இது... வேற மாதிரி! - இசுஸூ D-MAX ரிவியூ
Posted Date : 15:16 (12/06/2014)
Last Updated : 15:16 (12/06/2014)

 


ட்டோமொபைல் மார்க்கெட்டில், தீண்டத்தகாதது போலப் பார்க்கப்பட்டவை, பிக்-அப் ட்ரக் வாகனங்கள். ஆனால், இப்போது கார், பைக் மார்க்கெட் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில், வளர்ச்சிப் பாதையில் முதல் இடத்தில் இருப்பது பிக்-அப் ட்ரக்குகள்தான். தற்போது ஆண்டுக்கு 2 லட்சம் வாகனங்கள் விற்பனையாகும் நிலையில், 2023-ம் ஆண்டுக்குள் பிக்-அப் ட்ரக் விற்பனை 8 லட்சமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. அதனால், இப்போது பிக்-அப் ட்ரக் மார்க்கெட்டுக்குள் சர்வதேச நிறுவனங்களும் வர ஆரம்பித்திருக்கின்றன.

இதுவரை மஹிந்திரா, டாடா மட்டுமே இந்த செக்மென்ட்டில் தாதாக்களாக இருந்த நிலையில், இப்போது முதன்முறையாக ஜப்பானின் இசுஸ¨ நிறுவனம் களத்தில் இறங்குகிறது. தமிழக - ஆந்திர எல்லையில் தொழிற்சாலை அமைத்துவரும் இசுஸ¨ மோட்டார்ஸ், முதல்கட்டமாக சென்னை, திருவள்ளூரில் உள்ள இந்துஸ்தான் மோட்டார்ஸ் தொழிற்சாலையில் எம்யு-7 காரை அசெம்பிள் செய்து விற்பனை செய்கிறது. அடுத்த கட்டமாக, பிக்-அப் டரக்குகளில் சர்வதேச லீடரான இசுஸ¨, தனது D-MAX பிக்-அப் ட்ரக்கை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறது.

இசுஸ¨வின் புதிய பிக்-அப் ட்ரக்கான டி-மேக்ஸை 'வாப்கோ’ டெஸ்ட் டிராக்கில் டெஸ்ட் செய்தோம். டி-மேக்ஸை கமர்ஷியல் மற்றும் பர்சனல் என இரண்டு வகையான வாடிக்கையாளர்களையும் கவரும் வாகனமாக பொசிஷன் செய்கிறது இசுஸ¨. டி-மேக்ஸில் மூன்று வேரியன்ட்டுகள் உள்ள நிலையில், நம்மை அதிகம் கவர்ந்தது 'ஆர்ச்டு டெக்’ எனப்படும் ஸ்டைலான வேரியன்ட்தான்.

டிஸைன்

முன் பக்கத்தில் இருந்து பார்க்கும்போது, ஸ்டைலான எஸ்யுவி போலவே இருப்பது டி-மேக்ஸின் பலம். குரோம் க்ரில் மற்றும் குரோம் டிஸைன் கண்ணாடிகள், பாடி கலர் பம்ப்பர் என முன் பக்கம் கவர்கிறது. ஆனால், இது டாடா ஸெனான் அளவுக்கு மிரட்டலான முன் பக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. பிக்-அப் ட்ரக் உரிமையாளர்களை மனதில் வைத்து இந்த காரை விற்பனைக்குக் கொண்டுவந்திருப்பதாக இசுஸ¨ சொல்லும் நிலையில் அலாய் வீல், 4 வீல் டிரைவ் உள்ளிட்ட கவர்ந்திழுக்கும் அம்சங்கள் இதில் இல்லை.

ஸ்பேஸ் கேப் என்ற பெயரில், முன்பக்க இருக்கைகளுக்குப் பின்னால் சின்ன பைகள் உள்ளிட்டப் பொருட்களை வைத்துக்கொள்ள இடம் கொடுக்கப் பட்டுள்ளது. இசுஸ¨வின் எம்யு-7 காரின் பேஸிக் டேஷ்போர்டை அப்படியே இதில் மாற்றிவிட்டார்கள். அதனால், தரத்தில் இது டாடா, மஹிந்திரா உள்ளிட்ட போட்டியாளர்களின் வாகனங்களைவிட பல மடங்கு உயர்ந்திருக்கிறது.

 

சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை, ஆர்ச்டு டெக் வேரியன்ட்டில் பவர் விண்டோ, சென்ட்ரல் லாக்கிங், டில்ட் அட்ஜஸ்ட் பவர் ஸ்டீயரிங், ஏ.சி உள்ளிட்ட முக்கிய வசதிகள் அனைத்தும் உள்ளன. ஆனால், ஏபிஎஸ் பிரேக்ஸ் இல்லை. சீட்டிங் பொசிஷன் மிகவும் சிறப்பாக உள்ளது. டிரைவர் சீட்டில் உட்கார்ந்தால், சாலை முழுவதுமாகத் தெரிகிறது.

இன்ஜின்

போட்டி கார்களைவிட, பல மடங்கு சக்தி வாய்ந்த இன்ஜினுடன் களம் இறங்கியிருக்கிறது இசுஸ¨ டி-மேக்ஸ். இதன் 2.5 லிட்டர் டீசல் இன்ஜின், அதிகபட்சமாக 134 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. 2,850 கிலோ எடை தாங்கும் இந்த பிக்-அப் ட்ரக், 3,600 ஆர்பிஎம்-ல் அதிகபட்சமாக 29.97kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது.

டீசல் இன்ஜினுக்கே உரிய வகையில் அதிக சத்தத்துடன் ஆட்டத்தைத் துவக்கும் டி-மேக்ஸ், வேகம் போகப் போக சத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. அதேபோல, டீசல் இன்ஜின் என்பதை உறுதி செய்யும் வகையில், 2,000 ஆர்பிஎம் வரை டர்போ லேக் இருக்கிறது. ஆனால், டிராஃபிக் நெருக்கடிகளுக்குள் வேகமாகப் பயணிக்க ஏதுவாக, முதல் இரண்டு கியர்களும் உடனுக்குடன் ஷிஃப்ட் செய்யும் வகையில் செட் செய்யப்பட்டிருக்கிறது.

வாப்கோ டெஸ்ட் டிராக்கில், அதிகபட்சமாக 175 கிமீ வேகத்தில் பயணித்தோம். அதிக வேகத்தில் பயணிக்கிறோம் என்ற உணர்வே ஏற்படவில்லை.

டி-மேக்ஸ், அராய் சான்றிதழின்படி லிட்டருக்கு 13.26 கி.மீ மைலேஜ் தரும் என்கிறது இசுஸ¨. இதன்படி 76 லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த டேங்க்கை, ஒருமுறை நிரப்பினால், 1,008 கி.மீ வரை பயணிக்கலாம்.

 

ஓட்டுதல் மற்றும் கையாளுமை

எல்லா பிக்-அப் ட்ரக்குகளைப் போலவே டி-மேக்ஸிலும் பின் பக்கம் லீஃப் ஸ்பிரிங் சஸ்பென்ஷன் தான் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், பின்னால் பொருட்கள் இல்லாதபோது, சின்னச் சின்ன மேடு பள்ளங்களிலும் துள்ளிக் குதிக்கிறது. இந்த வகையான வாகனங்களில் ஸ்டெபிளிட்டி சிறப்பாக இருக்காது. ஆனால், இதற்கு டி-மேக்ஸ் விதிவிலக்கு. அதிக வேகத்தில் செல்லும்போதும் ஸ்டெபிளிட்டி மிகவும் சிறப்பாக இருப்பதுதான், டி-மேக்ஸின் யுஎஸ்பி.

கையாளுமையைப் பொருத்தவரை காரை ஓட்டுவது போன்று வளைத்துத் திருப்பி ஓட்டுவதற்கு ஈஸியாக இருக்கிறது டி-மேக்ஸ்.

 

முதல் தீர்ப்பு

டி-மேக்ஸ் மூலம் பர்சனல் வாடிக்கையாளர்களையும், கமர்ஷியல் வாடிக்கையாளர்களையும் கவர மெனக்கெடுகிறது இசுஸ¨. ஸ்டைல் மற்றும் பவர்ஃபுல் இன்ஜின், பெர்ஃபாமென்ஸ் ஆகியவை பர்சனல் வாடிக்கையாளர்களைக் கவர உதவும். ஆனால் அலாய் வீல், 4 வீல் டிரைவ் ஆப்ஷன் இருந்திருந்தால், இந்த செக்மென்ட்டின் யுனிக் வாகனமாக, தனி அடையாளத்துடன் இருக்கும் டி-மேக்ஸ்.

டி-மேக்ஸ் தனியார் வாகன வாடிக்கையாளர்களை ஈர்த்தாலும், இதை ஓட்ட கமர்ஷியல் லைசென்ஸ் தேவை என்பதோடு, இதை கமர்ஷியல் வாகனமாகத்தான் பதிவு செய்ய வேண்டும்.

பிக்-அப் ட்ரக் மார்க்கெட்டில் முதல் முறையாக பவர்ஃபுல் இன்ஜினோடு, பில்டு குவாலிட்டியிலும் சிறந்த வாகனமாக முதல் இடத்துக்கு முன்னேறுகிறது டி-மேக்ஸ்!

TAGS :   Isuzu D-Max review - Motor Vikatan