மாற்றுத் திறனாளிகள் லைசென்ஸ் வாங்க என்ன செய்ய வேண்டும்?
Posted Date : 17:44 (16/06/2014)
Last Updated : 17:44 (16/06/2014)

 

 

மாற்றுத் திறனாளிகள் வாகனம் ஓட்ட லைசென்ஸ் வாங்க முடியுமா?’ மோட்டார் விகடனுக்கு அடிக்கடி வரும் இந்தக் கேள்வியை சென்னை, கே.கே.நகரில் இருக்கும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் முன்பு வைத்தோம். அதிகாரிகள் கொடுத்த பதில் இங்கே:

 ''மாற்றுத் திறனாளி முதலில் அரசு மருத்துவரிடம் மாற்றுத் திறனாளிக்கான உறுதிச் சான்றிதழ் பெற்று வர வேண்டும். சான்றிதழில், அவர் எத்தனை சதவிகிதம் குறைபாடுகள் கொண்டவர் என்பது கட்டாயம் இருக்க வேண்டும்.

மாற்றுத் திறனாளி ஆனவர், நாற்பது சதவிகிதத்துக்கும் குறைவாக உள்ளார் என்றால், அரசு விதிப்படி போக்குவரத்துத் துறையில் மாற்றுத் திறனாளியாக கணக்கில் கொண்டுவரப்பட மாட்டார். மாற்றுத்திறனாளிகளுக்கு போக்குவரத்துத் துறையில் கிடைக்கும் எந்தச் சலுகையும் இவர்களுக்குக் கிடைக்காது!

நாற்பது சதவிகிதத்துக்குக் கீழ் மாற்றுத் திறனாளியாக இருப்பவருக்கும் ஓட்டுனர் உரிமம் வழங்குவதில் சில விதிகள் உண்டு. முதலில், அவர் வாகனத்தை எங்கள் முன்பு ஓட்டிக் காண்பிக்க வேண்டும்.

சிக்னல் அல்லது வாகனத்தை நிறுத்த வேண்டி வந்தால், அவரால் கால் ஊன்றி பேலன்ஸ் செய்து நிற்க முடிகிறதா? வாகனத்தின் எடையை அவரால் தாங்கிக் கொள்ள முடிகிறதா? என்பதற்காகத்தான் இந்த டெஸ்ட்டுகள். இந்த டெஸ்டுகளில் பாஸ் ஆன பின்புதான் பழகுநர் உரிமம் வழங்கப்படும். இந்த விதிமுறைகள் நான்கு சக்கர வாகனங்களுக்கும் பொருந்தும்.

நாற்பது சதவிகிதத்துக்கு மேல் குறைபாடுகள் உள்ள மாற்றுத் திறனாளிகள், இரண்டு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனம் ஓட்ட விரும்பினால், அராய் (ARAI) அனுமதி வாங்கிய நிறுவனங்களில், அவர்கள் சுலபமாக வாகனம் ஓட்டுவதற்கு ஏற்றது போல எளிமையாக மாற்றங்கள் செய்து கொண்டுவர வேண்டும். அப்படி மாற்றி அமைத்த வாகனங்களில் கூடுதலாக ஏதாவது பாகம் அவர்கள் வசதிக்காகச் சேர்த்து இருக்கலாமே தவிர, வாகனத்தில் உள்ள எந்த பாகத்தையும் நீக்கி இருக்கக் கூடாது!

இரண்டு சக்கர வாகனங்களை ARAI அனுமதி அல்லாமல், வேறு எங்காவது மெக்கானிக் செட்டில் மாற்றி அமைத்து வந்தால், கண்டிப்பாக அவர்களுக்கு லைசென்ஸ் வழங்கப்பட மாட்டாது. அராய் அனுமதி வாங்கிய எந்த நிறுவனம் வாகனத்தை மாற்றி அமைத்ததோ அந்த நிறுவனத்திடம் சான்றிதழ் பெற்று வருவதும் அவசியம்!

வாகனம் வாங்கும்போதே மாற்றுத் திறனாளியின் பெயரில் தான் வாங்கி இருக்க வேண்டும். லைசென்ஸ் கொடுக்கும்போதும் வாகனத்தின் எண் குறிப்பிட்டுத் தான் லைசென்ஸ் வழங்கப்படும். அந்த வாகனத்தைத் தவிர, வேறு வாகனத்தை அவர்கள் ஓட்டக் கூடாது.

[மோட்டார் விகடன் - ஜனவரி 2013 இதழில் இருந்து]

 

TAGS :   physically challenged, driving license, tamilnadu