கோவையில்தான் தமிழகத்தில் முதன் முதலாக புல்லட் பைக்கின் பெட்ரோல் இன்ஜினுக்குப் பதில், டீசல் இன்ஜினைப் பொருத்தி, வெற்றிகரமாக ஓட்டிக் காட்டினார்கள். அதன் பின்புதான் விழித்துக்கொண்ட ராயல் என்ஃபீல்டு நிறுவனம், தானே டீசல் இன்ஜினைப் பொருத்தி விற்பனை செய்தது. 

இப்போது ராயல் என்ஃபீல்டு நிறுவனம் டீசல் புல்லட் விற்பனையை நிறுத்தி விட்டாலும், கோவையில் அந்த வேலை நிற்கவில்லை. இன்னும் தமிழக சாலைகளில் டீசல் புல்லட்டுகளின் உறுமல் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

புல்லட் பைக்குகளுக்கு புதிய டீசல் இன்ஜின் பொருத்துவது மட்டுமல்லாமல், அதை சர்வீஸ் செய்வதிலும் வாடிக்கையாளர்களின் நற்பெயரைப் பெற்றவராக இருக்கிறார் புல்லட் மாணிக்கம். கோவை சித்தாபுதூரில் இருக்கும் இவரது வொர்க் ஷாப், பழைய மற்றும் புதிய புல்லட்டுகளால் நிரம்பிக் கிடக்கிறது.

அவரிடம் பேசியபோது, 'நான் மூணாவது வகுப்போடு படிப்பை விட்டவன். பத்து வயசுல இருந்தே வொர்க் ஷாப்தான் எனக்குப் பாடம் கத்துக் கொடுத்த பள்ளி. அப்போ கோயம்புத்தூருல புல்லட் சர்வீஸ் செய்றதுல மிகவும் பிரபலமா இருந்த சம்பத் கிட்டதான் நான் வேலை பழகினேன். இப்பவும் என்னைத் தேடி நிறைய கஸ்டமர்கள் வர்றாங்கன்னா அதுக்குக் காரணம், என்னோட முதலாளி சம்பத்தான். பெட்ரோல் புல்லட்டுல இருக்குற இன்ஜினை இறக்கிட்டு, டீசல் இன்ஜின் மாட்டுறதுன்னு பரபரப்பா இருந்த காலம். நானும் என்னோட முதலாளியும் மாசத்துக்கு நாற்பது இன்ஜின் வரைக்கும் மாத்தி இருக்கோம்.

புல்லட்டோட ஒவ்வொரு விஷயமும் அத்துப்படியானது அப்படித்தான். இனிமே என்னோட வாழ்க்கை இந்த பைக்கோடதான்னு செய்தேன். பதினைஞ்சு வருஷம் அவர்கிட்ட இருந்தேன். பிறகுதான் தனியா வொர்க் ஷாப் ஆரம்பிச்சேன். என்கிட்டயும் டீசல் இன்ஜின் மாத்துற வேலை வர ஆரம்பிச்சது. அப்போ கோயம்புத்தூரச் சுத்தி இருக்குற விவசாயிகளோட வண்டிங்க எல்லாம் வர ஆரம்பிச்சு, ரோட்டுல பார்க்கிற பைக்கெல்லாம் டீசல் பைக்கா திரிஞ்சது.

வெறுமனே அந்த வேலை மட்டும் செய்யாம கஸ்டமர் கேட்குற விஷயங்களை ரீ-டிசைன் செய்றது, பைக்குல இருக்குற வேற விஷயங்கள்ல வர்ற பிரச்னைகள சரி செய்றதுன்னு செய்ய ஆரம்பிச்சேன்.

டீசல் இன்ஜினைப் பொறுத்தவரைக்கும் பெட்ரோல் இன்ஜினைவிட செலவு குறைவு. நல்ல மைலேஜ் கிடைக்கும். பெர்ஃபாமென்ஸுலயும் குறை இருக்காது. ரொம்ப தூரம் போகணும்னா தாராளமா போகலாம். ஆனா, கொஞ்சம் வைப்ரேஷனும், புகையும்தான் பிரச்னையே! புகையைச் சரியா பராமரிச்சா கட்டுப்படுத்திடலாம். பராமரிக்கிற செலவும் பெட்ரோல் இன்ஜின் அளவுக்குத்தான் இருக்கும்.

ராயல் என்பீஃல்டு கம்பெனி  டீசல் இன்ஜின் புல்லட் கொண்டு வந்தாங்க. அதுக்கு முன்னாடியே 1992 வாக்குல எங்கள மாதிரி மெக்கானிக்குங்க வந்து, ஒரு வாரம் முழுக்க வொர்க் ஷாப்புல உட்கார்ந்து கஸ்டமர்கள்கிட்ட சர்வே எடுத்தாங்க. எனக்கு அப்போ டீலர் மூலமா ராயல் என்பீஃல்டு, கம்பெனியில வேலை செய்யுற வாய்ப்பு கிடைச்சது. ஆனா, சொந்தமாக வொர்க் ஷாப் வெச்சிருந்ததால வேண்டாம்னு சொல்லிட்டேன்.

இப்பவும் டீசல் இன்ஜின் மாட்டுங்கன்னு தேடி வர்ற கஸ்டமர் இருக்காங்க. அவங்க பட்ஜெட்டுக்கு ஏற்ற மாதிரி புதுசு இல்லைன்னா பழைய டீசல் இன்ஜினை வாங்குவோம். புதுசு 25,000 ரூபாய் ஆகுது. பழைசு 10,000 ரூபாய்தான். பைக்குல ஏற்கெனவே இருக்கிற பெட்ரோல் இன்ஜினைக் கழற்றிட்டு, டீசல் இன்ஜின் வைக்க ஒரு மவுண்டிங் பெட் ஃபிட் பண்ணி டீசல் இன்ஜினை மாட்டிடுவோம். அவ்வளவுதான்.

புல்லட்டுல மட்டும்தான் இந்த மாதிரி சாத்தியம். ஏன்னா, இதுல மட்டும்தான் கியர் பாக்ஸ், கிளட்ச் எல்லாம் இன்ஜினை விட்டு தனியா இருக்கு. இப்பொ வர்ற புது புல்லட்டுல சாத்தியம் இல்லை.!' என்று முடித்தார் புல்லட் மாணிக்கம்!

(மோட்டார் விகடன் -  ஜனவரி 2013 இதழில் இருந்து)