புதிய ஃபுல் ஃபேரிங் பைக்கை வெளியிட்டுள்ளது ஜாவா
Posted Date : 11:20 (08/05/2018)
Last Updated : 11:24 (08/05/2018)
 
ஜாவா பைக் நிறுவனம் ஐரோப்பாவில் புதிய பைக்கை வெளியிட்டுள்ளது. ஜாவா 350 ஸ்பெஷல் எனும் இந்த பைக் ஜாவாவின் ரேஸிங் காலத்தை நினைவுபடுத்தும் விதமாக உள்ளது. பெரிய ஃபேரிங், ரெட்ரோ கலர், பல இடங்களில் க்ரோம், உருண்டையான ஹெட்லைட்டுகள், கஃபே ரேஸர் போன்ற டெயில் பகுதி, தட்டையான சீட்டு, சற்று மேல் நோக்கிப் பார்த்தவாறு இருக்கும் சைலன்சர் என 1950,60-களில் இருந்த பழைய ரேஸ் பைக்கை நினைவு படுத்துகிறது.
 
ஜாவா 350 ஸ்பெஷல்
 
 
ஜாவா 350 ஸ்பெஷல் பைக்கின் எடை 171 கிலோ. இது கடைசியாக வெளிவந்த ஜாவா 350  OHC-யை விட 11 கிலோ எடை அதிகம். ஜாவாவின் பேரலல் ட்வின் 397சிசி இன்ஜின்தான் இதிலும் உள்ளது. 27.7 bhp பவரையும் 30.6 Nm டார்க்கையும் வெளிப்படுத்தும் இந்த  FI இன்ஜின் சீன நிறுவனமாக ஷின்ரேவால் உருவாக்கப்பட்டது. டெல்ஃபி நிறுவனத்தின்  FI தொழில்நுட்பம் இந்த இன்ஜினில் உள்ளது. ஐரோப்பாவில் விற்பனைக்கு வந்த ஜாவா பைக்குகளான 660 வின்டேஜ் மற்றும் 350 OHC பைக்குகளை போல இந்த பைக்கும் இந்தியாவில் விற்பனைக்கு வரப்போவதில்லை. ஆனால், மஹிந்திரா மோஜோவின் இன்ஜினோடு புதிய ஜாவா பைக் ஒன்றை இந்தியாவில் களமிறக்கும் தீவிர முயற்சியில் உள்ளது மஹிந்திரா. எந்த பைக்கை களமிறக்கும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது.
 
ஜாவா 350 ஸ்பெஷல்
 
ஒரு சின்ன ஃபிளாஷ்பேக்: 
 
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் 2016-ம் ஆண்டு  Classic Legends பிரைவேட் லிமிட்டட் எனும் நிறுவனத்தின் 60 சதவிகித பங்குகளை வாங்கியது. இந்த நிறுவனம்தான் இந்தியாவின் பெரும் ரசிகர் கூட்டம் கொண்ட ஜாவா பைக்குகளை இந்தியா மற்றும் ஆசிய நாடுகளில் தயாரித்து விற்பனை செய்ய ஒப்பந்தம் போட்டிருந்தது. அதுமட்டுமல்ல வரலாறு சிறப்புமிக்க பிரிட்டிஷ் பைக் நிறுவனமான  BSA நிறுவனமும் இந்நிறுவனத்திடம்தான் உள்ளது. கிளாசிக் லெஜன்ட்ஸை கைப்பற்றியதன் மூலம் தற்போது ஜாவா மற்றும் பிஎஸ்ஏ பைக்குகளை தயாரிக்கும் உரிமை மஹிந்திராவிடம் வந்துவிட்டது. அடுத்த ஆட்டோ எக்ஸ்போவில் மஹிந்திராவின் ஜாவா பைக்கை எதிர்பார்க்கலாம்.
 
- ரஞ்சித் ரூஸோ.
TAGS :   ஜாவா பைக்ஸ், மஹிந்திரா ஜாவா, ஜாவா 350 ஸ்பெஷல், ஜாவா மோஜா இன்ஜின், JAWA 350 Special