அசத்த வரும் அம்சங்கள்!
Posted Date : 16:52 (19/06/2014)
Last Updated : 16:52 (19/06/2014)

ண்டுபிடிப்பு என்றால், இன்னொரு காரைக் கண்டுபிடிப்பது அல்ல. புதிதாக தொழில்நுட்பங்களை உருவாக்குவதுதான். ஏனென்றால், புதிய தொழில்நுட்பங்கள்தான் நிறுவனத்தின் மீதுள்ள மரியாதையை அதிகரிக்கும். மேலும், மற்ற நிறுவனங்களுக்கு முன்பே வெற்றிகரமாக இயங்கும் ஒரு தொழில்நுட்பத்தைத் தயாரித்துவிட்டால், பிறகு எளிதாக கார்களை விற்பனை செய்ய முடியும். உதாரணமாக,  டொயோட்டா நிறுவனத்தின் வெற்றிக்குக் காரணம், அதன் ஹைபிரிட் காரான ’ப்ரையஸ்' என்று சொல்லலாம்.  ’ப்ரையஸ்' போன்ற ஒரு வெற்றிகரமான எலெக்ட்ரிக் காரை தயாரிக்கிறேன் எனச் சொல்லியே... தன் இமேஜையும், கார் விற்பனையையும் கூட்டிக்கொண்டது டொயோட்டா. அதுபோல, பல நிறுவனங்கள் தங்கள் உழைப்பையும் நேரத்தையும் முதலீடு செய்து கண்டுபிடித்துக் கொண்டிருக்கும் சில தொழில்நுட்பங்களையும், வசதிகளையும் கீழே பட்டியலிட்டு இருக்கிறோம். 

3டி டைமென்ஸனல் டிஸ்ப்ளே

 

3டி தொழில்நுட்பத்தை காருக்குள் கொண்டு வரும் முதல் முயற்சிதான் '3டி இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர்.’ 'தின் ஃபிலிம் டிரான்சிஸ்டர்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 'ஜான்சன் கன்ட்ரோல்ஸ்' என்ற நிறுவனமும், கிராஃபிக்ஸ் சிப்புக்குப் பிரபலமாக இருக்கும் NVIDIA நிறுவனமும் இதற்கான வேலைகளில் முழு வீச்சில் இறங்கி இருக்கின்றன. இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 3டியில் இருப்பது எல்லா தகவல்களையும் எளிதாகப் படிக்க முடியும் என்பதோடு, பல தகவல்களை நெருக்கடி இல்லாமல் ஒரே ஒரு சின்னத் திரையில் காண்பித்துவிட முடியும் என்பது, மிகப் பெரிய ப்ளஸ்.

 Augmented Reality Dashboards

 

கார்கள் சாலையில் ஓட ஆரம்பித்த நாளில் இருந்து, விஞ்ஞானிகள் கை வைக்காமல் இருந்த ஒரே இடம் காரின் விண்ட் ஷீல்டுதான். இப்போது அதிலும் பல புதுமைகளைப் புகுத்த இருக்கிறார்கள். ஆக்மென்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, காரின் விண்ட் ஷீல்டிலேயே அனைத்துவிதமான தகவல்களையும் காட்ட முடியும். உதாரணத்துக்கு, நீங்கள் இந்தத் தொழில்நுட்பம் கொண்ட காரை ஓட்டுகிறீர்கள் என்றால், கார் கண்ணாடி வழியாகப் பார்க்கும்போது, முன்னே செல்லும் கார் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது? உங்கள் போனில் அழைப்பு வந்தால், அது யாரிடமிருந்து வருகிறது போன்ற தகவல்களைக் கண்ணாடியிலேயே ஒளிபரப்பும். இப்போது இருக்கும் கார்களில் உள்ள நேவிகேஷன் மேப்பைப் பார்க்க வேண்டும் என்றால், சென்டர் கன்ஸோல் பக்கம் தலையைத் திருப்ப வேண்டும் அல்லது மேப் கன்ஸோல் எங்கு இருக்கிறதோ அங்கு திரும்ப வேண்டும். ஆனால், இந்தத் தொழில்நுட்பம் மூலம், காரின் கண்ணாடியிலேயே வரைபடத்தைக் காட்ட முடியும். நீங்கள் பயணிக்கும் சாலையிலேயே அம்புக்குறிகளை வரைந்திருப்பது போலவும் காட்ட முடியும்.

கொரில்லா கிளாஸ்

 

'கொரில்லா கிளாஸ்’ என்பது தற்போது லேட்டஸ்ட் கேட்ஜெட்டுகளில் பயன்படுத்தப்படும் கண்ணாடித் திரை. பல ஸ்மார்ட் போன்களில் இந்த கிளாஸ்தான் பயன்படுத்தப்படுகிறது. இந்த வகை கண்ணாடி மூலம் காரின் கண்ணாடிகளைத் தயாரிக்க இருக்கிறது 'கார்னிங்’ நிறுவனம். இப்போது காரில் பயன்படுத்தப்படும் விண்ட் ஷீல்டில், இரண்டு கண்ணாடிகளுக்கு நடுவே 'பாலிவினைல் ப்யூட்டிரல்’(Polyvinyl Butyral -PVB) எனும் பாலிமர் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகிறது. இதனால், உடையும் தருணத்தில், கண்ணாடி நொறுங்கித் தெறிக்காது. ஆனால், விசேஷமான முறையில் தயாரிக்கப்பட்ட இந்த கொரில்லா கிளாஸில், ஸ்கிராட்ச்சுகளை ஏற்படுத்த முடியாது. மேலும், இதன் எடையும் குறைவுதான். இதைப் பயன்படுத்துவது மூலம் காரின் எடை பரப்பு அமைப்பைச் சரியாக அமைக்க முடியும். மேலும், வெளிப்புறச் சத்தமும் காருக்குள் குறைவாகக் கேட்கும். விரைவில் இந்தத் தொழில்நுட்பம் கொண்ட கார்கள் விற்பனைக்கு வர இருக்கிறது.

வயர்லெஸ் ரீசார்ஜிங்

 

மின்சாரத்தில் இயங்கும் கார்கள்தான், கார் உலகில் அடுத்த புரட்சியை ஏற்படுத்த இருக்கின்றன. ஏற்கெனவே வெளிநாடுகளில் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையில் இருந்தாலும், அவற்றை சார்ஜ் செய்வதில் பல குளறுபடிகள் உள்ளன. வயர்லெஸ் சார்ஜிங் ஏற்கெனவே பல நிறுவனங்களால் முயற்சி செய்து பார்க்கப்பட்ட ஒரு தொழில்நுட்பம் என்றாலும், முழுமையாக வெற்றி பெறவில்லை. இப்போது, கார்களுக்கு 'மேக்னட்டோ இண்டக்டிவ் சார்ஜிங் பேடு’ மூலம் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனமும், ஆடி நிறுவனமும் பரீட்சார்த்த முறையில் வெற்றிகரமாக வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை சோதனை செய்துள்ளன. இது 90 சதவிகிதம் அதிக திறனுள்ளது என்று ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாடி பேனல் பேட்டரி

 

 

மின்சார கார்களின் மிகப் பெரிய மைனஸ், அதன் பேட்டரி எடை. வால்வோ நிறுவனம், பாடி பேனல்களை பேட்டரியாக மாற்றுவதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறது.'பிரேக் எனர்ஜி ரீ-ஜெனரேஷன்’ மூலம் கிடைக்கும் மின்சாரத்தை பேனல்களில் சேமித்துக்கொள்ளும் வசதி; காரை சார்ஜ் செய்யும்போது மின்சாரத்தை பாடி பேனல்களில் சேமித்துக்கொள்ளும் வசதி ஆகியவை இதில் அடக்கம். இந்த பாடி பேனல்கள் விசேஷமான நானோ மெட்டீரியல்களால் உருவான கார்பன் ஃபைபரால் செய்யப்பட்டவை. இதனால், காரின் எடை குறையும் என்பதோடு, மின்சாரத்தையும் இதில் சேமித்துக் கொள்ளலாம். டொயோட்டா நிறுவனமும் தன் பங்குக்கு, சோலார் சக்தியை காரின் பாடி பேனல்களில் மின்சாரமாகச் சேமிக்க முடியுமா என்று ஆராய்ந்து வருகிறது.

'சைக்கிளிஸ்ட் டிடெக்ஷன் வித் ஃபுல் ஆட்டோ பிரேக்'

 

 

வால்வோ நிறுவனம், 'ஆட்டோமோட்டிவ் பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் முன்னோடி’ என்பதை இன்னொரு புதிய தொழில்நுட்பம் மூலம் உலகுக்குத் தெரிவித்திருக்கிறது. 'சைக்கிளிஸ்ட் டிடெக்ஷன் வித் ஃபுல் ஆட்டோ பிரேக்’ என அழைக்கப்படும்  இந்தத் தொழில்நுட்பம், 2014 முதல் வால்வோவின் கார்களில் பொருத்தப்பட்டு விற்பனைக்கு வர இருக்கிறது. வால்வோவின் இன்னொரு பிரபல பாதுகாப்புத் தொழில்நுட்பமான 'பெடெஸ்ட்ரியன் டிடெக்ஷன் வித் ஃபுல் ஆட்டோ பிரேக்’ உடன் இணைந்து இயங்கும். சாலையில், காருக்கு முன்பு யாராவது சைக்கிள் ஓட்டிச் சென்றால் அவர்கள் ஓட்டும் விதத்தை, தொடர்ந்து கண்காணித்தபடியே இருக்கும் காரின் முன்னே இருக்கும் கேமரா. காரில் இருக்கும் ரேடார், முன்னே செல்லும் சைக்கிளின் வேகத்தை அளந்துகொண்டே வரும். எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென்று சைக்கிள் ஓட்டுபவர் காருக்கு முன்னே வந்தால், கார் தானாகவே முழு பிரேக் அடித்து நின்றுவிடும். இது சைக்கிள்களை மட்டுமல்ல, பைக்குகளையும்கூடக் கண்காணிக்கும்.

அடாப்டிவ் சன்ஷேட்

 

என்னதான் சன் ஷேட் கார்களில் இருந்தாலும், பகலில் சூரிய வெளிச்சம் கண்ணைக் கூசவைக்கும். இதை எப்படித் தடுப்பது என்று யோசித்த ஃபோக்ஸ்வாகன் நிறுவனம், எலெக்ட்ரானிக் ஆன்டி க்ளேர் சிஸ்டத்துடன்கூடிய சன் ஷேட் ஒன்றைத் தயாரித்துள்ளது. காரின் முன் பக்கம் மேல் பகுதியில் இருக்கும் கண்ணாடிக்குள் க்ரிஸ்டல் மேட்ரிக்ஸ் இருக்கும். இதை மின்சாரத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியும். சூரியன் இருக்கும் கோணத்தையும் ஓட்டுபவரின் கண் எதை நோக்கி இருக்கிறது என்பதையும் சென்ஸார்கள் மூலம் தெரிந்துகொள்ளும் கம்ப்யூட்டர் அதற்கேற்றதுபோல் கண்ணாடியை இருட்டாக்கும். இதனால், அந்தக் கோணத்தில் மட்டும் சூரிய ஒளி உள்ளே நுழைய முடியாது. வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளில் ஓட்டினால், அதற்கேற்றதுபோல இந்த 'டார்க் ஸ்பாட்’-டும் (Dark Spot) இடம் மாறிக்கொள்ளும்.

[மோட்டார் விகடன் - ஜூலை 2013 இதழில் இருந்து]

TAGS :   Top, upcoming Technolgies, Automotive Field