2014 லே மான்ஸ் ரேஸ் பயிற்சியின் போது ஆடி R18 E-tron Quattro விபத்துக்குள்ளானது!
Posted Date : 12:18 (12/06/2014)
Last Updated : 12:41 (12/06/2014)
 
 
உலகில் அதிகம் மதிக்கப்படும் ரேஸ்களில் ஒன்று, லே மான்ஸ் எண்ட்யூரன்ஸ் ரேஸ். ஜூன் 14,15-ம் தேதிகளில் நடக்க இருக்கும் இந்த போட்டி 82 ஆண்டுகளாக நடக்கிறது.  பிரான்ஸில் உள்ள Circuit de la Sarthe டிராக்கில் நடக்கிறது. இந்த ரேஸ் கார் தொழில்நுட்பங்களுக்கும், மனிதத் திறனுக்கும் சவால்விடும், தொடர்ந்து 24 மணி நேரம் மூன்று டிரைவர்கள் ஒரே காரை நேரம் பிரித்துக்கொண்டு ஓட்டுவார்கள். இந்த ஆண்டின் லே மான்ஸ் ரேஸில் ஆடி உள்ளிட்ட வழக்கமான டீம்கள் தவிர்த்து, 16 ஆண்டுகளுக்குப் பிறகு போர்ஷே பங்கேற்க இருக்கிறது. கோப்பையை வெல்ல டொயோட்டாவும் களமிறங்கியுள்ளது. 
 
 
 
இந்த நிலையில், நேற்று Circuit de la Sarthe டிராக்கில் பயிற்சியில் இருந்தது ஆடி டீம். அவர்களிடம் இருந்த மூன்று Audi R18 E-tron Quattro கார்களில் முதல் சேஸி காரை ஓட்டிக்கொண்டிருந்தார் Loic Duval. அப்போது டிராக்கின் 'Porsche Curves' பகுதியில் ஓட்டிக்கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த சுவரில் மோதி தூள் தூளானது ஆடி R18. இந்த விபத்தில் காரின் பின் பக்கம்தான் அதிகம் சேதமானது. அருகிலேயே ரேஸ் மார்ஷல்கள் இருந்ததால், டிரைவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்ததில், இரு சிராய்ப்புகள் தவிர பெரிய காயம் ஏதும் இல்லை என்று ஆடி நிறுவனம் கூறியுள்ளது. நாளை மறுநாளுக்குள் Loic Duval உடல்நலம் தேறிவிடுவாரா என்று தெரியவில்லை.  ஆனால், ஆடியின் ரிஸர்வ் டிரைவர், Marc Gene, Loic Duval-க்குப் பதிலாகக் களமிறங்குவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தின் காரணம் குறித்தும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
 
 
 
’’இந்த பயங்கர விபத்தில் டிரைவர் உயிர் பிழைத்ததே பெரிய விஷயம்” என்று லே மான்ஸ் ரேஸில் பங்கேற்கும் ரேஸ் டிரைவர்கள் சிலர் கூறியுள்ளனர். விபத்துக்குள்ளான முதல் சேஸியையே மறுபடியும் தயார் செய்வது சிரமமான காரியம் என்பதால், காரின் முக்கியமானப் பகுதியான கார்பன் ஃபைபர் டப் ஒன்றை புதியதாகக் கேட்டிருக்கிறதாம் ஆடி டீம். 

 

( விபத்துக்குள்ளான Audi R18 E-tron Quattro  நம்பர் 1 சேஸி, இந்த வீடியோவில் இருக்கும் கார்தான். போர்ஷே லே மான்ஸ் ரேஸில் மறுபடியும் பங்கேற்பதை, வரவேற்கும் விதத்தில் ஆடி வெளிட்ட வீடியோ இது!) 

  
'Qualifying Practice 1' - முடிவில் போர்ஷே டீமின் இரண்டு 919 ஹைபிரிட் LMP1 ரேஸர்களும் முதல் இரண்டு இடத்தில் உள்ளன. இதில் முதல் இடத்தில் T. Bernhard, M. Webber, B. Hartley ஆகியோர் உள்ளனர். இதில் M. Webber வேறு யாருமல்ல, கடந்த ஆண்டு ஃபார்முலா 1-ல் இருந்து வெளியேறினாரே ,அதே மார்க் வெப்பர்தான். இவர்களுடைய சராசரி வேகம் மணிக்கு 241.5 கிமீ.  டொயோட்டாவின்  TS 040 - Hybrid ரேஸர்கள் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளன. ஆடி டீமின் கார்கள் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளன. 
 
 
14-ம் தேதி மாலையில் 2014 லே மான்ஸ் ரேஸ் துவங்கி அடுத்த நாள் மாலை முடிவடையும். 16-ஆண்டுகள் கழித்து களமிறங்கியிருக்கும் போர்ஷே, ஜெயிக்கப்போகிறதா, தொடர்ந்து வெற்றிகளைக் குவித்துவரும் ஆடி ஜெயிக்கப்போகிறதா அல்லது சர்ப்ரைஸ் வெற்றியை டொயொட்டா பெறப்போகிறதா? 
TAGS :   Audi R18,2014 Le Mans, porsche, motor vikatan