி