எங்கே படிக்கலாம்?
Posted Date : 15:58 (13/06/2014)
Last Updated : 15:59 (13/06/2014)

 ''ட்டோமொபைல் துறையில் சாதிக்கணும்னு துடிப்பு இருக்கு. ’ப்ளஸ் டூ’வில் நல்ல மார்க் எடுத்து இருக்கேன். ஆனா, எந்த காலேஜை செலக்ட் செய்யறதுன்னுதான் ஒரே குழப்பமா இருக்கு!' எனத் தவிக்கும் மாணவரா நீங்கள்? இதோ, உங்களுக்காகவே  ஆட்டோமொபைல் துறையில் என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? நுழைவுத் தேர்வு முதல் சர்ட்டிஃபிகேட் கோர்ஸ் வரை அனைத்துத் தகவல்களையும் விரிவாகக் கூறுகிறார் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் டிசைன் பிரிவுத் தலைவர் க.சத்தியசீலன். 

''ஆட்டோமொபைல் துறைதான் எதிர்காலம் என்று நம்பும் மாணவர்களுக்கு இந்தியா முழுவதும் அதற்கான வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.  'எங்கே தட்டினால், எந்தக் கதவு திறக்கும்’ என்பதுதான் பலருக்குப் புரியாத புதிர்.  

இந்தப் புதிரை அவிழ்க்க உதவும் முதல் சாவி என்ன தெரியுமா? சிறந்த கல்லூரியில், அதிக வேலை வாய்ப்பு உள்ள படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படித்தால், ஆட்டோமொபைல் துறையில் விரும்பும் வேலையை நீங்களே தேர்ந்தெடுக்கலாம். ஆட்டோமொபைல் சார்ந்த கல்வி பயில, நம் நாட்டிலும், வெளிநாட்டிலும் இருக்கும் முக்கியமான கல்லூரிகளைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

IIT (இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆஃப் டெக்னாலஜி)

சென்னை, மும்பை, டெல்லி, காரக்பூர், ரூர்கி உட்பட பல‌ இடங்களில் ஐ.ஐ.டி இருக்கிறது. ஆட்டோமொபைல் படிப்புக்கு ஐ.ஐ.டி சிறப்பான கல்வி நிறுவனம். இங்கு படிப்பதற்கு நுழைவுத் தேர்வு அவசியம். JEE Main. JEE தேர்வு எழுதி, அதில் வாங்கும் மதிப்பெண் அடிப்படையில் அட்மிஷன் கிடைக்கும். JEE தேர்வில் வெற்றி பெற முடியாத மாணவர்களுக்காக Preparatary course  ஓர் ஆண்டு காலம் நடத்தப்படுகிறது. இந்த கோர்ஸும் படிக்கலாம். தொழில்நுட்பம் சம்பந்தமான அத்தனை படிப்புகளுக்கும் மிகச் சிறந்த கல்வி நிறுவனம் ஐ.ஐ.டி.

NIT (என்.ஐ.டி - நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி)

என்.ஐ.டியில் பயிற்றுவிக்கப்படும் ஆட்டோமொபைல் துறை சார்ந்த படிப்புகளுக்கும் நல்ல மதிப்பு உண்டு. JEE Main நுழைவுத் தேர்வில் நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றால், இந்தியாவில் உள்ள எந்த என்.ஐ.டியிலும் படிக்கலாம். மாணவர்கள் விரும்பும் துறை அவர்கள் கேட்ட இடங்களில் கிடைக்கவில்லை என்றாலும்,  இந்தியாவில் உள்ள ஏதாவது ஒரு என்.ஐ.ஐ.டியில் அவர்கள் விரும்பிய துறை கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.

VIT (வேலூர் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி) 

தமிழ்நாட்டில் முன்னணியில் இருக்கும் தனியார் கல்லூரிகளில் இதுவும் ஒன்று. இங்கு திறமையாக படிக்கக்கூடிய மாணவர்களுக்கு ‘Star program’என்ற சிறப்புத் திட்டம் இருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ப்ளஸ் டூவில் அரசுப் பள்ளிகளில் படித்து, முதலாவதாக வரும் மாணவர்களுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் இலவசமாக சீட் கொடுக்கிறர்கள். அதேபோல, மாவட்ட வாரியாக முதல் 10 ரேங்குக்குள் எடுக்கும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கும் இந்தத் திட்டத்தை விரிவுப்படுத்தி நடத்துகிறார்கள்.

இந்த மாணவர்களுக்கு தங்கும் வசதி, உணவு போன்ற அனைத்தும் இலவசம். மேற்கண்ட தகுதி கொண்ட மாணவர்கள், கல்லூரி நிர்வாகத்திடம் மார்க் சீட்டுடன் தொடர்புகொண்டால் போதும். அட்மிஷன் உறுதி. ஆட்டோமொபைல் படிப்புக்கும் வி.ஐ.டி சரியான சாய்ஸ். எல்லாவிதமான தொழில்நுட்ப வசதிகளும் இங்கு இருக்கின்றன.

NID (நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிசைன்)

இது இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் இருக்கிறது. ப்ளஸ் டூ மாணவர்களுக்கு நான்கரை ஆண்டுகள் டிப்ளமோ படிப்பும், டிகிரி முடித்தவர்களுக்கு பி.ஜி டிப்ளமோவும் பயிற்றுவிக்கப்படுகிறது. இன்டஸ்ட்ரியல் டிசைன், கம்யூனிகேஷன் டிசைன், டெக்ஸ்டைல் டிசைன் என பல பிரிவுகளில் இங்கு டிப்ளமோ படிப்பு உண்டு. இறுதியாண்டு படிக்கும்போதே அவர்கள் விரும்பும் நிறுவனத்தில் இன்டென்ஷிப்பில் பணி புரியலாம்.

NTTF (நெட்டூர் டெக்னிக்கல் டிரெயினிங் ஃபவுண்டேசன்)

இங்கே, புத்தகப் புழுவாக வெறும் தியரி மட்டும் சொல்லித்தராமல், கல்லூரியுடன் இணைந்த தொழிற்சாலையில் பயிற்சியும் அளிக்கின்றனர். ஆட்டோமொபைல் பற்றி அத்தனை விஷயங்களையும் அக்குவேர் - ஆணி வேராகக் கற்றுக்கொடுப்பதால், படித்து முடித்து வெளியே வரும் முன்னரே, கொக்கு மீன் பிடிப்பதுபோல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மாணவர்களை அள்ளிக்கொண்டுவிடுகின்றன. இந்தியா முழுவதும் 19 மையங்களில் செயல்படும் இந்த நிறுவனம், தமிழகத்தில் வேலூர், தூத்துக்குடி மற்றும் கோவையில் செயல்படுகிறது. இதனைப் பற்றிய முழு விபரம் www.nttftrg.comஎன்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

டிப்ளமா, போஸ்ட் டிப்ளமோ, பி.ஜி டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகளும், குறுகிய காலப் படிப்புகளும், தொலை தூரப் படிப்புகளும்கூட இங்கே உள்ளன. பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கான படிப்புகளும்கூட  இங்கு உண்டு. பள்ளி, கல்லூரித் தேர்வு மதிப்பெண்களுடன் NTTF நடத்தும் தனி நுழைவுத் தேர்விலும் தேர்ச்சியடைய வேண்டும்.

(KANGAN INSTITUTE)

கங்கன் இன்ஸ்டியூட்

வெளிநாடுகளில் சென்று படிக்க விரும்பும் மாணவர்கள், ஆஸ்திரேலியாவில் மெல்பர்ன் நகரில் உள்ள இந்த இன்ஸ்டியூட்டைத் தேர்ந்து எடுக்கலாம். இங்கு ஆட்டோ மொபைல் டிசைன் உட்பட அனைத்து விதமான கோர்ஸ்களும் இருக்கின்றன. எழுத்து தேர்வு மிக மிக குறைவு. முழுக்க முழுக்க செய்முறைப் பயிற்சிதான். பஸ் மற்றும் டிரக் பற்றிய படிப்பு. அதேபோல வாகனங்களில் உள்ள வொயரிங் பற்றிய படிப்பும் இருக்கிறது. இந்த இரண்டு கோர்ஸுகளுமே இரண்டு ஆண்டு படிப்புகள். படித்து  முடித்தால்,  வேலையும் 100 சதவிகிதம் உறுதி. அதேபோல், இங்கு படிக்க 10, 12 படித்து இருந்தாலே போதுமானது. மேலும் தகவல்களுக்கு kangan.edu.auஇணைதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

ஆல் தி பெஸ்ட்!''

(மோட்டார் விகடன் - ஜூன் 2013 இதழில் இருந்து)

TAGS :   Automobile engineering tamil, vikatan