ரீடர்ஸ் ரெவ்யூ: ஹீரோ ஸ்ப்ளெண்டர் iSmart

 ந்தியாவில் அதிகம் விற்கும் பைக்கான ஸ்ப்ளெண்டரில், சில நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்தி, கொஞ்சம் ஸ்டைலாக மாற்றி 'ஸ்ப்ளெண்டர் ஐ-ஸ்மார்ட்’ என்ற பெயரில் புது பைக்கை விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறது ஹீரோ. கிராமத்து வாடிக்கையாளர் ஒருவரும், நகர வாடிக்கையாளர் ஒருவரும், அவரவர் பார்வையில் தங்களது அனுபவம் சொல்கின்றனர்.

ஆனந்தன் // என் சொந்த ஊர் தேனி மாவட்டத்தில் உள்ள புலிக்குத்தி. சின்ன வயதில் இருந்தே வாகனங்கள் மீது மிகுந்த ஆர்வம் அதிகம். இது என்னை டிரைவராகவே மாற்றிவிட்டது. ஆம், நான் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் எட்டு ஆண்டுகளாக டிரைவராகப் பணிபுரிகிறேன். கடந்த மூன்று ஆண்டுகளாக மாருதி ஸ்விஃப்ட் டிசையர் காரை ஓட்டிக் கொண்டு இருக்கிறேன். ஆனாலும் கார், பைக்குகளின் மீதான ஆர்வம் கொஞ்சம்கூட குறையவில்லை. நேரம் கிடைக்கும்போது கார், பைக் ஷோரூம்களுக்குச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளேன். புதிதாக அறிமுகமாகும் வாகனங்கள் பற்றி அப்டேட் செய்துகொள்வதில் எனக்கு அப்படி ஒரு திருப்தி. தொடர்ந்து மோட்டார் விகடன் படிப்பதால், வரவிருக்கும் வாகனங்கள் பற்றியும் தெரிந்துகொள்கிறேன்.

 

 

லோகநாதன் // மதுரை எனக்குச் சொந்த ஊர். பைக் மீது எனக்கு எப்போதும் தனி மரியாதை உண்டு. என் பைக்கை வைத்துத்தான் என்னை மதிப்பிடுவார்கள் என்று நம்புபவன். கவர்ச்சியான பைக்தான் பெரும்பாலும் விரும்புவேன். அதனால், நான் வைத்திருக்கும் பைக் மற்றவர்களுடையதைவிட சிறப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். இதற்கு முன்பு டிவிஎஸ் அப்பாச்சி வைத்திருந்தேன். அது வாங்கக் காரணம், நல்ல ஸ்டைலிஷாக இருந்தது. ஆனால், மைலேஜ் தரவில்லை. ஸ்பேர் பார்ட்ஸ் விலையும் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.  அடுத்ததாக, நல்ல மைலேஜ் தரும் பைக்காகத்தான் வாங்க வேண்டும்; ஸ்டைல் பார்க்கக் கூடாது என்று முடிவெடுத்தேன்.

ஏன் ஐ-ஸ்மார்ட்?

ஆனந்தன் // நான் ஏற்கெனவே ஹோண்டா ஸ்டன்னர் பைக் வைத்திருந்தேன். நல்ல பைக் என்றாலும், எனக்கு அதில் சில அசௌகரியங்கள் இருந்தன. பில்லியன் சீட் உயரம் அதிகம். அதனால், வீட்டில் இருப்பவர்களை அழைத்துச் செல்வதில் சங்கடம் இருந்தது. மேலும், நான்கு ஆண்டுகள் அந்த பைக்கைப் பயன்படுத்தி விட்டதால், வேறு பைக்குக்கு மாறலாம் என நினைத்துக் கொண்டிருந்தேன். கடந்த ஜனவரியில் கோவை ஷோரூம்களில் வலம் வந்தபோது, ஹீரோ ஷோரூமில் ஐ-ஸ்மார்ட் பைக் இருந்தது. பார்க்க நன்றாகவும், மனத்துக்குப் பிடித்தமானதாகவும் இருந்தது. அந்த பைக் பற்றி விசாரித்தேன். அடுத்து, இணையதளங்களில் அந்த பைக்கின் கூடுதல் விபரங்களையும் ஐ-3எஸ் (i3s)  தொழில்நுட்பம் பற்றியும் தெரிந்துகொண்டேன். ஸ்ப்ளெண்டர் பைக் மிக நம்பகமான பைக் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அதில், நவீன தொழில்நுட்பமும் சேர்ந்திருந்ததால், இன்னும் சிறப்பாகத்தான் இருக்கும் என நினைத்தேன். எனவே, ஸ்ப்ளெண்டர் ஐ-ஸ்மார்ட் பைக் வாங்கிவிடலாம் என முடிவுசெய்தேன். அடுத்து, எனது சொந்த ஊரான தேனியில் உள்ள ஹீரோ டீலரான அருண் மோட்டார்ஸில், ஐ-ஸ்மார்ட் குறித்து விசாரித்தேன். இன்னும் ஒரு மாதத்தில் வந்துவிடும் என்று சொன்னார்கள். பிப்ரவரியில் வந்ததுமே முதலில் புக் செய்து, பைக்கை டெலிவரி எடுத்தேன்.

லோகநாதன் // புத்தாண்டில் புது பைக் வாங்குவது என்ற எண்ணத்தில், கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்தே புதிதாக வரவிருக்கும் பைக் மாடல்களைத் தேட ஆரம்பித்தேன். அப்போதுதான் மதுரை சந்தியா மோட்டார்ஸில் பணியாற்றும் நண்பர் மூலமாக, ஐ-ஸ்மார்ட் பைக் பற்றித் தெரியவந்தது. ஐ-ஸ்மார்ட் என்ற பெயரே என்னை மயக்கியது. நேரில் சென்று பைக்கைப் பார்த்து அதன் முழு விபரங்களையும் தெரிந்துகொண்டேன். அன்றைக்கே அந்த பைக்கை வீட்டுக்குக் கொண்டுவந்துவிட வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், நான் வாங்கும் தேதியும் ரைமிங்காக இருக்கட்டுமே என, பொங்கல் 14.1.2014 அன்று பைக்கை டெலிவரி எடுத்தேன். புது பைக் கைக்கு வந்ததும், பொங்கல் கொண்டாட்டத்தையும் மறந்து, மதுரையைச் சுற்றி வந்தேன்.

பிடித்தது

ஆனந்தன் // இதில் ட்ரிப் மீட்டர் இருப்பதால், எவ்வளவு மைலேஜ் கிடைக்கிறது என்பதைத் துல்லியமாகக் கணக்கிடலாம். கூடுதல் மைலேஜ் அளிப்பதற்காகவே சேர்க்கப்பட்டுள்ள ஐ-3எஸ் தொழில்நுட்பம், சைடு ஸ்டாண்ட் இண்டிகேட்டர் என பட்ஜெட் பைக்கில் பல வசதிகளைக் கொடுத்திருக்கிறது ஹீரோ. இளைஞர்கள் மட்டுமல்லாமல், எல்லா வயதினருக்கும் பயன்படுத்துவதுபோல வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நீண்ட தூரம் பயணித்தாலும் பயணக் களைப்பு இல்லை. தேனி பகுதியில் உள்ள மலைச் சாலை, மேடு பள்ளங்கள் என எல்லாப் பக்கங்களும் பயணம் செய்துவிட்டேன். நான் எதிர்பார்த்தைவிட சிறப்பாகவே பயண அனுபவம் இருக்கிறது. லிட்டருக்கு 66 கி.மீ மைலேஜ் தருகிறது. ட்யூப்லெஸ் டயர், மாடர்ன் கிராஃபிக்ஸ், பெரிய ஃபுட் ரெஸ்ட், ஐடியல் ஸ்டாப்/ஸ்டார்ட் என சிறப்புப் பட்டியல் நீளம். ஐ-ஸ்மார்ட் பார்ப்பதற்கு ஸ்ப்ளெண்டர் என்எக்ஸ்ஜி பைக்போல இருந்தாலும் அதை மறைப்பதுபோல, வெரைட்டியான லைட் கலர்களில் ஐ-ஸ்மார்ட் அழகாக இருக்கிறது.

லோகநாதன் // ஐ-ஸ்மார்ட் ஓட்டும்போது மிக ஸ்மூத்தாக உணரவைக்கிறது. பொதுவாக, நான் நாள் முழுவதும் பைக்கிலேயே சுற்றிக்கொண்டிருப்பதால், எனக்கு முதுகு வலி வரும். இந்த பைக் பயன்படுத்த ஆரம்பித்ததில் இருந்து முதுகு வலியே இல்லை. நகருக்குள் எனக்கு லிட்டருக்கு 65 கி.மீ வரை மைலேஜ் கொடுக்கிறது. புறநகர் என்றால், 70 கி.மீ வரை போகிறது. இந்த பைக்கில் என்னை வெகுவாக ஈர்த்தது, நியூட்ரல் ஆப்ஷன்தான். பைக்கை ஸ்டார்ட் செய்துவிட்டு 30 விநாடிகள் வரை பைக்கை நகர்த்தாமல் இருந்தால், அப்படியே ஆஃப் ஆகிவிடும். பிறகு, ஸ்டார்ட் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. கிளட்ச்சை அழுத்தினாலே, அதுவாகவே ஸ்டார்ட் ஆகிவிடுகிறது. இதனால், பெருமளவு பெட்ரோல் மிச்சம் ஆகிறது. ஸ்ப்ளெண்டர் ஐ-ஸ்மார்ட் பைக்கின் தோற்றம், 'இது 100 சிசி பைக்கா?’ என்று ஆச்சரியம் கொள்ளவைக்கிறது. மீட்டர் கன்ஸோல் கவரும் வண்ணம், கவர்ச்சியாக வடிவமைத்திருக்கிறார்கள். இன்ஜின் கவர் டிஸைன் அருமை.

பிடிக்காதது

ஆனந்தன் // பைக்கின் கலர் ஆப்ஷனில் சிவப்பு, நீலம் ஓகே. ஆனால் இளம்பச்சை, கறுப்பு வண்ணங்கள் அவ்வளவு நன்றாக இல்லை. இன்னும் பெட்டராக இருந்திருக்கலாம். பைக்கின் டேங்க் மிக மெல்லிதாக இருப்பதுபோல இருக்கிறது. டிஸ்க் பிரேக் ஆப்ஷனலாகக்கூட இல்லாதது பெரிய குறைதான். ஹெட் லைட்டை பேட்டரியுடன் நேரடியாக இணைத்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் ஹெட்லைட் வெளிச்சம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மேலும், பில்லியனில் உட்காரும்போதும், இறங்கும்போதும் ஸ்பிளிட் கிராப் ரெயிலில் உடைகள் சிக்கிக் கிழியும் வாய்ப்பு நிறைய இருக்கிறது. அதேபோல், காலையில் பைக்கை ஸ்டார்ட் செய்த பிறகு, இன்ஜின் சூடேறும் வரை பிக்-அப் குறைவாக இருக்கிறது. சூடேறியதும்தான் அசல் முகத்தைக் காட்டுகிறது. என்னைப் பொறுத்தவரை பட்ஜெட் பைக்கில் பெட்டர் பைக், ஐ-ஸ்மார்ட்.

லோகநாதன் // பைக்கின் கிராப் ரெயிலை, மற்ற பைக்குகளைப்போல சிங்கிளாக அமைத்திருக்கலாம். ஸ்பிளிட் செய்திருப்பதால், பில்லியனில் உட்காரும் போதும், இறங்கும்போதும் இடையூறாக இருக்கிறது. பேட்டரி, பெட்ரோல் குறையும் சமயத்தில் நினைவூட்ட இண்டிகேட்டர்கள் இருந்திருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்கும். மற்றபடி, ஸ்டைல் என்னை அவ்வளவாக ஈர்க்கவில்லை. ஸ்டைலில் இன்னும் மாற்றங்கள் செய்திருக்கலாம். ஆனாலும் குறைந்த விலையில் நிறைய சிறப்பம்சங்கள், மைலேஜ் என நிறைவைத் தருகிறது ஐ-ஸ்மார்ட்.

[மோட்டார் விகடன் - மே 2014 இதழில் இருந்து]