கூகுளின் செல்ஃப் டிரைவிங் கார் தொழில்நுட்பம் - வெற்றிகரமாக 11 லட்சம் கி.மீ சோதனை!
Posted Date : 13:01 (19/05/2014)
Last Updated : 12:15 (20/05/2014)

கூகுள் தனது தானியங்கி(செல்ஃப் டிரைவிங்) காரை அமெரிக்காவில் தீவிரமாக சோதித்துவருகிறது. நெவாடா, ஃப்ளோரிடா, கலிஃபோர்னியா, மிச்சிகன் மாகாணங்களில் சோதனை செய்யப்பட்டு வரும் கூகுளின் தானியங்கி கார்கள் ஒட்டுமொத்தமாக இதுவரை 11 லட்சம் கிமீக்களைத் தாண்டியிருக்கின்றன.

 

தானியங்கி கார் சோதனை செய்யப்படும்போது இன்னும் காரின் ஒரு டிரைவர், ஒரு பயணி கட்டாயம் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுடன்தான் தங்களுடைய சாலைகளில் இந்தக் கார்களை சோதனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளன. கூகுளின் இன்ஜினியர்கள் மட்டுமில்லாமல், பொதுமக்களில் சிலரையும் இந்தக் காரில் வைத்து சோதனை செய்து வருகிறது கூகுள்.

கூகுள் செல்ஃப் டிரைவிங் கார்களில் இருக்கும் LIDAR தொழில்நுட்பம் சில கார்களின் விலையைவிட அதிகம். எனவே, இந்த தொழில்நுட்பத்தை குறைந்த விலையில் உருவாக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள். இதுமட்டுமில்லாமல் கூகுள் செல்ஃப் டிரைவிங் கார்களை பொதுவாகப் பயன்படுத்துவதில்  ஏகப்பட்ட சட்டச்சிக்கல்கள் இருப்பதால் அமெரிக்க அரசுடனும் பேச்சுவார்த்தையில் இருக்கிறதாம் கூகுள். இன்னும் 5 வருடங்களில் இந்தத் தொழில்நுட்பம் பரவலாகப் பயன்படுத்தப்படவேண்டும் என்ற திட்டத்தில் இருக்கிறது கூகுள். அதற்காக பல கார் நிறுவனங்களுடன் ரகசிய பேச்சுவார்த்தைகள் நடக்கின்றனவாம்.


சோதனையின்போது இதுவரை இரு சிறிய விபத்துகளில் மட்டுமே சிக்கியிருந்தாலும், அந்த இரண்டு விபத்துகளும் நடக்கும்போது தானியங்கி கார்களை ஓட்டிக்கொண்டிருந்தது மனிதர்கள்தான் என்கிறது கூகுள்.

TAGS :   google self driving testing